June 2, 2023

ஜெ. வாழ்க்கையின் ஒரு பகுதி என்ற அறிவிப்போடு வந்துள்ள ’தலைவி’ -விமர்சனம்!

ந்திய சினிமாக்களில் அவ்வப்போது பயோபிக் படங்கள் தயாராவது வாடிக்கையே.. பல்வேறு தரப்பட்டோரின் வாழ்கைக் கதையை கண், காது, மூக்கு வைத்து ஆண்டுக் கணக்கில் உழைத்து உருவாக்கப்பட்டு வெளியாகி வெற்றியும் பெற்றிருக்கிறது. உதாரணமாக ஏகப்பட்ட ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் குவித்த காந்தி தொடங்கி தமிழில் பாரதி, தந்தை பெரியார், ராமானுஜம், காமராஜர் உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகக் கூட வெற்றி பெற்றன..ஓரிரு ஆண்டுகளுக்கு முன் வந்த நடிகை சாவித்ரி பயோபிக் கூட நேஷனல் அவார்ட்டுடன் மக்களிடமும் எடுபட்ட லிஸ்டில் இணைந்தது. இச்சூழலில் தமிழக சினிமா மற்றும் அரசியலில் மகாராணியாக வலம் வந்த ஜெயலலிதாவின் வாழ்க்கையின் ஒரு பகுதி என்ற அறிவிப்போடு வந்திருக்கும் தலைவி பயோபிக் கொஞ்சம் ஏமாற்றத்தையே தந்துள்ளது..!இதற்குக் காரணம் இந்தத் திரைக்கதையில் வடிவமைத்து இருக்கும் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தொடங்கி சகலரின் வாழ்க்கைப் பயணத்திலும் நானும் நேரடி தொடர்பில் இருந்தது காரணமாக இருக்கலாம். அதே சமயம் எம்.ஜி.ஆர் கூடவே இருந்து அவரை எந்த நடிகையும் நெருங்காமல் வெட்டிவிடும் கேரக்டர் யார் என்று தெரியாத 2கே ஜெனரேசனுக்கும் இது சினிமாவா அல்லது நாடகமா? என்று குழப்பம் ஏற்பட்டாலும் ரசிக்க வாய்ப்புண்டு என்பதும் நிஜம்.

1989ம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி தமிழ்நாடு அசெம்பளியில் நடந்த களேபரக் காட்சியுடம் தொடங்குகிறது படம். அக்காட்சியில் மிகையாக ஜெயாவின் (கங்கனா ரனாவத்) சேலையை பிடித்து இழுப்பதுடன் மானபங்கப்படுத்துவது போலெல்லாம் ஆன நிலையில் இதே சட்டசபையில் முதல்வராகவே கால் வைப்பேன் என்று சபதம் செய்து விட்டு வீர நடை போடும் போது பிளாஷ் பேக் விரிந்து 1965ம் ஆண்டுக்கு அழைத்து போய் விடுகிறார்கள் .அதில் ஜெயலலிதா பள்ளிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு திரைத்துறை நோக்கி வந்ததில் தொடங்கி, எம்.ஜே.ஆர்(அரவிந்த்சாமி)என்று சொல்லப்படும் எம் ஜி ஆரை சந்தித்து ஆரம்பத்தில் ஆணவமாக தொடங்கி அதன் பின் அவர் மீது மையம் கொள்வதன் விளைவாக உருவானவரே தலைவி என்று திரையில் காட்டுகிறார்கள்..

ஆனால் ஜெ.வாக நடித்திருக்கும் கங்கணா ரணாவத்-துக்கு இன்னும் கொஞ்சம் பயிற்சி அளித்திருக்கலாம்..செல்வி.ஜெயலலிதாவாக இருந்தவரிடம் கூட அகங்காரமான நடை தொடங்கி ஆணவப் போக்கு இருப்பதாக காட்டி இருப்பதும், சேலை பார்ட்டரில் கூட பிளாஸ்டிக் கொடியை ஒட்டிக் கொண்டு  சத்துணவு அமைப்பாளராக ஆன போதே அம்மா என்று அழைக்கும் காட்சிகளும் அந்நியமாக தெரிகிறது.. எம்.ஜி.ஆராக வரும் அரவிந்த் சுவாமி ஆரம்பக் காட்சிகளில் நாடக நடிகர் மாதிரி பிரமையைக் கொடுத்தாலும் போகப் போக சிகப்பா இருக்கறவர் எம்.ஜி.ஆர் என்று நம்ப வைத்து விடுகிறார்.. அது போல் அண்ணா மற்றும் பெரியார் போன்றோருக்கு உதவியாளராக இருந்து பின்னாளில் தமிழக அமைச்சரவையில் 20க்கும் மேற்பட்ட துறைகளை மேற்பார்வையிட்ட ஆர்.எ.வீ-யை நினைவுப்படுத்தும் கேரக்டரில் சமுத்திரகனி இயக்குநர் சொன்னதைப் புரிந்து மிகச் சரியாக ரியாக்சன்கள் எல்லாம் செய்து அட்ராக்ட் செய்கிறார்.,நாசர் என்னும் மகாநடிகர் கலைஞர் கருணாநிதி பாத்திரத்தில் வருகிறார்.. அவருக்கு ஏன் அந்த கரகரகுரல் என்றுதான் புரியவில்லை..

இதைத் தவிர 1985 தொடங்கி 1991 வரையிலான பல்வேறு சம்பவங்களுக்கு தேவையான ஆர்ட் ஒர்க்கை செய்து கொடுத்த ஆசாமியைத் தவிர ஜி வி பிரகாஷ் உள்ளிட்ட எல்லா டெக்‌னிஷியன்களும் ஏனோ தானோவென்றே பங்களித்து உள்ளார்கள்..குறிப்பாக 1987ஆம் வருசம் பிறந்த ஜி வி பிரகாஷின் பாடல்களும், பின்னணியும் ஒட்டவே இல்லை..

இதை எல்லாம் தாண்டி தலைவி என்ற தலைப்பில் ஒரு நடிகருக்கும், நடிகைக்குமான அந்தரங்க உணர்வை மட்டுமே வெளிக்காட்ட முயன்றிருக்கும் இயக்குநர் விஜய் தமிழக சீனியர் சிட்டிசன்களிடம் முழுசாக பெயில் மார்க் வாங்குகிறார்.. அதே சமயம் அடுத்தடுத்து சர்ச்சைகளை மட்டுமே எதிர்கொண்டு சாதித்த பெண்மணி ஒருவரின் கதை என்ற ரீதியில் அரசியல் களம் தெரிய ஆர்வப்படாத இளசுகளாவது தலைவி படத்துக்கு வாக்களித்தால் மகிழ்ச்சி

மார்க் 3/5