இலங்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் வைத்த செக் -சிவா பரமேஸ்வரன்

கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இலங்கை ஐரோப்பிய சந்தைக்கான வரிச்சலுகை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அளிக்கப்படும் உதவி ஆகியவற்றை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்குகிறது. அதே சமயம் மனித உரிமைகளை மேம்படுத்துவது, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவது உட்பட பல விஷயங்களில் கொடுத்த வாக்குறுதிகளை மீறிய இலங்கை மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் பரிந்துரை செய்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கை ஏற்றுமதி செய்யும் ஆயத்த ஆடைகளுக்கான ஜிஎஸ்பி+ வரிச்சலுகையை ஐரோப்பிய ஆணையம் இடைநிறுத்த வேண்டும் என்று இந்த தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அந்த நாடுகள் ஜிஎஸ்பி+ சலுகைகளை நிறுத்துவது என்று முடிவு செய்தால், இலங்கையின் ஏற்றுமதி சந்தை மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படும். அதனால் இலங்கை கணிசமான அளவுக்கு அந்நியச் செலாவணியை இழக்க நேரிடும். அந்தச் சலுகை நிறுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்க நேரிடும்.
அந்தச் சலுகை இழக்கப்பட்டால், இலங்கை குறைந்தது 150 மில்லியன் டாலர்களை ஏற்றுமதி சந்தையில் இழக்க நேரிடும்.
ஆனால் இந்தச் சலுகையைப் பெற சில நிபந்தனைகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக கொள்கையின் அடிப்படையில், இந்தச் சலுகையைக் கோரிப் பெறுபவர்கள் “மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நல்லாட்சி தொடர்பில் 27 சர்வதேச கடப்பாடுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்“.
அந்த சிறப்பு அமர்வில் உரையாற்ரிய சமத்துவத்திற்கான ஐரோப்பிய ஆணையர் ஹெலினா டாலி அம்மையார் கடந்த 2017ல் இலங்கை ஜிஎஸ்பி+ சலுகையை மீண்டும் கோரிய போது, சர்வதேச அளவுகோல்களுக்கமைய பயங்கரவாத தடைச் சட்டம் திருத்தப்படும் என்று இலங்கை உறுதியளித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார். ஆனால் ராஜபக்ச அரசாங்கம் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று அவர் குற்றஞ்சாட்டினார்.
மனித உரிமைகள் சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா மற்றும் கவிஞர் அஹ்னாஃப் ஜஸீம் ஆகியோரின் விடுதலைக்காகவும் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
நிதியுதவிகள் நிறுத்தப்படும்
மேலும் இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான செயல்பாடுகளில் உதவிவரும் அமைப்புகளுக்கான நிதியுதவிகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் ஐரோப்பிய நாடாளுமன்ற தீர்மானம் கேட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்று கூறி இன மற்றும் மொழி சிறுபான்மையின குழுக்கள், சிவில் சமூகம், மனித உரிமை காப்பாளர்கள் ஆகியோர் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது