டிரம்ப்புக்கு உச்ச நீதிமன்றம் ‘செக்’:அமெரிக்காவில் நடக்கும் வர்த்தகப் போர்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டுரம்ப், உலக நாடுகளிலிருந்து வரும் பொருட்கள் மீது 10% வரி விதிப்பேன் என்று சொன்னதற்கு, அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் ஒரு பெரிய முட்டுக்கட்டை போட்டுள்ளது. இது என்ன விவகாரம்? யாருக்கு வெற்றி? என்பதைப் பார்ப்போமா?.
என்ன நடந்தது?
அமெரிக்காவுக்குள் இறக்குமதியாகும் எல்லா வெளிநாட்டுப் பொருட்களுக்கும் 10% வரியைப் போடப்போவதாக டிரம்ப் ஒரு உத்தரவைப் பிறப்பித்தார். இதற்கு ‘ரெசிப்ரோக்கல் வரி’ (Reciprocal Tariff) என்று பெயர். அதாவது, “நீங்கள் எங்களிடம் வரி வாங்கினால், நாங்களும் உங்களிடம் வாங்குவோம்” என்பதுதான் அதன் சுருக்கம்.

ஆனால், இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 6-3 என்ற கணக்கில் ஒரு அதிரடித் தீர்ப்பைத் தந்துள்ளனர்.
நீதிமன்றம் சொன்ன 3 முக்கிய பாயிண்டுகள்:
-
அதிபர் என்பவர் ராஜா கிடையாது: “வரி விதிக்கும் அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்திற்குத்தான் (Congress) இருக்கிறது. அதிபர் தன் இஷ்டத்திற்குப் பேனாவை எடுத்துச் சட்டத்தைப் போட்டுவிட முடியாது” என்று நீதிபதிகள் குட்டியுள்ளனர்.
-
நாம் யாரிடமும் போரில் இல்லை: 1977-ம் ஆண்டு அவசர காலச் சட்டத்தை (IEEPA) பயன்படுத்தி டிரம்ப் இந்த வரியைப் போட்டார். இதற்குத் தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், “இந்தச் சட்டம் ஒரு நாட்டோடு போர் நடக்கும்போது அல்லது பெரிய ஆபத்து வரும்போதுதான் பயன்படுத்த வேண்டும். இப்போது அமெரிக்கா எந்த நாட்டுடனும் போரில் இல்லையே? பிறகு எதற்கு வரி?” என்று கேள்வி கேட்டு அந்த உத்தரவை ரத்து செய்துவிட்டார்.
-
அதிகார துஷ்பிரயோகம்: “ட்ரம்ப் போன்றவர்கள் சட்டத்தைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க முடியாது” என்று நீதிபதிகள் மிகக் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
டிரம்ப்பின் அடுத்த மூவ் என்ன?
நீதிமன்றம் தீர்ப்பு சொன்ன சில மணி நேரங்களிலேயே ட்ரம்ப் கொந்தளித்துவிட்டார். “இது அமெரிக்காவுக்கு எதிரான தீர்ப்பு” என்று திட்டிய அவர், சும்மா இருக்கவில்லை.
பழைய சட்டத்தைச் செல்லாது என்று நீதிமன்றம் சொன்னதால், இப்போது 1974-ம் ஆண்டின் வேறொரு சட்டத்தைப் (Section 122) பயன்படுத்தி, மீண்டும் அதே 10% வரியைப் போடும் புதிய கோப்பில் கையெழுத்திட்டுள்ளார். “நீதிமன்றம் அந்த வழியில் வராதே என்று சொன்னால், நான் இந்த வழியில் வருவேன்” என்பதுதான் டிரம்ப்பின் பிடிவாதம்.
இதனால் நமக்கு என்ன பாதிப்பு?
இந்த மோதலால் அமெரிக்கச் சந்தையில் ஒரு குழப்பம் நிலவுகிறது.
-
நீதிமன்றத் தீர்ப்பால், இதற்கு முன்பு வசூலிக்கப்பட்ட சுமார் 175 பில்லியன் டாலர் வரிப் பணத்தை அமெரிக்க அரசு நிறுவனங்களுக்குத் திருப்பித் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
-
ஆனால் டிரம்ப் இப்போது புதுச் சட்டம் மூலம் மீண்டும் வரி போடுவதால், சர்வதேசச் சந்தையில் பொருட்களின் விலை உயரும் அபாயம் அப்படியேதான் இருக்கிறது.
தென்காசி தேவா


