என் குரல் கேக்குதா? நல்லா இருக்கா? – தே மு தி க தொண்டர்களிடையே பேசிய விஜயகாந்த் – வீடியோ!

தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்றவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்தின் திருமணநாள் விழா இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
அதில் தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒன்றிய குழு உறுப்பி னர்கள், மாவட்ட குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் , கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இந்த விழாவில் விஜயகாந்த் பிரேமலதா தம்பதிகளின் 30-ம் ஆண்டு திருமண விழாவும் நடந்தது.
இரண்டு விழாவையும் ஒன்றாக இணைத்து நடத்தினர் . பாராட்டு விழா நடைபெற்ற மேடையில் மாலை மாற்றி கொண்டனர். விழாவுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தலைமை வகித்தார். பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், துணை செயலாளர் எல்.கே சுதிஷ் , விஜயகாந்த் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் விஜயகாந்த் உற்சாகமாக கலந்துக்கொண்டார். வழக்கமாக மேடைக்கு வந்தவுடன் கையசைக்கும் அவர் காரைவிட்டு இறங்கியவுடனேயே கையசைத்தப்படி வந்தார். பின்னர் அவர் தொண்டர்களிடம் மகிழ்ச்சியுடன் உரையாட ஆரம்பித்தார். தன்னுடைய வழக்கமான பாணியில் நாக்கை மடித்து துருத்தி ஏதோ சொல்ல தொண்டர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், “நான் ஒவ்வொரு கூட்டத்திலும் சொல்வேன் துளசி கூட வாசம் மாறும் ஆனால் தவசி வார்த்தை மாறியதாக வரலாறு கிடையாது. கூட்டணி தர்மத்தை மதிக்கிறோம் அதற்காக குட்டினீர்கள் என்றால் குட்ட குட்ட குனிந்து வாங்கிக்கொள்ளாது தேமுதிக. நிமிர்ந்து எழுந்து நிச்சயமாக தேமுதிக இளைஞர்கள் மிகப்பெரிய சக்தி என்பதை நிச்சயம் நிரூபிப்போம் அதில் மாற்று கருத்து இல்லை” என்றார்.
விழாவில் பங்கேற்ற விஜயகாந்த் பேசும் போது, “என் குரல் கேக்குதா மக்களே… எப்படி என் குரல் நல்லா இருக்கா… தேர்தலில் வெற்றிபெற்ற எல்லாருக்கும் என் வாழ்த்துக்கள், வணக்கம். மக்களுக்கு நல்லது செய்வதற்காக வருவேன். சீக்கிரம் வருவேன், மீண்டும் வருவேன், நிச்சயமாக வருவேன்… எல்லோரும் சாப்டுடுதான் போகணும். சாப்பாடு எல்லாம் ஏற்பாடு பண்ணிருக்கு என கூறிக்கொண்டு உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்கள் விஜயகாந்த்” என்றார். அவரது இந்த பேச்சை கேட்ட தொண்டர்கள் மற்றும் கூடியிருந்த மக்கள் நெகிழ்ச்சியில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.