அங்கீகாரம்: விமர்சனம்!
விளையாட்டுத் துறை என்றாலே வெற்றிக் கோப்பைகளும், பதக்கங்களும், மைதானக் கொண்டாட்டங்களும் மட்டுமே நம் கண்முன்னே வந்து போகும். ஆனால், அதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் இருண்ட பக்கங்களை, சாமானிய விளையாட்டு வீரர்களின் கண்ணீர் அத்தியாயங்களை நோக்கித் தன் கேமராவைத் திருப்பியிருக்கிறார் இயக்குநர் தென்பாதியான்.
இந்திய விளையாட்டுத் துறையை ஆட்டிப்படைக்கும் மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்சிங், நிதி முறைகேடுகள், தேர்வுக் குழுவின் பாரபட்சம், டோப்பிங், சான்றிதழ் மோசடிகள், அரசியல் தலையீடுகள் என ஒட்டுமொத்த ஊழல் பின்னலையும் அம்பலப்படுத்தத் துணிந்திருக்கிறது ‘அங்கீகாரம்’ திரைப்படக் குழு. குறிப்பாக, ‘இந்தியாவில் கிரிக்கெட்டுக்குக் கிடைக்கும் முக்கியத்துவம் ஏன் மற்ற விளையாட்டுகளுக்குக் கிடைப்பதில்லை?’ என்ற மிக முக்கியமான, அவசியமான விவாதத்தை இப்படம் அழுத்தமாக முன்வைக்கிறது.
கதைக்களம்: தகுதிக்கும் அதிகாரத்திற்கும் நடக்கும் போர்
சிங்காரச் சென்னையின் ஒரு விளிம்புநிலை குடிசைப்பகுதி. அங்கே எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி, ஓட்டப்பந்தய விளையாட்டையே தன் வாழ்க்கையை உயர்த்தும் ஒற்றை நம்பிக்கையாகக் கொண்டு ஓடுகிறார் நாயகன் கே.ஜெ.ஆர் (KJR). கடுமையான உழைப்பிற்குப் பின், தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சாதனை புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் வென்று, காமன்வெல்த் போட்டிக்கு நேரடியாகத் தகுதி பெறுகிறார்.
ஆனால், உண்மையான சவால் மைதானத்திற்கு வெளியேதான் தொடங்குகிறது. ஊழல் மலிந்த தேசிய தடகளச் சங்கம் அவரது முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டைப் போடுகிறது. மாநில விளையாட்டுத் துறை, அமைச்சர் என அத்தனை கதவுகளையும் தட்டிப்பார்த்தும் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தகுதி இருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும் நிலையில், எவ்விதப் பின்னணியும் இல்லாத அந்தச் சாமானிய இளைஞன் நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டுகிறான். வழக்கறிஞர் எவருமில்லாமல், தனக்காகத் தானே வாதிட்டு, தனக்குரிய சர்வதேச அங்கீகாரத்தைப் பெற அவன் நடத்தும் சட்டப் போராட்டமே ‘அங்கீகாரம்’ படத்தின் கதை.
நடிப்புத் தரம்: சம்மட்டி அடி கொடுத்த அறிமுகம்!
கதையின் நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர், முதல் படம் என்ற தடம் தெரியாத அளவுக்குப் பிரமாதமான உழைப்பைக் கொட்டியிருக்கிறார். விளையாட்டு வீரருக்குரிய உடல்வாகு, நடை, உடை பாவனைகள் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு என அத்தனையிலும் பாஸ் மார்க் வாங்குகிறார். நீதிமன்றத்தில் அவர் ஆவேசமாக எடுத்து வைக்கும் வாதங்கள், அதிகார வர்க்கத்தின் மீதான சம்மட்டி அடியாக விழுகின்றன. “எல்லோரையும் விட எனக்கு நான் முக்கியம்” என்று அவர் முடிக்கும் காட்சியில் தியேட்டரில் கைதட்டல் பறக்கிறது. அவர் கண்கலங்கும் போது ஒட்டுமொத்த அரங்கமும் கலங்குகிறது.
நாயகனுடன் ஓட்டப்பந்தய வீராங்கனையாக வரும் சிந்தூரி விஸ்வநாத், உயரதிகாரியிடம் சீறும் காட்சிகளிலும், அம்மாவிடம் அடங்கும் காட்சிகளிலும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ரமா, சென்னையின் துப்புரவுத் தொழிலாளர்களின் அசல் பிரதிநிதியாகவே வாழ்ந்திருக்கிறார். “உன் காலத்திலேயே நீ முன்னேறணும்” என்று அவர் மகனுக்கு ஊட்டும் தன்னம்பிக்கை, ஒட்டுமொத்த விளிம்புநிலை மனிதர்களுக்குமான குரல்.
அரசுத்தரப்பு வழக்கறிஞராக வரும் விஜிவெங்கடேஷ், அதிகார வர்க்கத்தின் அலட்சிய உடல்மொழியையும், அடாவடித்தனத்தையும் கச்சிதமாகப் பிரதிபலித்துள்ளார். விளையாட்டு ஆணைய கணக்காளராக வரும் ஆண்டனி கவனம் ஈர்க்கிறார். நீதிபதிகளாக வரும் மோகன்ராம், ரங்கராஜ் பாண்டே மற்றும் அமைச்சராக வரும் மன்சூர் அலிகான் ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேட கச்சிதத்தைக் உணர்ந்து நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள்.
தொழில்நுட்பக் கூட்டணி: பின்னணியும்… பலவீனமும்…
சென்னையின் குடிசைப் பகுதி காட்சிகளை எதார்த்தமாகப் படம்பிடித்த ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத் பாராட்டுக்குரியவர். ஆனால், தடகளப் போட்டி நடக்கும் மைதானக் காட்சிகளில் எதார்த்தத்தை விட ‘கிரீன் மேட்’ (Green Mat) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது அப்பட்டமாகத் தெரிவது படத்தின் பலவீனம். இரண்டாம் பாதி முழுவதும் நீதிமன்றத்திற்குள்ளேயே நகர்வதால், ஒளிப்பதிவாளர் தன் தனித்துவத்தைக் காட்டப் பெரிய அளவில் வாய்ப்பில்லாமல் போயிருக்கிறது.
ஜிப்ரான் வைபோதாவின் இசை படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. உணர்ச்சிகரமான காட்சிகளுக்குப் பின்னணி இசை அளவாகப் பயணித்து உயிரூட்டியிருக்கிறது. பீட்டர் ஹெய்ன் அமைத்திருக்கும் ஒரு சண்டைக்காட்சி, நாயகன் கே.ஜெ.ஆர் ஒரு சிறந்த ஆக்ஷன் ஹீரோவாகவும் ஜொலிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளது. திரைக்கதையில் தொய்வில்லாமல் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் தினேஷ் குமார்.
பிளஸ் & மைனஸ்: சினிமாத்தனமும்.. நிஜத்தின் வலியும்..
பிளஸ்:
-
விளையாட்டுத் துறையின் அரசியல் மற்றும் ஊழல்களைத் துணிச்சலாகத் தோலுரித்துக் காட்டியிருப்பது.
-
அறிமுக நாயகன் கே.ஜெ.ஆர் மற்றும் ரமாவின் உணர்வுப்பூர்வமான நடிப்பு.
-
ஜிப்ரானின் பின்னணி இசை.
மைனஸ்:
-
நீதிமன்ற நடைமுறைகள் மிக நாடகத்தனமாக இருப்பது. வழக்கறிஞர் இல்லாமல் ஒரு சாமானியன் வாதிடுவதையும், அவனது அத்தனை வாதங்களையும் நீதிமன்றம் மிக அமைதியாகக் கேட்பதையும் சினிமாத்தனமாக மட்டுமே பார்க்க முடிகிறது.
-
தடகளப் போட்டிகளில் உள்ள போலி கிராபிக்ஸ் காட்சிகள்.
ஒட்டுமொத்தப் பார்வை: ஸ்கோர் செய்ததா ‘அங்கீகாரம்’?
நீதிமன்ற வாதங்கள் உண்மைக்கு நெருக்கமாக இல்லாமல் சினிமாத்தனமாகப் பயணித்தாலும், வெறும் வெற்றிகளை மட்டுமே பேசும் விளையாட்டுப் படங்களுக்கு மத்தியில், திறமையற்ற அதிகாரிகளாலும், சுயநலச் சங்கங்களாலும் தகுதியான வீரர்கள் எப்படிச் சாகடிக்கப்படுகிறார்கள் என்ற நிஜத்தின் வலியை மக்களின் மனதுக்குள் கடத்துவதில் இயக்குநர் தென்பாதியான் ஜெயித்துவிடுகிறார்.
தகுதி இருந்தும் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தவிக்கும் ஒவ்வொரு விளையாட்டு வீரனின் மனக்குமுறலாக ஒலிக்கும் இந்த ‘அங்கீகாரம்’, தியேட்டருக்குச் சென்று நேரம் ஒதுக்கிப் பார்க்கத் தகுந்த படங்களின் பட்டியலில் தாராளமாக இடம் பிடிக்கிறது.
மார்க்: 3 / 5


