சந்தை என்பது லாபம் வந்தால் தாய்ப்பாலையும் விற்கும். தாயையும் விற்கும்!

சந்தை என்பது லாபம் வந்தால் தாய்ப்பாலையும் விற்கும். தாயையும் விற்கும்!

வீன அறிவியலையும், நவீன முதலாளிய சமூக சிக்கல்களையும் பிரித்து புரிந்து கொள்ளாமல் ஒன்றின் சீரழிவை இன்னொன்றின் மீதும், ஒன்றின் சாதனையை இன்னொன்றின் மீதும் ஏற்றி புளகாங்கிதம் அடைந்து கொள்கிறார்கள் சில முற்போக்கு பாவனையாளர்கள்.

செக்கு எண்ணை வணிகமாகி இருக்கிறது என்று கவலைப்படுகிற ஒருவருக்கு நவீன ஆலை எண்ணெயின் மாபெரும் வணிகம் குறித்து எந்த கவலையும் இல்லை. இன்றைய தினத்தில் எண்ணெய் வணிகம் பிரம்மாண்ட ராட்சத தன்மையுடையது என்பதை கவனமாக தவிர்க்கிறார்.

நாட்டுச் சர்க்கரை குறித்து நக்கலடிக்கும் போது வெள்ளைச் சீனியின் பிரம்மாண்ட சந்தை குறித்து மிகவும் கவனமாக கள்ள மவுனம் சாதிக்கிறார். ஒரு காலத்தில் வெள்ளை அரிசியை தின்றவர்கள் இன்று பிரம்மாண்ட மால்களில் சிறுதானியங்களுக்கு மாறியிருக்கிறார்கள். சிறு தானியங்களை தங்கள் உணவாக எடுத்துக் கொண்டவர்கள் பளபளப்பான மல்லிகை பூ போன்ற வெள்ளை அரிசிக்கு வலுக்கட்டாயமாக தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதில் எது நவீன அறிவியல் தன்மை கொண்டது, எது முதலாளியத் தன்மை கொண்டது என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்யாமல், மனம் போன போக்கில் வறட்டுத்தனமான கருத்து கந்தசாமிகளாக இருக்கிறார்கள். தன்னுடைய அறிவின் மீது இவர்களுக்கு இருக்கிற மிகையான கற்பனை இவர்களை இப்படி பேச வைக்கிறது.

முதலாளித்துவத்திற்கு தேவை லாபகரமான விற்பனை சரக்கு. சிறு தானியம்தான் விற்கும் என்றால் விற்கும். வெள்ளை அரிசி விற்கும் என்றால் அதையும் விற்கும். இதில எங்கிருந்து வந்தது நவீன அறிவியல்? முதலாளிய சமூகத்தின் அடிப்படை சந்தை. சந்தைக்கு எது தேவையோ அது நவீனமோ, மரபோ, நவீனமரபோ, பின் நவீனத்துவ மரபோ, மரபு சார்ந்த நவீனமோ அது குறித்து மயிரளவு கூட சந்தை கவலைப்படாது. நவீன தொழில்நுட்பம் சார்ந்த தொழில்களில் இருக்கும் சீரழிவு குறித்து அது என்றாவது கவலைப்படுமா? சந்தையை அறிவியல்பூர்வமாக புரிந்து கொள்ளாமல், வெட்டியா நவீனம் பழமை குறித்து சல்லியடிப்பது ஒரு வகையான தன் அறிவுத் திறமையைக் காட்டிக் கொள்வது, அல்லது தன்முனைப்பு.

சந்தையை ஆய்வு செய்யுங்கள். லாபம் வந்தால் தாய்ப்பாலையும் விற்கும். தாயையும் விற்கும். சந்தைக்கு புனிதங்கள் கிடையாது. மார்க்ஸ் சொல்வதைப் போல சந்தை எல்லா புனித திரைகளையும் கிழித்து எறியும். சந்தைப் பொருளாதாரத்திற்கு தேவை உபரி மதிப்பு அல்லது லாபம். அது சிவன் சிலையையும் விற்கும். லாபம் வந்தால் பெரியார் சிலையையும் விற்கும். உண்மையில் சந்தைக்கு நவீனமும் தெரியாது. மரபும் தெரியாது. விற்பனைச் சரக்குகளுக்கு தேசியம் கிடையாது. நவீனம் கிடையாது. மரபு கிடையாது.

தயாளன் சண்முகா

Related Posts

error: Content is protected !!