நான்காம் தூண்: செய்தித்தாள் தினச் சிறப்புக் கட்டுரை!
இந்தியப் பத்திரிகைத் துறையின் பிதாமகன் என்று போற்றப்படும் ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ, இந்தியாவில் முதல் செய்தித்தாளான ‘பெங்கால் கெஜெட்’ (Bengal Gazette) இதழைத் தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் இன்று. 1780-ஆம் ஆண்டு ஜனவரி 29-ல் கல்கத்தாவில் பிறந்த அந்தச் சிறு பொறிதான், இன்று இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஆல்போல் தழைத்து நிற்கிறது.
ஹிக்கீயின் துணிச்சலும் பெங்கால் கெஜெட்டும்
அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கீ, இரண்டு பக்கங்கள் கொண்ட ஒரு வார இதழாகவே பெங்கால் கெஜெட்டைத் தொடங்கினார். “அனைவருக்கும் திறந்திருக்கும், ஆனால் எவருக்கும் அடிபணியாத ஒரு செய்தித்தாள்” என்ற முழக்கத்துடன் அவர் களமிறங்கினார். அரசியல், வர்த்தகம், போர்ச் செய்திகள் மட்டுமின்றி, அன்றைய கிழக்கிந்திய கம்பெனியின் ஊழல்களையும் துணிச்சலாகத் தோலுரித்துக் காட்டினார். அதன் விளைவாக அவர் சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தாலும், இந்தியப் பத்திரிகை சுதந்திரத்திற்கான விதையை அவர் அன்றே விதைத்துவிட்டார்.

இந்தியப் பத்திரிகைகளின் எண்ணிக்கை: ஒரு பிரம்மாண்ட வளர்ச்சி
விடுதலைப் போராட்டக் காலத்தில் பாரதியார், காந்திஜி போன்ற தலைவர்கள் பத்திரிகைகளை ஒரு ஆயுதமாகவே பயன்படுத்தினர். இன்று இந்தியா உலகில் மிக அதிக எண்ணிக்கையிலான செய்தித்தாள்கள் வெளியாகும் நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
-
தற்போது இந்தியாவில் சுமார் 1.45 லட்சத்திற்கும் அதிகமான செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
-
இந்தி மொழிப் பத்திரிகைகள் முதலிடத்திலும், ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிப் பத்திரிகைகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
-
உலக அளவில் செய்தித்தாள் வாசிப்பு குறைந்தாலும், இந்தியாவில் இப்போதும் செய்தித்தாள்களுக்கு என்று ஒரு தனி மரியாதை மற்றும் நம்பகத்தன்மை இருந்து வருகிறது.
மாறிவரும் போக்கு: அச்சு முதல் டிஜிட்டல் வரை
தொழில்நுட்ப வளர்ச்சி பத்திரிகைத் துறையை முற்றிலுமாக மாற்றியமைத்துள்ளது.
-
ஹைப்பர் லோக்கல் செய்திகள்: இப்போது மக்கள் உலகச் செய்திகளை விட, தங்கள் பகுதியில் நடக்கும் சிறிய பிரச்சனைகளுக்குப் பத்திரிகைகள் முக்கியத்துவம் தர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.
-
மின்-இதழ்கள் (E-papers): கையில் பேப்பரைத் தொட்டு வாசிப்பவர்களின் எண்ணிக்கை ஒரு பக்கம் குறையத் தொடங்கினாலும், கைப்பேசியிலேயே ஈ-பேப்பர் வாசிப்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
-
மல்டி-மீடியா உள்ளடக்கம்: வெறும் செய்தியாக மட்டும் தராமல், இன்ஃபோகிராஃபிக்ஸ் (Infographics) மற்றும் வீடியோக்களுடன் செய்திகளை வழங்குவது இன்றைய ட்ரெண்ட் ஆகியுள்ளது.
இன்றைய சூழலில் சந்திக்கும் சவால்கள்
பத்திரிகைத் துறை தற்போது பல நெருக்கடிகளுக்கு இடையேதான் இயங்கி வருகிறது.
-
செய்தித்தாள் காகித விலை உயர்வு: வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நியூஸ் பிரிண்ட் காகிதங்களின் விலை உயர்வு, சிறு மற்றும் நடுத்தரப் பத்திரிகைகளை நிலைகுலையச் செய்துள்ளது.
-
விளம்பர வருவாய் வீழ்ச்சி: பெருநிறுவனங்களின் விளம்பரங்கள் இப்போது அச்சு ஊடகங்களில் இருந்து கூகுள் மற்றும் ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்குப் பெரிய அளவில் திசைமாறிவிட்டன.
-
நம்பகத்தன்மைப் போராட்டம்: வாட்ஸ்அப் பல்கலைக்கழகங்களில் பரவும் ‘ஃபேக் நியூஸ்’ (Fake News) எனப்படும் போலிச் செய்திகளுக்கு மத்தியில், உண்மையான செய்திகளைச் சரிபார்த்துத் தருவது பத்திரிகையாளர்களுக்குப் பெரும் சவாலாக உள்ளது.
நோக்கம்
செய்தித்தாள்கள் வெறும் காகிதங்கள் அல்ல; அவை ஒரு சமூகத்தின் வரலாறு. எத்தனை டிஜிட்டல் ஊடகங்கள் வந்தாலும், காலையில் சூடான தேநீருடன் கையில் செய்தித்தாளோடு அமரும் அந்த அனுபவத்தை எதுவும் ஈடு செய்ய முடியாது. பத்திரிகையாளர்கள் சந்திக்கும் அச்சுறுத்தல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி, ‘பெங்கால் கெஜெட்’ காட்டிய அந்த அறச் சீற்றமும் நேர்மையும் தொடர வேண்டும் என்பதே இன்றைய தினத்தின் நோக்கம்.
இந்த இந்திய செய்தித்தாள் தினத்தில், உண்மையை உரக்கச் சொல்லும் அனைத்துச் செய்தித்துறையினருக்கும் ‘ஆந்தை ரிப்போர்ட்டர்’ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது!
நிலவளம் ரெங்கராஜன்


