நீதி தேவதையின் உறக்கம்: 4.76 கோடி வழக்குகளும், தேய்ந்து போன செருப்புகளும்!
உலகிலேயே மிகப்பெரிய நீதித்துறை அமைப்புகளில் ஒன்று இந்தியா. ஆனால், அதே சமயம் அதிக சுமையால் திணறிக்கொண்டிருக்கும் அமைப்பும் இதுதான். “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று சொல்லப்பட்டாலும், அந்தக் கடமை எப்போது முடியும் என்பதுதான் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய மில்லியன் டாலர் கேள்வி. ஆம் ந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை, ஒரு நாட்டின் மக்கள் தொகையையே மிஞ்சும் அளவுக்கு உயர்ந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. சமீபத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட புள்ளிவிவரங்கள், மாநில ரீதியாக நீதித்துறை எந்தளவுக்கு நெரிசலில் சிக்கியுள்ளது என்பதை அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டியுள்ளன.
மாநிலங்களின் ‘வழக்கு’ சாதனை: முதலிடத்தில் உத்தரப்பிரதேசம்
வழக்குகள் தேங்கிக் கிடப்பதில் மாநிலங்களுக்கு இடையே ஒரு பெரிய போட்டியே நடப்பது போலத் தெரிகிறது. குறிப்பாகக் கீழமை நீதிமன்றங்களில் (Lower Courts) நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையில் பின்வரும் மாநிலங்கள் முன்னிலையில் உள்ளன:

-
உத்தரப்பிரதேசம்: இந்தியாவிலேயே மிக அதிகப்படியாக 1,13,45,328 வழக்குகள் இங்கு நிலுவையில் உள்ளன. ஒரு மாநிலத்தின் வழக்கு எண்ணிக்கை மட்டுமே ஒரு கோடியைத் தாண்டியிருப்பது நீதித்துறையின் பெரும் சுமையைக் காட்டுகிறது.
-
மகாராஷ்டிரா: இரண்டாவது இடத்தில் உள்ள இந்த மாநிலத்தில் 59,26,999 வழக்குகள் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன.
-
மேற்கு வங்கம்: மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்த மாநிலத்தில் 38,35,113 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஏன் இந்த மலைப்பொதி?
இந்த நிலுவை வழக்குகள் வெறும் எண்கள் மட்டுமல்ல; பல லட்சக்கணக்கான சாமானியர்களின் கண்ணீரும், போராட்டமும் ஆகும். இவ்வளவு வழக்குகள் தேங்குவதற்குச் சில கசப்பான பின்னணிகள் உள்ளன:
-
நீதிமன்றங்களின் எண்ணிக்கை: மக்கள் தொகைக்கும், நிலப்பரப்பிற்கும் ஏற்றவாறு போதிய எண்ணிக்கையிலான நீதிமன்றங்கள் இல்லாதது ஒரு பெரும் பின்னடைவு.
-
நீதிபதிகள் காலிப் பணியிடங்கள்: உயர் நீதிமன்றங்கள் முதல் தாலுகா நீதிமன்றங்கள் வரை ஆயிரக்கணக்கான நீதிபதி பணியிடங்கள் இன்னும் நிரப்பப்படாமலேயே உள்ளன. காலியிடங்களை நிரப்பாமல் வழக்குகளைக் குறைப்பது என்பது ஓட்டைப் பாத்திரத்தில் நீர் நிரப்புவதற்குச் சமம்.
-
தொழில்நுட்ப இடைவெளி: ‘டிஜிட்டல் இந்தியா’ பேசினாலும், பல கீழமை நீதிமன்றங்களில் கோப்புகள் இன்னும் தூசு படிந்த காகிதங்களாகவே இருக்கின்றன. கணினிமயமாக்கல் முழுமை பெறாதது விசாரணையின் வேகத்தைத் தடை செய்கிறது.
தப்பிக்குமா நீதித்துறை?
“நீதி தாமதப்படுத்தப்படுவது, நீதி மறுக்கப்படுவதற்குச் சமம்” (Justice delayed is justice denied) என்பது சட்டப் பழமொழி. ஆனால், இந்தியாவில் “நீதி கிடைப்பதற்குள் ஆயுளே முடிந்துவிடும்” என்பதுதான் நிதர்சனமாக இருக்கிறது. இந்த நிலுவை வழக்குகள் மலைபோலக் குவிவதைத் தடுக்க, நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, ‘மக்கள் நீதிமன்றங்கள்’ (Lok Adalats) போன்ற மாற்று வழிமுறைகளை அரசு இன்னும் தீவிரப்படுத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், நீதிமன்றப் படிக்கட்டுகள் தேய்வதைத் தவிர வேறொன்றும் நடக்கப்போவதில்லை. அதே சமயம் உலகிலேயே மிகப்பெரிய நீதித்துறை அமைப்புகளில் ஒன்று இந்தியா. ஆனால், அதே சமயம் அதிக சுமையால் திணறிக்கொண்டிருக்கும் அமைப்பும் இதுதான். “சட்டம் தன் கடமையைச் செய்யும்” என்று சொல்லப்பட்டாலும், அந்தக் கடமை எப்போது முடியும் என்பதுதான் இப்போது இந்தியாவின் மிகப்பெரிய மில்லியன் டாலர் கேள்வி.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


