‘சேத்துமான்’ – விமர்சனம்!

‘சேத்துமான்’ – விமர்சனம்!

ளர்ந்த நாடுகளும் பன்னாட்டு நிறுவனங்களும் இன்றுவரை உணவு அரசியலை நம் மீது திணித்து விவாதத்தை கிளப்புவது தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது.. மக்களின் வாழ்வையும் சுகாதாரத்தையும் பாதிக்கும் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஆகிய பிரச்சினைகளிலிருந்து சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளுக்குப் பிறகும் நாட்டால் விடுபட முடியவில்லை,,ஆனால் ,அடுத்தவர் உணவு உண்பதை வைத்து அரசியல் செய்யும் போக்கு மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இச்சூழலில் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’ சிறுகதைதான் பா.ரஞ்சித் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தமிழ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் ’சேத்துமான். யாரோ சொன்னது போல் ‘ஒரு நல்ல புத்தகம், சிறந்த வாசிப்பாளனை பல்வேறு கோணங்களில் பயணிக்க வைக்கின்றது, பல்வேறு வாழ்வினை வாழ வைக்கின்றது. அதனால் தான் ஒவ்வொரு மொழியிலும் சிறந்த நூல்களை மக்கள் கொண்டாடிக் கொண்டே இருக்கின்றார்கள்’. வருடங்கள் பல கடந்த பின்பும் கூட அந்த புத்தகங்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. தீவிர இலக்கியங்கள் என்று இல்லாமல் இயல்பாய் அமையும் நாவல்களும், சுயசரிதைகளும், வரலாற்றுப் புத்தகங்களும், கவிதை புத்தகங்களும் வாசகர்களால் கொண்டாடப்படுவதை நாம் அறிவோம். அப்படியாக பலரால் படிக்கப்பட்டு சிலாகிக்கப்பட்ட கதை படமாக்கி ஏற்கெனவே பல்வேறு திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்ற நிலையில், தற்போது சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். வெஜிடேரியன் – குறிப்பாக பன்றி கறியை விரும்பாதவர்களுக்கு வேண்டுமானால் இப்படம் பிடிக்காமல் போகலாம்.. ஆனால் அந்த கறியையும் தாண்டி பல நல்ல சேதிகளைக் காட்டும் படமே இது.

கதை என்னவென்றால் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம் தான் படத்தின் கதைக்களம். ஆதிக்க சாதியினர் வாழும் பகுதியில் நான்கைந்து மாடுகள் திடீரென்று இறந்துவிட, அதை ஒடுக்கப்பட்ட மக்களிடம் கொடுக்கின்றனர். அதை அவர்கள் சமைத்து சாப்பிடுகிறார்கள். அச்சமயம் ஆதிக்க சாதியினருக்கு மாடுகளின் மரணத்தில் சந்தேகம் ஏற்படுகிறது. கறி தின்பதற்காகத்தான் அவர்கள் மாடுகளை விஷம் வைத்துக் கொன்றிருப்பார்கள் என்று எண்ணி, ஒடுக்கப்பட்டவர்களின் குடியிருப்பை சூறையாடு கின்றனர். அந்த கலவரத்தில் தாயையும் தந்தையும் இழந்தநிலையில் குழந்தை ஒன்று பிறக்கிறது. அந்த குழந்தையை வளர்த்தெடுக்கிறார் குழந்தையின் தாத்தாவான பூச்சியப்பா. அவரே சிறுவனுக்கு (குமரேசன்) முழு உலகமாக இருக்கிறார். குமரேசனை எப்படியாவது படிக்க வைக்க வைத்து பெரியவனாக்கிவிட வேண்டும் என நினைக்கும் பூச்சியப்பா, ஆதிக்க சாதியினரின் வசவு சொற்களைத் தாங்கிக்கொள்கிறார். அதுவே அவரின் இயல்பாகவும் இருக்கிறது. பண்ணையாரான வெள்ளையனும் அவரது நண்பர்களும் இணைந்து சேத்துமான் கறி (பன்றிக்கறி) சாப்பிட ஆசைப்படுகின்றனர். இதனால் ஏற்படும் விபரீதம் என்ன? பேரனை ஆசைப்பட்ட மாதிரி பூச்சியப்பா படிக்க வைத்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக் கதை.

முன்னரே சொன்னது போல் பன்றி கறி அல்லது தாத்தா பேரனுக்கு இடையிலான பாசப் போராட்டம் என்று படத்தின் கதையை சுருக்கி பார்த்து விட முடியாது. இதை ஒரு இனவரைவியல் படமாக கூறலாம். அதற்குக் காரணம் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘வறுகறி’என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டு இருப்பதே. இயக்குநர் தமிழ் நேர்த்தியாகப் படத்தை செதுக்கியிருக்கிறார்.

கதாபாத்திரங்களின் உருவாக்கம் கனகச்சிதம். இந்த கதாபாத்திரம் இதைத்தான் பேசும், இப்படித்தான் நடந்து கொள்ளும் என்பதை பிசிறு தட்டாமல் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். அந்தந்த கதாபாத்திரங்களுக்கு அப்படியே உயிர் கொடுத்திருக்கின்றனர் மாணிக்கம், அஸ்வின், பிரசன்னா பாலசந்திரன், சுருளி, குமார், சாவித்திரி ஆகியோர்.

கேமராமேன் பிரதீப் காளி ராஜாவின் ஒளிப்பதிவு கோடை காலத்தையும், பொட்டல் காட்டையும், மனித முகங்களின் பாவனைகளையும், சண்டை காட்சிகளையும் மிக யதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார். பிந்துமாலினியின் இசையும், பாடலும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

படத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று வசனம். எழுத்தாளர் பெருமாள் முருகனும், படத்தின் இயக்குநரும் சேர்ந்து எழுதியிருக்கின்றனர். ‘இருட்டுக்குள் இருக்கின்ற வெளிச்சம் எங்களுத்தான் தெரியும்’ என்பது போன்ற வசனங்களும், ‘பள்ளிகூடத்துல டீச்சர் என்கிட்ட, நீ எல்லா கறியும் சாப்பிடுவியா?’னு கேட்டாங்க, அதுக்கு நான் ‘எல்லாமே சாப்பிடுவேன்’னு சொன்னதும் சிரிச்சாங்க. ‘ஏன் தாத்தா கறி சாப்பிட்றது தப்பா?’ என கேட்கும் வசனங்களும் ஒடுக்கப்பட்ட ஒருவரின் பன்முக வாழ்க்கையைப் பிரதிபலிக்கக் கூடியதாக இருக்கிறது.

சினிமா என்பது பொழுதுபோக்கு மட்டுமில்ல.. காலக்கண்ணாடி என்பதை உணர்ந்தோர் ஒவ்வொருவரும் காண வேண வேண்டிய படமிது

மார்க் 3.25/5

Related Posts