நாட்டில் உள்ள அனைவருக்கும், ‘கொரோனா’ பரிசோதனை இலவசம் – சுப்ரீம் கோர்ட் உத்தரவு!

நாட்டையே முடக்கி போட்டுள்ள கொரோனா பரிசோதனைக்கு மினிமம் ரூ 4,500 என்று நிர்ணயம் செய்திருந்த நிலையில் இப்பரிசோதனையை இலவசமாக செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சீனாவின் வூகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே மிரட்டி வருகிறது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் ஒருபுறம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும், மறுபுறம் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் அமெரிக்க உட்பட பல்வேறு நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இதனிடையே உலகளவில் உயிரிழப்பானது 83 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த கொடிய வகை கொரோனா வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,194-லிருந்து 5,274-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து 411 பேர் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கொரோனா நோய்த் தொற்றைக் கண்டறிவதற்கான அரசு மருத்துவமனைகள் மற்றும் சில தனியார் மருத்துவமனைகளில் செய்யப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை இலவசம் என்றால் தனியார் மருத்துவமனைகளில் 4500 கட்டணம் என அரசே நியமித்து இருந்தது. இருப்பினும், ஏழை மக்கள் 4500 ரூபாய் கொடுத்து எப்படி கொரோனா பரிசோதனை செய்துகொள்வார்கள் என்ற கருத்துக்கள் எழுந்தன.
இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கொரோனா பரிசோதனையை தனியார் மற்றும் அரசு பரிசோதனை மையங்களில் கட்டணம் இன்றி செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இலவச பரிசோதனை தொடர்பான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் கொரோனா பரிசோதனைக்கு தனியார் மையங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு விவகாரத்தில் அரசு மிகச்சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், கொரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்களே படைவீரர்கள் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி ஊரடங்கு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.