வேலை வாய்ப்பு மட்டுமல்ல, சம்பள எல்லையும் மாறும் ஏஐ காலம்!

வேலை வாய்ப்பு மட்டுமல்ல, சம்பள எல்லையும் மாறும் ஏஐ காலம்!

21,80,07,41,225. இந்த எண்ணை உங்களால் வாசிக்க முடியவில்லை தானே? என்னாலும் தான். இது மேட் டெய்ட்கி என்பவருக்கு மெட்டா வழங்கும் சம்பளம். இவருக்கு வயது இருபத்து நான்கு மட்டுமே. அமெரிக்க டாலர் மதிப்பில் இருநூற்று ஐம்பது மில்லியன். ஐடி துறையில் அதிகச் சம்பளம் இயல்பானது தான். ஆனாலும் இவ்வளவு அதிகம் எவரும் எதிர்பாராதது. மெட்டா நிறுவனத்திற்கும் இது ஒரு பெரிய தொகை தான். அப்படி என்ன செய்துவிட்டார் இந்த மேட் டெய்ட்கி. ‘நீங்க வந்தா மட்டும் போதும்…’ என ஏன் அவரை இவ்வளவு விலை கொடுத்து வாங்குகிறது மெட்டா?

மேட் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர். ஐடி ஜாம்பவான்களின் குல வழக்கப்படி படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டார் மேட். எனக்கு டாக்டர் பட்டமெல்லாம் வேண்டாம். நிறைய வேலை இருக்கிறது என்று வெளியே வந்துவிட்டார். பல்கலைக்கழகத்தைவிட்டு வந்தவுடன் மேட் சியாட்டிலில் உள்ள Allen Institute for Artificial Intelligence என்னும் நிறுவனத்தில் பணிபுரியத் தொடங்குகிறார். Molmo என்றொரு ஏஐ மாடலை உருவாக்கும் குழுவுக்குத் தலைமையேற்கிறார் மேட். இது ஒரு மல்ட்டிமோடல் ஏஐ. அதாவது, இந்த ஏஐயால் டெக்ஸ்ட் மட்டுமின்றி பல்வேறு மீடியாக்களையும் புரிந்துகொள்ள முடியும். ஆடியோ, படங்கள் என அனைத்திலும் அசத்தும்.


இதே போன்ற ஓர் ஏஐயைச் செய்வதில் மெட்டா நிறுவனமும் முனைப்புடன் இருக்கிறது.

சென்ற ஆண்டு (2024) நிறுவனம் ஒன்றைத் தொடங்குகிறார் மேட். அதற்கு வெர்செப்ட் என்று பெயரிடுகிறார். வெர்செப்ட்டின் நோக்கம் ஏஐ ஏஜென்ட்களை உருவாக்குவது. பத்துப் பேர்கள் மட்டுமே வெர்செப்ட்டில் பணியாற்றினர். மிகச் சிறிய நிறுவனமாக இருந்த போதே பதினேழு மில்லியன் டாலர்கள் முதலீடு திரட்டுகிறது வெர்செப்ட். இதில் கூகுள் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி எரிக் ஸ்கிமிட்டும் முதலீடு செய்கிறார்.

முன்னணி ஏஐ நிறுவனங்களின் கவனம் வெர்செப்ப்டின் மேல் குவிகிறது. மேட் மீதும். அவர் மீது கவனம் குவிவது இதுவே முதல் முறையல்ல.

NeurIPS என்பது ஏஐ துறை சார்ந்த புகழ்மிக்க கான்ஃபரன்ஸ். இரண்டாயிரத்து இருபத்து இரண்டில் மேட் இதிலொரு ஆராய்ச்சிக் கட்டுரை வாசிக்கிறார். அதற்கு அவ்வாண்டின் மிகச் சிறந்த ஆராய்ச்சிக்கான விருது கிடைக்கிறது. இது ஏஐ துறையில் கிட்டத்தட்ட நோபல் பரிசு பெறுவதுபோல.

அவரைத் தங்கள் பக்கம் இழுக்க நிறுவனங்கள் போட்டிபோட்டுள்ளன. முதலில் மெட்டா நிறுவனம் அவருக்கு நூற்று இருபத்தைந்து மில்லியன் டாலர்கள் வழங்குவதாகக் கூறியுள்ளது. ஆனால் மேட் இது போதாது என்று மறுத்துவிடுகிறார்.

பிறகு மெட்டாவின் நிறுவனர் மார்க் ஜக்கர்பெர்க்கே களத்தில் இறங்கியுள்ளார். என்னைப் போல் ஒருவன் என மேட் குறித்துப் பெருமையாகப் பேசியுள்ளார். முன்னர் சொன்னதை விட இரண்டு மடங்கு தருவதாக உறுதியளிக்கிறார். அது தான் இருநூற்று ஐம்பது மில்லியன் டாலர்கள். டீல் ஒகே என்று மேட் சம்மதித்துள்ளார். இதுவே மேட் மெட்டாவிற்கு வந்த கதை.

மேட் மட்டுமல்ல, இவரைப் போல இன்னும் சிலரையும் மெட்டா நிறுவனம் பணியமர்த்த உள்ளது. ‘இந்த டீம்ல எல்லாருமே ஸ்டார் தான்’ என்னும் குறிக்கோளுடன் ஒரு திட்டத்தை வைத்துள்ளது மெட்டா. இதற்காகவே ஒரு பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது.

ஏற்கனவே ஆப்பிள் நிறுவன ஏஐ குழுவின் தலைவரைத் தட்டித் தூக்கியுள்ளது மெட்டா. Ruoming Pang என்னும் அவரை இதே போலவே மிக அதிகச் சம்பளத்திற்கு எடுத்துள்ளது. அது சரி, ஆப்பிள் ஏஐயில் என்ன சாதித்துவிட்டது என்றெல்லாம் கேட்கக் கூடாது.

இதன் மூலம் பிரத்தியேகத் திறன்கொண்ட ஏஐ வல்லுநர்கள் விளையாட்டு வீரர்கள் போல, ம்யூசிக் ராக் ஸ்டார்ஸ் போலச் சம்பாதிக்கத் தொடங்கியுள்ளனர். இதுவே ஒரு பேசுபொருளாகியுள்ளது. ஒருபுறம் ஏஐ வந்துவிட்டது. இதனால் உங்களுக்கு வேலையில்லை என்று கூட்டம் கூட்டமாக லே-ஆஃப் செய்துகொண்டிருக்கின்றன நிறுவனங்கள். அதேவேளையில் இவ்வாறு ஜாக்பாட் அடித்தது போன்ற தொகையில் வேலைக்கும் எடுக்கின்றனர்.

இவர்களை வைத்து இன்னும் நிறைய வேலைகளைக் காலிசெய்யும் ஏஐ மாடல்களை உருவாக்குவார்கள். எனவே இது போன்ற போக்கு நல்லதல்ல என்கின்றனர் ஒரு சாரார். மறுபுறம் திறமைக்கேற்ற ஊதியம். எனவே நாலு பேருக்கு நல்லது நடந்தால் எதுவுமே தப்பில்லை என்கிறது இன்னொரு தரப்பு.

ஏஐ யுகத்தில் மாறவிருப்பவை வேலைகள் மட்டுமல்ல. சம்பளங்களின் எல்லைகளும்.!

குப்புச்சாமி

Related Posts

error: Content is protected !!