சவுதி அரேபியாவில் காலவரம்பின்றி ஊரடங்கு நீடிப்பு!

கொரோனா வால் உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தியுள்ள ஊரடங்கை தளர்த்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். ஊரடங்கை தளர்த்தும் முன் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தியுள்ள நிலையில் சவுதி அரேபியாவில் காலவரம்பின்றி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அந்நாட்டு அரசர் சல்மான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கடந்த 4 நாள்களில் சுமார் 300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் அந்நாட்டு உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியிட்டது. இதைத் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு மறுஅறிவிப்பு வரும் வரை காலவரையறையின்றி நீட்டிக்கப் படுவதாக சௌதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் தலைநகர் ரியாத் உள்ளிட்ட பெரிய நகரங்களில் 24 மணி நேரமும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மற்ற பகுதிகளில், மார்ச் 23 முதல் (மாலை 3 மணி – காலை 6 மணி) ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
இதுவரை அங்கு 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 4,033 நோய்த் தொற்றுகள் பதிவாகியுள்ளன. வளைகுடா நாடுகளில் சௌதியில்தான் கரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. சௌதியைப் போன்று மற்ற வளைகுடா நாடுகளும் இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர், “பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவை தளர்த்துவதற்கு முன் அரசாங்கங்கள் தீவிர ஆலோசனை மேற் கொள்ள வேண்டியது அவசியம். திடீரென்று ஊரடங்கை தளர்த்தினால் கரோனா வைரஸ் பரவல் மிக தீவிரமாக வேகமெடுக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசாங்கங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்”என தெரிவித்துள்ளார்.
மேலும் உலக நாடுகள் கரோனா வைரஸ் உடன் போராடி வரும் சூழ்நிலையில் பல ஏழை நாடு களுக்கு உணவு, மருத்துவ கருவிகள் ஆகியவற்றை வினியோகிக்கும் பணி தொடர்ந்து நடைபெற வேண்டியது அவசியம். இதற்கு குறைந்தபட்சம் 28 கோடி டாலர் செலவாகும். எனவே ஐ.நாவின் இந்தப் பணி தொடர்ந்து நடைபெற உலக நாடுகள், நிறுவனங்கள், தனிநபர்கள் போதுமான நிதியுதவி வழங்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றும் வேர்ல்ட் ஹெல்த் லீடர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியெசஸ் தெரிவித்தார்.