மக்கள் இயக்குநர் ஜனநாதன் காலமானார்! – சில நினைவுக் குறிப்புகள்!

மக்கள் இயக்குநர் ஜனநாதன் காலமானார்! – சில நினைவுக் குறிப்புகள்!

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணமடைந்துள்ளார்.

நடிகர்கள் ஷ்யாம், அருண்விஜய் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான படம் ’இயற்கை’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். இதைத் தொடர்ந்து ’ஈ’, ’பேராண்மை’, ’புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ என பல்வேறு சமூக பிரச்னைகளை மையப்படுத்திய படங்களை இயக்கியுள்ளார். தற்போது அவர் ‘லாபம்’ என்ற படத்தின் பின் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தார். இதில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த பட அனுபவம் குறித்து நம் கட்டிங் கண்ணையா அண்மையில் ஜனநாதனை பார்த்து பேசி இருந்தார். வழக்கம்போல் இதிலும் சமூக விவகாரங்களைத்தான் அலசியுள்ளார். குறிப்பாக விவசாயிகளின் பிரச்சினைகளையும் அதற்கான பின்னணி குறித்தும் அலசுகிறது இவரது ‘லாபம்’. விவசாயிகள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாகக் கூறி பணம் சம்பாதிப்பதே திரைத்துறையினரின் வழக்கமாக உள்ளது என்று விமர்சிக்கப்படுவதை மறுத்து வந்தார் ஜனநாதன். குறைந்த பட்சம் தமக்கு அந்த நோக்கம் இல்லையென தெளிவுப்படுத்தினார்.

“என்னை மட்டுமே முன் வைத்து விளக்கம் அளிக்கிறேன். லாபம் சம்பாதிப்பதற்கு என்னால் வேறு மாதிரியான படங்களை எடுக்க முடியும். எனது பூர்வீகம் தஞ்சை மாவட்டமாக இருந்தாலும் சென்னையில்தான் வளர்ந்தேன். அதனால் விவசாயம் குறித்து எதுவுமே தெரியாது. சிறுவயது முதலே நிறைய திரைப்படங்கள் பார்த்து வருகிறேன். சாதிச் சண்டை, பங்காளிச் சண்டை ஏற்ற தாழ்வு என்று பலவற்றைப் பற்றி சினிமாவில் பேசுகிறார்கள். ஆனால், விவசாயம் குறித்துப் பேசக்கூடிய படைப்பு­கள் அதிகமில்லை. விவசாயி சிரமப்படுகிறான் என்கிற ரீதியிலும் விவசாயிகளுக்கு அறிவுரை கூறும் வகையிலும்தான் படங்கள் வந்துள்ளன. ஆனால், இவற்றைக் கடந்து பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. இப்போது அதைத்தான் நான் செய்திருக்கிறேன்,” என்றார் ஜனநாதன்.

இந்த உலகத்துக்குத் தேவையான உணவு மட்டுமல்ல, பல விஷயங்கள் கிராமத்திலிருந்துதான் கிடைக்கிறது என்று சுட்டிக் காட்டுபவர், இப்படிப் பட்ட ஒரு படத்தை முன்பே இயக்கி இருக்கலாம் என்று தோன்றுவதாகச் சொன்னார். அதற்கான காரணத்தையும் விவரித்தார். “காலையில் இருந்து கரும்பு வெட்டும் விவசாயி, வேலையை முடித்து விட்டு உடல் வலியை மறப்பதற்காக மது அருந்துகிறார். ஆனால், அந்த மது கரும்பில் இருந்துதான் எடுக்கப் பட்டது என்பது அவருக்குத் தெரியாது. பருத்திக் கொட்டையில் இருந்துதான் வனஸ்பதி வருகிறது என்பது அதற்குப் பெயர் பெற்ற ராஜபாளையத்து மக்களுக்கே தெரியவில்லை.உணவு மட்டுமல்ல, உலகத்துக்குத் தேவையான எல்லா மூலப் பொருட்களும் கிராமத்திலிருந்துதான் வருகின்றன. ஆனால், இதையெல்லாம் கொடுக்கும் விவசாயிக்கு என்ன கிடைக்கிறது? இந்தக் கேள்வியைத்தான் ‘லாபம்’ படம் எழுப்புகிறது,” என்றார் ஜனநாதன்.

இது வரை தாம் இயக்கிய படங்களின் முழுக்கதையையும் எந்த கதாநாயகர்களிடம் விவரித்த தில்லை என்று குறிப்பிடுபவர், படம் துவங்கும் வரை தமக்கே முழுக்கதையும் தெரியாது என்றார். படப்பிடிப்பு தொடங்கி விட்ட பிறகும் கூட கதையை மெருகேற்றிக்கொண்டே இருந்தவரிவர். “இன்றைக்கு புதிதாகத் தோன்றும் விஷயம் படம் வெளியாகும் போது பழையதாகி விடும். எனவேதான் எதையும் இறுதியானது என்று நான் வகைப்படுத்துவதில்லை. இதைப் புரிந்து கொண்டவர்கள்தான் என் படத்தின் நாயகர்களாக இருப்பார்கள். ஷாம், ஜீவா, ஜெயம் ரவி எல்லோருக்குமே அந்தப் புரிதல் இருந்தது. விஜய் சேதுபதியும் அப்படித்தான்,” என்று சொல்லும் ஜனநாதன், ‘லாபம்’ படத்தின் நாயகியாக ஷ்ருதி ஹாசனை நடிக்க வைக்கும் எண்ணம் தமக்குத் தொடக்கத்தில் அறவே இல்லை என்றார். தயாரிப்பாளர் கேட்டுக் கொண்டதால்தான் ஷ்ருதியைச் சந்தித்து கதை சொன்னாராம். “உண்மையைச் சொல்ல வேண்டுமானால் ஷ்ருதி நடிக்க ஒப்புக் கொள்வாரா எனும் சந்தேகம் இருந்தது. ஆனால் கதையைக் கேட்ட பிறகு நடிப்பதாகச் சொன்னார்.கதைப்படி அவருக்கு நடனக் கலைஞர் வேடம். கதை நாயகனின் தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் பார்த்து அவரைக் காதலிப்பார்,” என்றார் ஜன­நா­தன்.

இந்த லாபம் படத்தின் எடிட்டிங் பணியில் இருந்த ஜனநாதன் கடந்த 11-ம் தேதி மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு சென்றிருந்தார். மணி 3.30 ஆகியும் அவர் திரும்பாததால், அவரது உதவியாளர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, கதவு திறந்திருக்க சுயநினைவின்றி ஜனநாதன் மயங்கி கிடந்திருக்கிறார். அதிர்ச்சியடைந்த உதவியாளர்கள், அவரை மீட்டு கிரீம்ஸ் ரோட்டிலுள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிசிச்சை அளிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது, அவருக்கு வயது 61. இத்தகவலை சற்று முன் மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர். அவர் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதை அடுத்து ஜனநாதன் உடல் சென்னை மயிலாப்பூர் கச்சேரி சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இன்று (திங்கட்கிழமை) இறுதிச்சடங்கு நடக்கிறது.

Related Posts

error: Content is protected !!