ஒரு சகாப்தம் துவங்கிய நாள்… ஒரு ‘கலாச்சார’த்தின் உதயமான தினமும் கூட!

ஒரு சகாப்தம் துவங்கிய நாள்… ஒரு ‘கலாச்சார’த்தின் உதயமான தினமும் கூட!

ன்று ஜூலை 24, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தினம். சரியாக 1991 ஆம் ஆண்டு இதே நாளில்தான், தமிழகத்தின் இரும்புப் பெண்மணி, புரட்சித் தலைவி மாண்புமிகு ஜெயலலிதா அவர்கள் முதன்முதலாக முதலமைச்சராகப் பதவியேற்று, புதிய சகாப்தத்திற்கு அடித்தளமிட்டார்.

அக்காலகட்டத்தில், மறைந்த மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்களின் மீதான அனுதாப அலை உச்சத்தில் இருக்க, காங்கிரஸ் கட்சியுடன் கைகோர்த்த அ.தி.மு.க., தமிழக சட்டமன்றத் தேர்தலில் சட்டமன்றத்தில் உள்ள 234 இடங்களில் 224   தொகுதிகளில் அமோக வெற்றிபெற்று சரித்திர சாதனை படைத்தது. இந்த பிரம்மாண்ட வெற்றியின் நாயகியாக, சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஜெயலலிதா அவர்கள் தமிழக முதல்வராகப் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டார். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதலமைச்சர் மற்றும் 43 வயதிலேயே பொறுப்பேற்ற இளம் முதலமைச்சர் என்ற இரண்டு பெருமைகளையும் பெற்றார்.

அந்த வரலாற்று நிகழ்வு முடிந்ததும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் வளாகத்திலிருந்து கிளம்பத் தயாராகிறார். அப்போது அங்கே ஒரு ‘கலாச்சாரப் புரட்சி’க்கு வித்திடப் போகிறார் என்று யாருமே அறிந்திருக்கவில்லை.

திடீரென, அ.தி.மு.க.வின் இளம் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், சற்றும் யோசிக்காமல், முதல்வரின் கால்களில் ‘சமர்ப்பணம்’ ஆகிறார். ஆம், சாஷ்டாங்கமாகத் தரையில் சரிகிறார்! அவர் விழுந்ததும் தாமதம், அருகிலிருந்த அமைச்சர்கள் முதல், வரிசையில் நின்றிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் ‘ஒருமித்த குரலில்’, ‘ஒரே சிந்தனையில்’ ‘ஒரே செயலாக’ வரிசையாக சாஷ்டாங்கமாகத் தரையில் சரிகிறார்கள். என்ன நடக்கிறது என்றே மற்றவர்களுக்குப் புரியவில்லை. ஆனால், ஒரு நொடியில் ஒரு புதிய ‘அரசியல் சடங்கு’ உருவாகிவிட்டது.

தமிழக அரசியல் வானில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்த அந்த “கலாச்சார நாயகர்” வேறு யாருமில்லை… அன்று அ.தி.மு.க.வின் இளம் புள்ளி, இன்றைய மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன்தான் அவர்!

அந்த ஒரு நொடியில், தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் புதிய முறை தமிழக அரசியலில் வேரூன்றத் தொடங்கியது. அது இன்றுவரை பல்வேறு வடிவங்களில், பல்வேறு அரசியல் அரங்குகளில் ‘தொடர் சங்கிலி’யாக அரங்கேறி வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஜூலை 24, ஒரு முதல்வர் பதவியேற்ற நாள் மட்டுமல்ல, தமிழக அரசியல் கலாச்சாரத்தில் ஒரு ‘புதிய அத்தியாயம்’ எழுதப்பட்ட நாள் என்பதும் கூடுதல் சுவாரஸ்யம்!

நிலவளம் ரெங்கராஜன்

 

Related Posts

error: Content is protected !!