ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா-வில் அக்கவுண்ட் இருக்குதா – உங்களுக்கு? அப்ப இதை தெரிஞ்சே ஆகணும்
இந்தியாவில் உள்ள பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகள் சில இணைக்கப்பட்டு உள்ளன. இதைத்தொடர்ந்து, அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக அதிகரித்து இருக்கிறது.இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. கடந்த மார்ச் 31–ந் தேதி வரை இந்த வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருந்தால் அதில் குறைந்தபட்சம் 500 ரூபாய் இருக்கவேண்டும். சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர் காசோலை புத்தகம் பெற்றவராக இருந்தால், அவரது சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் 1,000 ரூபாய் இருப்பு இருக்கவேண்டும்.

இந்த மாதம் முதல் இந்த நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் ஆகிய 6 பெரு நகரங்களில் பாரத ஸ்டேட் வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து இருப்பவர்கள் தங்கள் கணக்குகளில் இனி குறைந்தபட்சம் மாதந்திர சராசரி இருப்பு தொகையாக ரூ.5,000 வைத்திருக்க வேண்டும். அந்த குறைந்தபட்ச இருப்பு தொகையை வைக்க தவறினால் அந்த வாடிக்கையாளருக்கு ரூ.50 முதல் ரூ.100 அபராதம் விதிக்கப்படும்.நகரங்கள் என்றால் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ட இருப்பு தொகையாக ரூ.3 ஆயிரமும், நடுத்தர நகரங்கள் என்றால் இருப்பு தொகையாக ரூ.2 ஆயிரமும் இருக்கவேண்டும்.
கிராமப்புறங்களில் உள்ள கிளைகளில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1,000 இருப்பு வைத்திருக்க வேண்டும். இந்த குறைந்தபட்ச மாதாந்திர சராசரி இருப்பு தொகையை வைக்க தவறினால், சம்பந்தப்பட்ட வாடிக்கையாளருக்கு ரூ.20 முதல் ரூ.50 அபராதம் விதிக்கப்படும். கடந்த 1–ந் தேதி முதல் இந்த புதிய நடைமுறை அமலுக்கு வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. என்றாலும் சுரபி, பிரதமரின் ஜன்தன் யோஜனா சேமிப்பு கணக்கு ஆகியவற்றுக்கு இது பொருந்தாது என்றும் கூறப்பட்டு உள்ளது.
காசோலை (செக்) புத்தகங்களை பொறுத்தமட்டில், நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் ஒரு நிதி ஆண்டில் முதல் 50 காசோலைகளை கட்டணம் எதுவும் இன்றி பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் ஒவ்வொரு காசோலைக்கும் ரூ.3 செலுத்தவேண்டி வரும்.
தற்போது 25 காசோலை தாள்கள் கொண்ட காசோலை புத்தகத்துக்கு 75 ரூபாயும் மற்றும் சேவை கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. 50 தாள்கள் கொண்ட காசோலை புத்தகத்துக்கு சேவை கட்டணம் நீங்கலாக ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
வங்கி லாக்கரை பயன்படுத்துவதற்கான கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. ஓர் ஆண்டில் 12 முறைக்கு மேல் லாக்கரை பயன்படுத்தினால், கூடுதலாக பயன்படுத்தும் ஒவ்வொரு தடவைக்கும் 100 ரூபாயும் சேவை கட்டணமும் வசூலிக்கப்படும். தனது சேமிப்பு கணக்கில் குறைந்தபட்சம் ரூ.25 ஆயிரம் இருப்பு வைத்திருக்கும் வாடிக்கையாளர் எத்தனை முறை வேண்டுமானாலும் ஏ.டி.எம். மெஷினை பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால் 5 தடவைக்கு மேல் ஏ.டி.எம்.மை பயன்படுத்தும் போது, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளபடி கட்டணம் வசூலிக்கப்படும். பாரத ஸ்டேட் வங்கியை தொடர்ந்து, பிற வங்கிகளும் இதேபோன்ற நடைமுறைகளை பின்பற்றும் என தெரிகிறது. ஏப்ரல் 24-ம் தேதிக்கு பின்னரே அபராதம் விதிக்கப்படும் எனவும் எஸ்பிஐ தெரிவித்து உள்ளது.


