சுவாமி விவேகானந்தர்: இளைஞர்களின் எழுச்சி நாயகன் நினைவு நாள்!
அஞ்ஞானம் என்னும் இருளில் இந்த உலகம் இருந்த காலத்திலேயே மிகப் பெரிய ஆன்மிக ரிஷிகள் பலர் தோன்றி, மனிதனின் ஆத்மாவை ஆராய்ந்து, மனிதனின் ஸ்வரூபம் என்ன என்று தெளிந்து, அதையே வேதங்களாக வடித்துத் தந்தது, காலம் காலமாக வந்த ரிஷி பரம்பரையினர் அந்த ஆன்மிக வெளிச்சத்தால், அஞ்ஞான இருளைப் போக்கியிருக்கின்றனர். வேத காலத்திலிருந்து விஞ்ஞான காலம் வரை தொடர்கிறது. அந்த பரம்பரையில் வந்தவரவர்.. இன்றைய வாழ்க்கைக்கும் பொருந்தக்கூடிய, காலத்தால் அழியாத சில பொன்மொழிகளை நமக்கு அளித்தவர் யார் தெரியுமா? “நூறு இளைஞர்களைத் தாருங்கள், பாரத தேசத்தை மாற்றிக் காட்டுகிறேன்” என்று இளைய தலைமுறையின் வலிமையை உலகுக்கு எடுத்துரைத்த நம் இந்திய மண்ணின் மைந்தர், சிறந்த ஆன்மீகத் தத்துவவாதி சுவாமி விவேகானந்தர் ஆவார்.

ஒரு சுருக்கமான வாழ்க்கை வரலாறு
இப்போதும், எப்போதும் இளைஞர்களின் எழுச்சி நாயகனாகப் போற்றப்படும் சுவாமி விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இவர் 1863 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி கொல்கத்தாவில் விஸ்வநாத் தத்தா – புவனேஸ்வரி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவரது தாய்மொழி வங்காளம். பக்தி உணர்வுடன் திகழ்ந்த பெற்றோரின் வளர்ப்பால், விவேகானந்தர் சிறு வயதிலிருந்தே ஆன்மீகத்திலும் தியாக மனப்பான்மையுடனும் வளர்ந்தார். படிப்பிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய அவர், பல்வேறு கலைகளையும் கற்றுத் தேர்ந்தார். பகுத்தறிவால் சிந்திக்கும் திறனை சிறு வயதிலிருந்தே பெற்றிருந்தார். 1879 இல் பள்ளிப் படிப்பை முடித்த பின், கொல்கத்தாவில் உள்ள பிரசிடென்சி கல்லூரியில் உயர்கல்வி கற்றார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் தத்துவம் படித்து கல்வியில் சிறந்து விளங்கினார்.
குருவைத் தேடிய பயணம்
தத்துவம் படித்த பிறகு, அவர் மனதில் கடவுள் பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. “கடவுள் உண்மையில் இருக்கிறாரா?” என்ற சந்தேகம் அவரை அலைக்கழித்தது. இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடிய அவரது தேடுதலே, பின்னாளில் அவரைச் சிறந்த ஆன்மிகத் தலைவராகவும், துறவியாகவும் மாற்றியது. கடவுளைத் தேடிய அந்த காலகட்டத்தில் தான், தத்துவஞானியான ராமகிருஷ்ண பரமஹம்சரைப் பற்றிக் கேள்விப்பட்டு அவரைச் சந்தித்த விவேகானந்தர், அவரிடமும் தனது சந்தேகத்தைக் கேட்டார். ஆரம்பத்தில் ராமகிருஷ்ணர் அளித்த பதிலும், அவரது உருவ வழிபாடு போன்றவையும் விவேகானந்தரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனினும், நாளடைவில் ராமகிருஷ்ணரின் போதனைகளால், பக்தி மார்க்கத்திற்கும் ஞான மார்க்கத்திற்கும் உள்ள வேறுபாட்டையும், அவற்றின் அவசியத்தையும் விவேகானந்தர் உணர்ந்தார். ஒரு சமயம் கடவுள் குறித்து ராமகிருஷ்ணர் அளித்த, ஏற்றுக்கொண்ட வகையில் இருந்த பதிலால் திருப்தியடைந்த விவேகானந்தர், அவரையே குருவாக ஏற்றுக்கொண்டு, அவரது பிரதான சீடரானார்.
துறவறமும் ஆன்மீகப் பயணமும்
1886 ஆம் ஆண்டு ராமகிருஷ்ண பரமஹம்சர் காலமானதைத் தொடர்ந்து, சுவாமி விவேகானந்தரும் ராமகிருஷ்ணரின் முதன்மை சீடர்களும் துறவறம் ஏற்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு ஆன்மீகப் பயணம் சென்று சொற்பொழிவாற்றினர். செல்லும் இடங்களில் விவேகத்துடன் செயல்பட்டு, நன்மை தீமைகளைப் பற்றி விளக்கி, ஆன்மீக சேவை தந்ததால் மக்களால் சுவாமி விவேகானந்தர் என்று அழைக்கப்பட்டார். இந்தியா முழுவதும் வலம் வந்து மக்களின் கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் அறிந்த விவேகானந்தர், 1892 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வந்தார். அங்குள்ள ஒரு பாறையின் மீது அமர்ந்து மூன்று நாட்கள் இந்தியாவின் எதிர்காலம் குறித்துத் தியானம் செய்தார். அப்போது இந்தியா ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு இருந்த காலம். அவர் செய்த தியானத்தின் நினைவாக, இன்றும் அந்தப் பாறையும், விவேகானந்தருக்கு நினைவு மண்டபமும் அங்கு உள்ளது.

உலக அளவில் புகழ்
தொடர்ந்து, 1893 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவில் உள்ள சிகாகோவிற்குச் சென்று அங்கு நடந்த சர்வதேச மதங்களுக்கான மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். அவரது ஆங்கிலப் பேச்சுத் திறமையும், பகுத்தறிவுடன் ஆன்மீகத்தை அவர் அணுகிய விதமும் உலக அளவில் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது. அதன் பின்னர் ஆன்மீக உரை நிகழ்த்த உலக நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட சுவாமி விவேகானந்தர், 1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி மக்களிடையே ஆன்மீகச் சொற்பொழிவுகளை நடத்தினார். மேலும், சுதந்திரம் குறித்த கருத்துக்களைப் பரப்பினார். குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் எழுச்சிமிக்க கருத்துக்களைப் பரப்பி, அவர்கள் வாழ்வில் முன்னேற வழிகாட்டினார்.
சமூக சேவைப் பங்களிப்புகள்
தொடர்ந்து தனது குருவான ராமகிருஷ்ணரின் நினைவாக, ஏழை எளியவர்களுக்கு இலவச சேவை வழங்கும் “ராமகிருஷ்ணா மிஷன்” என்ற அமைப்பையும், கங்கை நதிக்கரையில் பேலூரில் ராமகிருஷ்ணர் என்ற பெயரில் மடத்தையும் நிறுவி சமூக சேவையில் ஈடுபட்டார்.
மரணமும் அழியாப் புகழும்
இப்படி ஆன்மீகத்திலும் சமூக சேவையிலும் பெரும் பங்காற்றிய சுவாமி விவேகானந்தர், கொல்கத்தாவில் பேலூரில் உள்ள ராமகிருஷ்ணா மடத்தில் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி தனது 39 ஆவது வயதில் மறைந்தார். சிறு வயதிலேயே அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும், இந்த உலகம் உள்ளவரை அவரது எழுச்சி உரைகளும் சேவை மையங்களும் என்றும் நமக்கு அவரை நினைவூட்டும் என்பது உண்மை. இந்தியா என்றால் ஆன்மீகத்திலும் சேவையிலும் ஓர் அடையாளமாக விளங்கும் சுவாமி விவேகானந்தரின் நினைவு தினமான இன்று (ஜூலை 4), அவரை நாம் நினைவு கூர்வதில் பெருமை கொள்கிறோம்.


