ஷீரடி-யில் முழுமையான பந்த் : பாபா கோயில் மட்டும் வழக்கம் போல் திறப்பு!

ஷீரடி-யில் முழுமையான பந்த் : பாபா கோயில் மட்டும் வழக்கம் போல் திறப்பு!

கடந்த இரண்டு நாட்காளாக ஹாட் டாபிக்-களில் ஒன்றாக இருந்த மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஷீரடியில் பல்வேறு பகுதிகளில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடைகள், உணவு விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. அதே நேரத்தில் கோவில் திறந்திருந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த தரிசனம் செய்தனர். கோவிலின் உணவு வழங்கும் மையமும் செயல்பட்டது. விமான நிலையத்தில் இருந்து, ஷீரடிக்கு தனியார் டாக்சிகள் இயக்கப் பட்டன; பஸ்களும் இயங்கின. பக்தர்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில், இந்தப் போராட்டம் நடந்தது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள ஷீரடியில் அமைந்துள்ள சாய்பாபா கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. ‘சாய்பாபா பிறந்த இடமான, பர்பானி மாவட்டம் பாத்ரியில், 100 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என, முதல்வர் உத்தவ் தாக்கரே சமீபத்தில் கூறியிருந்தார். முதலமைச்சரின் இந்தக் கருத்து ஷீரடி பகுதி மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் ஷீரடியில் இன்று பந்த் நடத்தப்படும் என அறிவித்தனர்.

இதனையடுத்து, ஷீரடி சாய்பாபா கோயில் காலவரையின்றி இன்று முதல் (19-1-2020) மூடப் படுகிறது என்ற தகவல் கூட வெளியானது. ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என சாய்பாபா கோயில் நிர்வாகம் பின்னர் விளக்கமளித்தது.

ஆனாலும் திட்டமிட்டப்படி ஷீரடி பகுதியில் இன்று பந்த் கடைப்பிடிக்கப்பட்டது. சாய்பாபா கோயிலின் முன்னாள் அறங்காவலர் மற்றும் பா.ஜ.க. உறுப்பினரான சச்சின் பாட்டீல் இந்த பந்த் பற்றி கூறும்பொழுது,ஷீரடி நகரில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உணவு விடுதிகள் மற்றும் உள்ளூர் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டு, முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டு உள்ளது.
ஷீரடியை சுற்றியுள்ள 25 கிராமங்களிலும் இந்த பந்த் அனுசரிக்கப்பட்டு உள்ளது. பந்த் வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதே சமயம் ஷீரடி சாய்பாபா கோயில் இன்றும் , தொடர்ந்தும் திறந்திருக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

சாய்பாபா கோயிலில் ஆரத்தி வழிபாடு உள்ளிட்ட அனைத்து மத சடங்குகளும் தொடர்ந்து நடைபெற்றன.

மருத்துவமனைகள் உள்ளிட்ட சேவைகள் வழக்கம்போல் செயல்பட்டன.

அன்னதானம் நடைபெறும் மையம் மற்றும் லட்டு விற்பனை செய்யும் மையங்கள் முன் பக்தர்கள் திரளாக வரிசையில் சென்றனர்.

அடிசினல் ரிப்போர்ட்:

முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான மாநில அமைச்சரவை கூட்டம் நாளை கூடுகிறது. அதில், ஷீரடி பிரச்னை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.