நிர்பயா கொலையாளிகளுக்கான தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு!

நிர்பயா கொலையாளிகளுக்கான தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு!

ஒட்டு மொத்த இந்தியாவே எதிர்பார்க்கும் நிர்பயா வழக்கில் மேலும் ஒரு திருப்பமாக அவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க டெல்லி நீதிமன்றம் இன்று திடீரென உத்தரவு பிறப்பித்து உள்ளது பல தரப்பிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது..

கடந்த 2012-ம் ஆண்டு டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி, ஓடும் பேருந்தில் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டுத் தூக்கி வீசப்பட்டார். அதன்பின் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து 2013-ம் ஆண்டு செப்டம்பரில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரித் தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்தது.

குற்றவாளிகள் 4 பேருக்கும் பிப்ரவரி 1-ம் தேதி காலை 6 மணிக்குள் தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என டெல்லி விசாரணை நீதிமன்றம் டெத் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

குற்றவாளி அக்சய் குமார் உச்ச நீதிமன்றத்தில் தனது தண்டனையை எதிர்த்து சீராய்வு மனுவை தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

சீராய்வு மனுதான் உச்ச நீதிமன்றத்தின் கடைசி சட்டக் கதவாகும். அது அக்சய் குமாருக்கு அடைக்கப்பட்டுவிட்டது. இனிமேல், அவர் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே கருணை மனு செய்ய வேண்டிய வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கெனவே முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா ஆகியோர் சீராய்வு மனுத் தாக்கல் செய்து அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. வினய் குமாருக்கு அனைத்து விதமான சட்டக் கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டன. இதில் 4-வது குற்றவாளியான பவன் குப்தா மட்டும் இன்னும் சீராய்வு மனுத் தாக்கல் செய்யவில்லை.

அவர் சம்பவம் நடந்தபோது தான் மைனர் என்பதால் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

இதையடுத்து நாளை நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் குற்றவாளிகள் சார்பில் இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து இந்த மனு மீதான முடிவு தெரியும் வரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என டெல்லி நீதிமன்றத்தில் குற்றவாளிகளின் வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார்.

இதனை ஏற்ற நீதிமன்றம் நாளை காலை அவர்கள் நான்கு பேருக்கும் நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை தண்டனையை நிறைவேற்றக்கூடாது என டெல்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது

Related Posts