வாசிப்பு எனும் கண்ணாடி: மனதைச் செதுக்கி, வாழ்வை அழகாக்கும் உன்னதப் பழக்கம்!

வாசிப்பு எனும் கண்ணாடி: மனதைச் செதுக்கி, வாழ்வை அழகாக்கும் உன்னதப் பழக்கம்!

“நான் உங்களைப் பார்த்திருக்கிறேன்” என்று சொல்வதற்கும், “நான் உங்களை வாசித்திருக்கிறேன்” என்று சொல்வதற்கும் இடையில் ஒரு மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளிதான் இன்றைய இந்தியாவின் வாசிப்பு கலாச்சாரம் எதிர்கொள்ளும் சவாலை நமக்குக் கண்ணாடி போலக் காட்டுகிறது. வாசிப்பு என்பது வெறும் தகவல்களைத் திரட்டுவது மட்டுமல்ல; அது நம் மூளைக்கும், மனதுக்கும், ஆன்மாவுக்கும் நாம் தரும் மிகச்சிறந்த ஊட்டச்சத்து.

மூளைக்கான உடற்பயிற்சி: மறதிக்கு முற்றுப்புள்ளி!

புத்தக வாசிப்பு என்பது சதுரங்கம் (Chess) விளையாடுவது அல்லது புதிர் கணக்குகளைத் (Puzzles) தீர்ப்பது போன்றதே. இது மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். முதுமையில் ஏற்படும் அல்சைமர் (Alzheimer) மற்றும் டிமென்ஷியா (Dementia) போன்ற மறதி நோய்களைத் தள்ளிப்போடும் அபாரமான ஆற்றல் வாசிப்பிற்கு உண்டு. புதிய நினைவுகளைப் பதிவுசெய்து, பழைய நினைவுகளை மீட்டெடுப்பதன் மூலம் மூளையின் செயல்திறனை இது பன்மடங்கு அதிகரிக்கிறது.

மனஅழுத்தம் குறைக்கும் மாமருந்து

இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் வேலைப்பளு, தனிமனித உறவுகள் என நம்மைச் சுற்றிப் பல பிரச்சனைகள் இருக்கின்றன. மனதின் ஓரத்தில் எப்போதும் ஏதோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கும். ஒரு நல்ல நாவலைப் படிக்கத் தொடங்கும்போது, நாம் நம்மையே மறந்து அந்தப் பாத்திரங்களோடு வேறோர் உலகிற்குப் பயணம் செய்கிறோம். இந்தப் பயணம் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. புண்பட்ட மனதுக்கு புத்தகங்களை விடச் சிறந்த மருந்து எதுவுமில்லை.

அறிவு மற்றும் சொல் வளம்

வாழ்க்கையில் பணம், பதவி, ஆரோக்கியம் என எது வேண்டுமானாலும் நம்மை விட்டுப் போகலாம். ஆனால், வாசிப்பின் மூலம் நாம் பெற்ற அறிவு மட்டும் இறுதிவரை நம்முடன் இருக்கும்.

  • சொல் வளம்: புதிய சொற்களைக் கற்றுக்கொள்வதன் மூலம் நமது பேச்சுத்திறன் மெருகேறும். தகவல் பரிமாற்றத்தில் (Communication) தேர்ந்தவர்கள் என்ற நற்பெயரை இது பெற்றுத்தரும்.

  • கூர்மையான அறிவு: எண்ணங்கள் சிதறாமல், ஒரு விஷயத்தில் முழு கவனத்தைக் குவிக்க (Focus) வாசிப்பு பழக்கம் கைகொடுக்கும்.

தனிமையின் தோழன்

தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரத்தை வீணாக்குவதை விட, ஒரு புத்தகத்தோடு நேரத்தைச் செலவிடுவது ஆரோக்கியமானது. தனிமையின் பிடியில் சிக்கித் தவிப்பவர்களுக்கு புத்தகம் ஒரு உன்னதமான தோழன். நூலகங்களில் உறுப்பினராகி, நமக்குத் தெரிந்த உலகத்தைத் தாண்டி புதுப்புது கற்பனை உலகங்களில் சிறகுகளை விரித்துப் பறக்கலாம்.

வாசிப்பு என்பது நம்மை நாமே பார்த்துக்கொள்ளும் கண்ணாடி மட்டுமல்ல; அது நாம் செல்ல வேண்டிய தூரத்தைக் காட்டும் ஒரு வழிகாட்டியும் கூட. நாம் புத்தக வாசிக்கும் வண்ணத்துப்பூச்சிகளாக மாறினால், நம் வாழ்வு இன்னும் வண்ணமயமாகும்!

ரமாபிரபா

Related Posts

error: Content is protected !!