நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வரணும். பழைய பன்னீர்செல்வமாக வரணும்.

நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வரணும். பழைய பன்னீர்செல்வமாக வரணும்.

இந்தப் பதிவு தாமதமானதுதான். ஆனால் நிதானமாக எழுதப்பட்டது. ‘ஒரு ‘கலங்கரை விளக்கம், தனக்குத்தானே கருந்திரையை இழுத்துப்போட்டு மூடிக்கொண்டது’ என்றுதான் தொடங்க நினைத்தேன். பிறகு அந்த கலங்கரை விளக்கம் ஏன் கலங்கப்பட்டது என்பதையும் நினைத்துப் பார்க்கின்றேன். எந்த களப்போராட்டமும் இலக்கை எட்டாமல் வீழ்ந்து போகாது என்பதற்கு பல நாடுகளின் போராட்டங்களை சுட்டி நிமிரவைத்தவர். இப்போது அவரே சோர்வுற்று முடிவெடுத்துவிட்டார். அவரது முடிவு. அவருக்கு சரியானது. ஆனால் அதை வெளிப்பத்தியிருக்க வேண்டாம் என்பதே என் போன்றவர்களின் கருத்து.

edit may 27

எதிரி, மலைமீது இருக்கின்றான். அங்கிருந்தபடியே அதிகாரத் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறான். வீழ்த்தியாக வேண்டும் என்றால் கடினமான மலையேற்றத்தை, எதிரியின் தாக்குதல்களை முறியடித்தபடியே முன்னேற வேண்டும். இலக்கை அடையும் வரை விடக்கூடாது. அய்யோ முடியவில்லையே என கதறி மற்றவர்களையும் மனம் தளர விடக்கூடாது. தான் வீழ்ந்தாலும் தன் தளபதிகள் தொடர வேண்டும். தளபதி வீழ்ந்தாலும் தொண்டர்கள் தொடர வேண்டும். மலைஉச்சியை தொட்டுவிட்டால் போதும், எதிரி வீழ்ந்தே போவான்….என்ற உணர்வை சொன்னதெல்லாம் தமிழருவி மணியன் அவர்கள்தான்.

இப்போது மலையேறி, முடியாமல் சோர்ந்துபோய் திரும்பியிருக்கிறார். அவரால் முடியவில்லை. என்ன செய்திருக்க வேண்டும்,? என் நிலை இப்படி. மற்றவர்கள் பயணத்தை தொடருங்கள். ’வீழ்ந்தவர்கள் போக எஞ்சியவர்கள் முன்னேறுங்கள்’ என்று சீனப்பயணத்தின் போது சொன்ன எழுச்சியை ஊட்டியிருக்க வேண்டும். மௌனமாக இருந்துவிட்டிருக்க வேண்டும். இப்போதுவரை அவருக்கு இணை அவர்தான். அவரைப்போல் மற்றவர்களை உதாரணம் சொல்ல முடியாதுதான். நேர்மையை விட்டுக்கொடுப்பதில் சமரசம் செய்துகொள்ளாதவர்தான். மறுக்க முடியாது. ஆனால் என்ன செய்வது. தவறான முடிவுகளை எடுத்துவிட்டு, அது நேர்மையாக முடியவில்லை என தூக்கிப்போட்டுவிட்டுப் போவதிலும் அவருக்கு நிகர் அவராகவே நிற்கிறாரே.

2007 இறுதிகளில் முதன் முதலாக குமுதம் இணைய தொலைக்காட்சிக்காக அவரை நேர்காணல் எடுத்தேன். விடுதலைப் புலிகள் மீதும், தலைவர் பிரபாகரன் மீதும் கடுமையான விமர்சனத்தை வைத்தார். திலீபனைப் போல் ஓராயிரம் திலீபன்களை உருவாக்கியிருந்தால் போதும். இலங்கை தேசமும், இந்தியாவும் பணிந்திருக்காதா என்பதே அவரது வாதமாக இருந்தது.
என்ன செய்வது ஐயா. தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த மண்ணில் ‘திலீபன்களாகவே’ போராடிப் பார்த்து விட்டார்கள். அகிம்சையை தூக்காதே. ஆயுதத்தை கையில் எடு என்று அந்த சிங்கள தேசமும், இந்தியமும்தான் அய்யா நிர்பந்தித்தது. நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கின்றான் என்பது என் தரப்பு கேள்வியாக இருந்தது.

https://www.youtube.com/watch?v=xkrxBmrJUnI

அப்படி தொடர்ந்த பல விவாதங்கள், பின்னாளில் அவரை தலைகீழாக மாற்றியது. 2010-ம் ஆண்டு ‘முள்ளிவாய்க்கால் முடிவல்ல. இனி என்ன செய்யலாம்’ என்ற நிகழ்ச்சியின் போதும், அதன் பிறகு எடுத்த கடைசி நேர்காணலிலும் சுத்தமாக மாறியிருந்தார் மணியன்.விடுதலை வேண்டி, உலகிலேயே மிக நேர்மையான, ஒழுக்கத்தை மட்டுமே கட்டமைத்து போராடிய இயக்கம்தான் விடுதலைப் புலிகள் இயக்கம். அறம் சார்ந்து, மனித நேயத்தோடு போராடியவர்தான் பிரபாகரன் என்று மாறியதற்கு எங்களைப் போன்ற பலரும், அவரது ‘பின்னோக்கிப்பார்த்த அனுவமுமே’ காரணம் எனலாம். அந்த காலகட்டங்களில் பல வெளிநாடுகளுக்குச் சென்று புலம்பெயர்ந்த தமிழர்களிடமும் பேசினார். சரியான ஒரு ஆலோசகர் கிடைத்தார் என்றுதான், அமெரிக்காவில் நடந்த பெட்னா அமைப்பு இயக்கமும் கருதியது.

ஆனால் தமிழக அரசியல் களத்தில் ‘நினைப்பதெல்லாம் நடந்துவிடும். அல்லது நடக்கனும் என நினைத்திருந்தார். சீமானின் நாம் தமிழர் கட்சி தொடக்க விழாவில் முதன்மையாக நின்று பேசினார். தமிழ் தேசியமே தீர்வு. திராவிடம்தான் நம்மை வீழ்த்தியது என பல இடங்களில் பேசினார். பிறகு என்ன கருத்து வேறுபாடோ தெரியாது. சீமானோடு நின்றால் சாதி முத்திரை விழும். அதான்..என்று என்னிடமும் கருத்துக்கூறினார். பல விஷயங்களை இங்கே பேச முடியாது. நாகரீகமாக இருக்காது.
அடுத்து வைகோவை முதல்வர் ஆக்காமல் மறு வேலை கிடையாது என கிளம்பினார். அப்படி ஒரு உறுதியில் வைகோவே நிற்காத போது மணியன் ஐயா மட்டும் தொடர்ந்து பேசினார். வைகோ திமுக, அதிமுக தலைமையோடு கூட்டணி பேசிக்கொண்டிருந்தார். பிறகு பிஜேபி தான் தலைமை என்று போய் நின்றார். ஆக வைகோ நினைக்காததை மணியன் பேசினார்.

2014-ல் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று பாஜக தலைமையில் வைகோவை கொண்டு போய் நிறுத்தி, கூடவே தேமுதிக என்ற திராவிட கட்சியையும் இணைத்துக் கொண்டு காவிகளுக்கு ஒரு அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க முனைந்தார். அந்த ‘ராஜபார்வை’ திட்டம் குருடாகிப் போனது.பிறகு இப்போது நடந்த 2016 சட்டமன்ற தேர்தலிலும் மாறி மாறி குழம்பி குழம்பி முடிவெடுத்தபடி நகர்ந்தார். மீண்டும் ஒரு தவறான முடிவை எடுத்து படுதோல்வியை சந்தித்தார். அந்த குழப்பத்தில், ‘இந்த மக்களே இப்படித்தான்’ என்ற விரக்திக்கு வந்துவிட்டார். அந்த விரக்தி ஒரு எதிர்ப்பாக மாறி, ‘இனி அரசியல் வாழ்க்கையே வேண்டாம்’ என புறக்கணிக்கும் அறிவிப்பாக மாறியிருக்கிறது.

தோல்விகளை கண்டு துவண்டு போய்விடக்கூடாது என்று என்னைப் போன்றவர்களுக்கு கொசோவா போராட்டத்தை, ஓசிமின் போராட்டத்தை, சீனப்புரட்சியை எல்லாம் உதாரணமாக சொன்ன மணியன் அவர்களே இப்போது சோர்வுற்றுப் போயிருக்கிறார்.
இங்கே ஒரு குட்டிக்கதை.

கடல் பற்றிய ஆராய்ச்சி பட்டம் பெற்றவர் உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே இங்கு இப்படி, அங்கு அப்படி, அந்த அலை ஆபத்து என்று பேசியபடியே இருப்பார். ஆனால் ஒரு சாதாரண மீனவருக்கு அது அன்றாட பழக்கப்பட்ட வாழ்க்கை. வீசும் காற்றை வைத்து என்ன மழை வரும் என்பதையும் கடல் அமைதியை கணித்து என்ன நடக்கப்போகிறது என்பதையும், புயல் மழையில் இருந்து தப்பிப் பிழைப்பதையும் வாடிக்கையாக கொண்டிருப்பார். பட்டம் பெற்ற ஆராய்ச்சியாளர் அதோ கதியாக மூழ்கிப்போவார். மணியன் கதையும் இப்படித்தான்.

இப்போதும் கெட்டுப்போய்விடவில்லை. சரியான முடிவெடுத்து வெளியே வரனும். பழைய பன்னீர்செல்வமாக வரனும். இங்கே நாம் தமிழர் கட்சியிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் இருக்கிறது. ராஜ்குமார் பழனிசாமி போன்ற தமிழ்தேசிய உணர்வாள இயக்கங்கள் இருக்கின்றது. இவர்களைப் போன்றவர்களை ஒருங்கிணையுங்கள். வழிநடத்துங்கள்.கிராமத்தில் ஒன்றை கூறுவார்கள். ‘வெளியூர்காரன் பஞ்சாயத்தில் போய் உட்கார்ந்துகொண்டு நீ நாட்டாமை’ பண்ண முடியாது என்று. அந்த ஊரில் அந்த ஊர் நாட்டாமைதான் ராஜாங்கம் பண்ணுவார். இதுவெல்லாமும் சொல்லிக்கொடுத்தது நீங்கதான். இதுவரை வெளியூர்காரன் பஞ்சாயத்தில் போய் உட்கார்ந்து காயம்பட்டு திரும்பியிருக்கிறீர்கள். ஒரு முறை உங்க உள்ளூர் பஞ்சாயத்தில் நிஜ நாட்டான்மை பண்ணுங்கள். அதனால் நீங்கள் மீண்டும் அரசியலுக்கு வரணும். பழைய பன்னீர்செல்வமாக வரணும்.

இறுதியாக ஒன்று. ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று எனக்கு அடிக்கடி கூறுவீர்கள். எதற்காக அப்படி கூறினீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இப்போது உங்களுக்கு நேர்ந்த கசப்பை ‘தீதும் நன்றும் பிறர்தர வாரா’ என்று எடுத்து கொள்ளலாமா? ? எனில் உங்களுக்கு இப்போது நடந்திருப்பது தீதா? என்றால் நீங்களாகவே வேண்டி பெற்றுக்கொண்டதா? இல்லை என்றால் முடங்கிப் போகாதீர்கள். வாருங்கள். மீண்டும் குதிரை ஏறுங்கள். உங்களுக்கான பிள்ளைகள் இங்கே இருக்கிறார்கள் என்பதை இனியாவது உணருங்கள்.

பா ஏகலைவன்

Related Posts