கொரோனாவால் நிகழ்ந்து வரும் காலப் புரட்டல்கள்!

கொரோனாவால் நிகழ்ந்து வரும் காலப் புரட்டல்கள்!

கொரோனா உலகை பலவழிகளில் புரட்டி உழுது போட்டுகொண்டிருக்கின்றது, இதன் விளைவு கள் உடனடியாக பல வேலைவாய்ப்புகளை முடக்கலாம் என்றாலும் அவை மீளும். ஆனால் இனி மிகபெரும் அடியினை சில தொழில்களுக்கு கொடுக்க போகின்றது என்கின்றார்கள் அது ஆசிரியர் தொழில் மற்றும் சிறு கிளினீக் போன்ற தொழில். அதாவது எங்கெல்லாம் நிபுணர்கள் மக்களை சந்திக்கவேண்டுமோ அங்கெல்லாம் இனி வேலைகள் ஆன்லைனில் நட்ககும், எங்கெல்லாம் பொருளும் மனிதனும் எந்திரனும் மனிதனும் சந்திக்க வேண்டுமோ அது மட்டுமே இனி தொடரும்.

கல்லூரி மூடல், பள்ளி மூடல் எனும் வகையில் கல்வி உலகம் ஆன்லைனுக்கு மாறிவிட்டது, இது பலத்த மாறுதல்களை கொடுக்கின்றது ஆன்லைனில் ஒரு ஆசிரியர் எவ்வளவு மாணவனுக்கும் பாடம் நடத்த முடியும், பெரும் கட்டடமும் வளாகமும் வேண்டாம், ஒரு சிஸ்டம் முன்னால் ஆசிரியர் அமர்ந்தால் பல்லாயிரம் மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பாடம் படிக்கலாம்

இதனால் 100 ஆசிரியர் செய்ய வேண்டிய பணியினை ஒரு ஆசிரியர் செய்வார், டியூஷன் சென்டர் செய்யும் பணியினை ஒரு வீடியோ செய்யும். இதனால் எதிர்காலத்தில் ஆசிரியர் தேவை, பேராசிரியர் தேவை மிக மிக குறைந்துவிடும், தொழில்நுட்பம் அந்த பணியினை செய்யும்

அதற்கான அற்குறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டன, அமெரிக்க பல்கலைகழகங்களின் மாணவர்கள் தங்கள் சொந்தநாட்டில் இருந்தே ஆன்லைனில் கற்குமாறு அந்நாடு விரட்டி அடிக்கின்றது, 400 பேராசிரியர் இருக்கும் கல்லூரியில் இனி 40 பேருக்கும் குறைவான ஆசிரியர்கள் போதும்

இந்த முறை இன்னும் ஆழமாக சென்றால் இந்தியாவில் இருக்கும் மாணவன் விசா இன்றி, விடுதி கட்டணம் இன்றி தமிழகத்து கிராமத்தில் இருந்து அமெரிக்க கல்லூரியில் படிக்க முடியும், அப்படி நிலை வரும்பொழுது உள்ளூர் கல்லூரி நிலை? ஆசிரியர் நிலை?

இன்னும் 5ஜி தொழில்நுட்பத்தில் எல்லைகள் இனி வெறும் எல்லையாக இருக்கும், மனிதரால் எல்லைகளை தாண்டி மனதால் பயணிக்க முடியும், இந்தியாவில் இருந்தபடி ஜப்பான் டாக்டரிடம் ஆன்லைனில் பணம் செலுத்திவிட்டு ஆலோசனை பெறலாம், ஜெர்மன் டாக்டரிடம் கருத்து கேட்கலாம்

அப்படியானால் இந்திய கிளீனிக் நிலை? நிச்சயம் சிக்கல்.. அறுவை சிகிச்சை உட்பட சில விஷயங்களுக்கு மட்டுமே நோயாளிகள் மருத்துவரை நேரே சந்திக்க வேண்டும் , மற்றபடி சிறு நோய்களுக்கெல்லாம் வருங்கால மருத்துவ வருமானம் சாத்தியமில்லை

உலகம் தலைகீழாக புரண்டு கொண்டிருக்கின்றது, ஆன்லைன் என்பது எல்லா இடங்களிலும் பெரும் மாற்றத்தை கொண்டுவந்து கொண்டிருக்கின்றது.

இனி நீதிமன்றம் முதல் கல்லூரி,பள்ளிவரை ஆன்லைனில் நடக்கலாம். அந்நிலையில் 1000 பேர் இருக்கும் இடத்தில் 10 பேர் போதும் என்றாகலாம்

ஆசிரியர்கள் , பேராசியர்களுக்கான பெரும் வேலைவாய்ப்பு காலம் முடியதொடங்குகின்றது, அதில் மிகபெரும் திறமை இருந்தாலொழிய வருங்காலம் சாத்தியமில்லை.

ஏற்கனவே தேர்தல் பிரச்சாரம் ஆன்லைனில் நடக்கின்றது, தமிழகத்தில் அது மிக நன்றாக தெரிகின்றது, தொழில்நுட்பத்தால் மட்டுமே இனி அரசியலும் சாத்தியம்

இனி அது முழுக்க அப்படி மாறலாம், தெரு பேனர், போஸ்டர், மேடை கலாச்சாரம், குவார்டர் பிரியாணி கலாச்சாரம் எல்லாம் ஒழியும்.

ஏற்கனவே வங்கி, பத்திரிகை, புத்தக பதிப்பு துறை எல்லாம் ஆன்லைனுக்கு மாறி ஊழியர்களை குறைத்து கொண்டிருப்பது ஒன்றும் புதிதல்ல, அது இனி 100% ஆகலாம்

அமேசான் முதல் பல நிறுவணங்கள் வியாபாரதுறையினை கட்டுபடுத்தலாம்.

போக்குவரத்தும் மாறும் இனி மின்சார கார்களும் டிரைவர் இல்லா கார்களும் அணிவகுக்கும், மானிட தேவை குறையும்

மானிட உழைப்பு திரைமறைவில் நடக்கும், ஏடிஎம் கருவிக்கு பின் பல மனிதர்கள் உழைப்பதை போல ஒவ்வொன்றின் பின்னாலும் மனிதன் உழைப்பான், ஆனால் அவன் மிகுந்த திறன் பெற்றவனாக இருப்பான், 100 பேர் செய்ய கூடிய வேலைக்கு இருவர் போதும்.

இனி விவசாயம் புத்துயிர்பெறலாம் அது சார்த்த தொழில்கள் உயிர் பெறலாம், அதாவது மனிதனை மனிதன் சந்திக்கும் தொழிலெல்லாம் இனி அழியும். மனிதனும் இயற்கையும் சந்திக்கும் தொழில்களான சுற்றுலா, விவசாயம் , இன்னபிற தொழில்கள் வளரலாம், இன்னும் பல விஷயங்கள் நடக்கலாம்

மகாபாரதத்தை திருஷ்டிராசனுக்கு அப்படியே நேரடி ஒலிபரப்பாக வர்ணனை செய்த( first communicator) சஞ்சயன் போல, மானிட இனம் இனி ஆன்லைன் எனும் மாய சஞ்சயனிடம் சிக்கி தவிக்க போகின்றது

காலம் எவ்வளவோ மாறிகொண்டிருக்கின்றது, மிக மிக சடுதியான மாற்றங்களை பார்க்கும் முதல் தலைமுறை நாம் என்பதால் ஒருவித மயக்கமும் திகைப்பும் இன்னும் பல குழப்பங்களும் வரும் .ஆனால் அடுத்துவரும் தலைமுறைக்கு அது இயல்பாக போய்விடும்

உலகம் மாறும் போக்கினை பார்த்தால் மானுட இனம் கண்ணுக்கு தெரியா ஒரு சக்தியிடம் சிக்கும், அந்த சக்தி மானிட இனத்தை அதர்மத்தால் ஆட்டிவைக்கும்.

அந்த அதர்மத்தை ஒழிக்க டிஜிட்டல் கால அவதாரமாக கல்கி அவதாரம் நடக்கலாம்.

வைகுந்தம் நந்தகுமார் சுப்பிரமணியம்

 

error: Content is protected !!