June 2, 2023

டெல்லி விவசாயிகள் போராட்டம் : கொஞ்சம் அலசல்!

டெல்லியில் 1.2 கோடி விவசாயிகள் 96,000 டிராக்டர்களுடன் போராட்டம் நடத்துகின்றனர். பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உ.பி ஆகிய மாநிலங்களின் விவசாயிகளே அதிகம் இப்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் எதிர்ப்பிற்கு உள்ளாவது சமீபத்திய மூன்று விவசாயச் சட்டங்கள்.

இவற்றில் முக்கியமான கோரிக்கை மூன்று சட்டங்களையும் அடியோடு நீக்க வேண்டும் என்பதே. ஏனெனில் பஞ்சாபிலிருந்து 90% கோதுமை அரசு கொள்முதல் நிலையங்களுக்கு வருகிறது. இது பின்னர் மானிய விலையில் மக்களுக்கு பொது விநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்தக் கொள்முதலால் பஞ்சாப் அரசிற்கு ₹ 4000 கோடி கட்டணமாகவும், அதில் ₹1500கோடி இடைத்தரகர்களுக்கு கமிஷனாகவும் கிடைக்கிறது. மத்திய அரசின் புதிய சட்டத்தின் படி கொள்முதல் நிலையங்களில் கட்டணம் கூடாது. மேலும் விவசாயிகள் அரசிடம்தான் விற்க வேண்டும் என்பதில்லை. இந்தியா முழுதும் எங்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ளலாம்.

விவசாயிகள் இத்திருத்தத்தை கார்ப்பரேட்டுகள் தங்களைச் சுரண்டவே வழிவகுக்கும் என்று அஞ்சுகின்றனர். ஆயினும் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் விவசாயத்திற்கு விதை முதல் விற்பனை வரையில் ஏற்கனவே கார்ப்பரேட்டுக்கள் உள்ளனர். பெப்சிகோ உருளைக்கிழங்குப் பயிரை பஞ்சாப் விவசாயிகளிடமிருந்து பெற்று வருவது ஏற்கனவே கார்ப்பரேட்டுகள் ஒப்பந்ந்தச் சாகுபடி முறையில் விவசாயிகளிடம் விளைபொருட்களைக் கொள்முதல் செய்கின்றனர் என்பதைத் தெளிவாக்குகிறது. தமிழகத்தில் ஆச்சி, சக்தி மசாலா போன்றவையும் இதே போன்ற முறையில்தான் கொள்முதல் செய்கின்றனர்.

நாடு முழுவதும் ஒரே நாடு; ஒரே சந்தை என்ற அடிப்படையில் இயங்குவதை புதிய சட்டம் அனுமதிக்கிறது. இது ஏற்கனவே 1977-79 ஜனதா கட்சி ஆட்சி காலத்தில் நடைமுறைப் படுத்தப்பட்ட ஒன்றுதான். இதனால் பதுக்கல் குறைந்தது. மட்டுமின்றி விலைவாசியும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு ஜனதா சாப்பாடு எனும் திட்டத்தால் மலிவு விலையில் சாப்பாட்டு விற்பனை அறிமுகமாகியது. இன்று வரை அத்திட்டம் அம்மா கேண்டீன் திட்டங்களின் முன் மாதிரியாகவுள்ளது. மேலும் இந்தியாவில் 23 விவசாயப் பொருட்களே குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் கொள்முதல் செய்யப்படுகின்றன. அதிலும் சுமார் 6% விவசாயிகள் மட்டுமே கு.ஆ.வி திட்டத்தால் பலன் அடைகிறார்கள்.

ஆகையால் 94% விவசாயிகள் வெளிச்சந்தையில்தான் விற்கிறார்கள். இதுநாள் வரை மாநிலம் கடந்து விற்பனை செய்ய அனுமதி தேவை இருந்தது. இப்போது நீக்கப்பட்டுள்ளது. எனவே உணவுப் பொருட்களின் விலை குறையத்தான் செய்யும். நுகர்வோருக்கு இது நன்மையே. ஆயினும் விவசாயிக்கு என்ன லாபம் கிடைக்கும்? மத்திய அரசு விவசாயிகள் ஒப்பந்த முறையில் சாகுபடி செய்யவும், சந்தை விலையை அறிந்து கொள்ளவும் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. டிஜிட்டல் சந்தையான ஈ-நாம் இதற்கென்று உருவாக்கப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் ஏற்கனவேயுள்ள விவசாயி- இடைத்தரகர்- அரசு கொள்முதல் நிலையங் கள் எனும் தொடர்ச்சங்கிலியை முறிக்கக்கூடாது என்கின்றனர். ஏனெனில் இதுநாள் வரை ஏதோ ஒரு வகையான விவசாயத்தைப் பாதுகாப்பாக செய்து வந்தது பறிபோகிறதே என்கிற அச்சம். இதற்கு மாற்று என்ன?

நவீன விவசாயம் நிறைய செலவு பிடிக்கக் கூடியது. இதற்கு 5-10 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கும் விவசாயிகளே சமாளிக்க முடியும். ஆனால் இந்தியாவில் 90% விவசாயிகள் சராசரியாக 2 ஏக்கர் மட்டுமே வைத்துள்ளனர். இவர்களுக்கு அரசின் உதவி தேவைப்படுகிறது. அரசு கொள்முதல் செய்வதோடு மானிய விலையில் விதை, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, வாடகை டிராக்டர் என பலவற்றையும் கொடுக்கிறது. இதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் (2-5 ஏக்கர் உள்ளோர்) ஏதேனும் ஒரு பொருளை உற்பத்தி செய்ய முடிகிறது. அதிலும் பணப் பயிர்களை (கரும்பிற்கு கு.ஆ.வி உண்டு) அரசு கொள்முதல் செய்வதில்லை.

விவசாயிகளின் முக்கிய கோரிக்கை நல்ல விலைக்கு விற்க வேண்டும் என்பது. இதற்கு உலர்/உறைக் கிடங்குகள் வேண்டும். நல்ல சாலை வசதிகள் வேண்டும். போக்குவரத்து வசதி வேண்டும். இதற்கு அரசும் தனியாரும் இணந்த முயற்சித் தேவை. அரசு வேளாண் பொருட்களை ஏற்றிச் செல்ல தனி ரயில் வழித்தடத்தை ஏற்படுத்தவுள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் பொருட்களை தேவையான நேரத்தில் சந்தைக்கு அளித்து தாங்களும் இலாபம் பெற இயலும்.

இது தவிர மத்திய, மாநில அரசுகள் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாட்டிலேயே சிக்கிம் மாநிலம் முழுவதும் இயற்கை வழி விவசாயத்தை 100% செய்யும் மாநிலம் எனும் பெயர் பெற்றுள்ளது. இது சிறிய மாநிலம். பெரிய மாநிலங்கள் எதுவும் பேரளவில் இயற்கை வழி விவசாயத்தை முன்னெடுக்கவில்லை. தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. ஆக, விவசாயிகள் சூழ்நிலையை அறிந்து தங்களை புதிய சூழல்களுக்கு ஏற்ப மாற்றிகொள்வதே பொருத்தமானது.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு