புது பார்லிமெண்ட் பில்டிங் கட்ட போறது -நம்ம டாடா!

புது பார்லிமெண்ட் பில்டிங் கட்ட போறது -நம்ம டாடா!

தற்போதைய நாடாளுமன்ற கட்டடம் ஆங்கிலேய அரசால் 1921-ம் ஆண்டில் கட்டத் தொடங்கி 1927-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை, மைய மண்டபம் என்று மூன்று முக்கிய பகுதிகளாக நாடாளுமன்றம் பிரிக்கப்பட்டுள்ளது. எனினும், இட நெருக்கடி பிரச்னை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதனால், புதிதாக நாடாளுமன்ற கட்டடம் கட்ட அரசு முடிவு செய்தது.

இதற்காக அகமதாபாத்தைச் சேர்ந்த எச்.சி.பி. எனப்படும் நிறுவனம் முக்கோண வடிவிலான கட்டட மாதிரியை வடிவமைத்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய கட்டடத்தில் 900 மக்களவை உறுப்பினர்கள் அமரும் வகையில், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தின் போது 1350 உறுப்பினர்கள் அமரும் வகையிலும் நாடாளுமன்ற மைய மண்டபம் வடிவமைக்கப்படுகிறது.

புதிய நாடாளுமன்ற வளாகத்தில் சவுத் பிளாக்கின் பின்புறம் பிரதமர் இல்லமும், நார்த் பிளாக் பின்புறம் குடியரசு துணைத்தலைவர் இல்லமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது முதல் 2 வரிசைகளில் அமரும் எம்பிக்களுக்கு மட்டுமே மேஜை வசதி உள்ள நிலையில், புதிய கட்டடத்தில் அனைத்து உறுப்பினர்களுக்கும் மேஜை வசதி கிடைக்கும் என்றும் கட்டட வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்காக கியூபா, எகிப்து, சிங்கப்பூர் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற அமைப்புகள் பரிசீலிக்கப் பட்டு புதிய கட்டடத்திற்கான பணிகளை 2024-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், புதிய நாடாளுமன்றம் கட்டும் ஒப்பந்தத்தை இன்று மத்திய பொதுப்பணித்துறை ஏலத்தில் விட்டது. பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்ட, இந்த ஏலத்தில் டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனம் வென்றுள்ளது. இந்தப் புதிய நாடாளுமன்றம் தற்போதைய நாடாளுமன்றத்தின் அருகிலேயே கட்டப்படவுள்ளது.

நாடாளுமன்ற மாளிகைத் தோட்டத்தின் 188 வது இடத்தில் முக்கோண வடிவம் கொண்ட இந்தப் புதியக் கட்டடம் வரும் என்று பொதுப்பணித்துறையும் அறிவித்துள்ளது. 21 மாதங்களில் முழுப் பணியும் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.