எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

இது விமர்சனம் அல்ல.. விளக்கம் கேட்டு கற்கும் பதிவு

நமக்கு ஈழ பிரச்சினையில் பெரிய அளவில் புரிதல் இல்லை.. அதனாலேயே அது பற்றி பேசுவதில்லை…

எம்ஜிஆர், இந்திராகாந்தி காலகட்டத்தில் உணர்வு பூர்வமாக விஷயம் புரிந்தது. பல உண்மை களை உணரமுடியும்.. வைகோ, பெரியாரிய அமைப்புகளெல்லாம் பெரிய பங்களிப்பு அளித்தது. கலைஞர், ஜெயலலிதா போன்றோரும் காலத்திற்கு ஏற்ப மாறிமாறி நிலைப்பாடு.. ராஜிவ் காந்திக்கு படுகொலைக்கு பிறகு ஏகப்பட்ட மர்மங்கள், குழப்பங்கள் முரண் பாடுகள்..

2009 இனப்படுகொலைக்கு பிறகு இரண்டு விஷயங்கள் நடக்கவேண்டியது.

ஒன்று, பல்லாயிரம்பேர் சாவுக்கு காரணமான கொலைக்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்..

இரண்டாவது பாதிக்கப்பட்டு எஞ்சியுள்ள மக்களுக்கு வாழ்வில் மறுகட்டமைப்பு, பொருளாதார உத்வேகம் அரசியல் அதிகாரம் போன்றவை கிடைக்கவேண்டும்..

இவற்றில் பாதிப்பை சரிக்கட்ட மறுகட்டமைப்பு, பொருளாதார உத்வேகம் ஆகிய இரண்டையும் இலங்கை அரசு மட்டுமே செய்துவிடமுடியாது.. மற்றவர்களின் பங்களிப்பு இருந்தால்தால் சாத்தியம்.

இலங்கைக்கு ஏதாவது பிரபலம் கிளம்பினாலே, உடனே இங்கு கூக்குரல் எழும்புகிறது. ரஜினி, பாடகர் எஸ்பிபி போன்றோர் கடித்து குதறப்பட்டனர். விளைவு பயணம் ரத்து.

இன்னொருபுறம் திமுகவை சேர்ந்த கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் போன்றோர் அங்குபோய் ராஜபக்சேவை அலுவல் ரீதியாக சந்தித்து பேசமுடிகிறது..

அங்குள்ள மக்களை பார்க்க செல்லக்கூடாது. அவர்களுக்கு பொருளாதார உதவி, கலாச்சார விருந்து போன்றவற்றையும் அளிக்கக்கூடாது. ஆனால் அவர்களைப்பற்றியே பேசிக்கொண்டிருக்கவேண்டும். இதென்ன நிலைப்பாடு,?ஈழத்தில் உள்ள மக்களுக்காக நாங்கள் இந்தந்த பொருளாதார உதவிகளை செய்தோம், கிடைக்கச்செய்தோம் என்று யாரும் சொல்வதில்லை.

ஆனால் நடப்பது எல்லாமே முரண்பாடாக இருக்கிறது. ஈழ பிரச்சினை பற்றி அங்குள்ளவர்கள் பெரிய அளவில் பேசி நாம் பார்த்ததில்லை. தமிழகத்தின் உதவியை நேரடியாக கேட்பதாகவும் தெரியவில்லை..

இலங்கையில் தமிழ் மக்களின் அரசாங்க பிரதிநிதிகளாகவும் முக்கிய தலைவர்களாக இருப்பவர்களும்கூட, தமிழகத்திற்கு வந்தால், இங்கு ஈழப்பிரச்சினை பற்றி மாய்ந்து மாய்ந்து பேசும் தலைவர்களை சந்திப்பதேயில்லை.. அவர்கள் விரும்புவதில்லையா இல்லை இங்குள்ள மத்திய மாநில அரசுகள் தடைபோடுகின்றனவா தெரியவில்லை..

கத்தி படத்தின்போது லைகாவுக்கு எதிர்ப்பு என்று தமிழகத்தையே மிரளவைத்தார்கள். அப்பறம் பார்த்தால் அந்த நிறுவனம் ரஜினிக்கு இரண்டு படங்கள் உட்பட பல தயாரித்து இங்கு வெளியிட்டது, நோ பிராப்ளம். இடையில் என்ன நடந்தது.. லைகா எப்படி புனித நிறுவனமாக மாறிப்போனது? நமக்கு புரியவில்லை..

இப்போது விஜயசேதுபதிக்கு பிரச்சினை.. இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனாக நடிக்கக்கூடாது என..

இதே முரளிதரனை கலாநிதி மாறன் தனது ஐபிஎல் கிரிக்கெட் அணிக்காக பயற்சியாளராய் அமர்த்தியபோது பிரச்சினை கிளம்பியதாக தெரியவில்லை..

இன்றைக்கு விஜயசேதுபதியை நோக்கி படத்தை கைவிடச்சொல்லி பல்வேறு தரப்பினர் தவமாய் தவம்கிடக்கிறார்கள்.. தான் எடுக்கும் முடிவில்தான் இந்த உலகத்தையே காப்பாற்ற முடியும் என்ற நினைப்பில் அந்த நடிகர் எல்லாரையும் பேசவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிக்கிறார்..

கெஞ்சல் மிதமிஞ்சிப்போய், படத்தை கைவிடுகிறேன் என்று அறிவித்துவிட்டு இன்னும் இன்னும் பெரிய மக்கள் செல்வனாக புரமோட் ஆகலாம்..

நமக்கு நீண்ட காலமாகவே ஒரு சந்தேகம் தமிழகத்தின் ஜீவாதார பிரச்சினைகள், உரிமைகள் பறிபோகும் நேரத்திலெல்லாம் சொல்லிவைத்தாற்போல இலங்கை தொடர்பான விவகாரம் ஏதாவது ஒரு வகையில் பூதாகரமெடுத்து தமிழகத்தின் பிரச்சினைகளை கொஞ்சம் பின்னுக்கு தள்ளிவிடுகிறது..

ஈழ பிரச்சினையில் மேற்கொண்டு என்னதான் நடக்கவேண்டும் ? அதற்கான வழிமுறைகள்என எதை சொல்கிறார்கள்? யார் யாருக்கு என்ன எதிர்பார்ப்பு?

விவரம் தெரிந்தவர்கள் ஆக்கபூர்மாக வந்து விளக்கினால் நமக்கும் சில விஷயங்களை தெரிந்துகொண்ட அனுபவம் கிடைக்கும்.. தட்ஸ் ஆல்..!

ஏழுமலை வெங்கடேசன்

error: Content is protected !!