மணல் கோட்டை கட்டி கின்னஸ் ரிக்கார்ட் செய்தார் நம்ம சிற்பி சுதர்சன் பட்நாயக்!
உலகின் மிகப்பெரிய மணல் சிற்ப கோட்டையை ஒடிஷாவை சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக், புரி கடற்கரையில் உருவாக்கியுள்ளார். இது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

யாராவது தகுதிக்கு மீறிய ஆசையுடன் எதையாவது கூறினால் மணல் கோட்டை கட்ட வேண்டாம் என்று கிண்டல் அடிப்பது வழக்கம். ஆனால் உண்மையில் மணல் மூலம் சாதனை படைத்து வருபவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சிற்பி சுதர்சன் பட்நாயக். இவர் அன்றாட உலக நிகழ்வுகளை மையமாக வைத்து மணல் சிற்பங்கள் வடிப்பதில் மிகவும் திறமையானவர். உலகம் முழுவதும் நடைபெறும் மணல் சிற்ப கண்காட்சிகள், போட்டிகள் ஆகியவற்றிற்கு சென்று பரிசுகள், பதக்கங்களை குவித்து இந்தியாவுக்கு பெருமை தேடி தந்தவரும் கூட. மேலும் உலக சாதனையாளர் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளார்.
இந்தச் சாதனை பட்டியலில் மேலும் ஒரு மணி மகுடம் போல தற்போது ஒடிசாவில் உள்ள புரி கடற்கரையில் பிரமாண்டமான மணல் கோட்டை ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார்.அமெரிக்க மணல் சிற்ப கலைஞர் டெட் கடந்த 2015-ம் ஆண்டில் மியாமி கடற்கரையில் 45 அடி 10 அங்குலம் உயரத்துக்கு மணல் கோட்டையை உருவாக்கினார். இதுதான் உலக சாதனையாக இருந்து வந்தது. அந்த சாதனையை ஒடிஷாவை சேர்ந்த சுதர்சன் பட்நாயக் முறிய டித் துள்ளார்.
புரி கடற் கரையில் பட்நாயக்கும் அவரது 45 மாணவர்களும் இணைந்து 9 நாட்களில் இந்த பிரமாண்ட மணல் கோட்டையை உருவாக்கி உள்ளனர். உலக அமைதியை கருப்பொருளாக வைத்து எழுப்பப் பட்டுள்ள இந்த மணல் கோட்டை 48 அடி 8 அங்குலம் உயரம் கொண்டதாகும். இதுதான் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.


