வருகிற ஜூனில் எனது மனைவி சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்! – நடராஜன் பகீர்
ஆட்சி அதிகாரத்தையும், கட்சி பொறுப்பையும் இழந்து விட்ட சசிகலா தற்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயிலில் அடைப்பட்டு இருக்கும் நிலையில் அவரது கணவர் நடராஜன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பின்னர் முதன்முறையாக தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பொங்கலை முன்னிட்டு சிறப்பு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியின் போது, ‘ உறுப்பு மாற்று சிகிச்சை செய்துகொள்ளும் போது எந்த பயமும் இல்லை, என்னுடைய தேவைகளையும் ஆசைகளையும் வரையறுத்துக் கொண்டதால் எனக்கு உயிர் போய்விடுமோ என்ற பயம் எப்போதுமே இருந்ததில்லை. இப்போது என் உடல்நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதத்தில் தமிழகம் முழுவதும் என்னுடைய மனைவி சசிகலாவுடன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். ஒரு நாள் பரோல் வாங்கியாவது இந்த சுற்றுப்பயணம் மேற்கொள்வோம், தமிழகத்தை சுற்றி வர ஒரு நாள் போதாதா?’ என்றெல்லாம் கேட்டார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் அளித்த பேட்டியில் சாராம்சம் இதோ:
ஜெயலலிதாவின் மரணத்தை விசாரிக்க ஆணையம் அமைத்ததே தவறு. மக்களுக்கு பல சந்தேகங்கள் எழும். ஆணையம் அமைத்ததால் ஜெயலலிதா மரணத்தில் என்ன தெளிவை பெற்று விட்டார்கள். நாளையே ஆணையம் தீர்ப்பு தந்தாலும் அதனால் எதுவும் நடக்கப் போவதில்லை.
ஜெயலலிதாவின் உழைப்பில் 2016-ல் வந்தது அ.தி. மு.க. அரசு. எனவே அ.தி. மு.க. அரசு நீடிக்க வேண்டும் என்றே சசிகலா விரும்புகிறார். ஆனால் எடப்பாடி பழனிசாமி நீடிப்பாரா? என்பதில்தான் சசிகலா மாறுபட்டிருக்கிறார். இந்த அரசின் செயல்பாடு மக்கள் விரோத செயல்பாடு என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு.
இன்றும் எனக்கு நாடு முழுவதும் செல்வாக்கு இருக்கிறது. ஒரே ஒரு போன் போட்டு என்னுடைய காரியத்தை சாதிக்க முடியும். ஆனால் எந்த ஒரு தகுதியுமே இல்லாமல் எடப்பாடி பழனிசாமி முதல்வர் நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அவர் தன்னை காப்பாற்றிக் கொள்ள மற்றவர்களை மிரட்டுவது ஏற்பதற்கில்லை.
ஜெயலலிதா வாசித்த அறிக்கைகள் எல்லாமே நான் எழுதி கொடுத்தவை தான். நான் போட்டு கொடுத்த இலவச திட்டங்கள்தான் அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றன. ஜெயலலிதாவிடம் வாழ்நாள் முழுவதும் இருந்த நல்ல விஷயம் நான் எழுதிக் கொடுத்த அனைத்து விஷயங்களையும் ஒரு கமா, புல்ஸ்டாப் இல்லாமல் அப்படியே பின்பற்றி வெற்றியை கண்டார்.
எடப்பாடி பழனிசாமி தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். அப்படி மாற்றிக் கொள்ளாவிட்டால் அவரை மாற்ற நான் தயங்க மாட்டேன். என்னுடைய மனைவியிடம் இருந்து அதற்கான ஒப்புதலை பெற்றுக் கொண்டு எப்போது வேண்டுமானாலும் நான் அரசியல் களத்தில் இறங்குவேன்.
சசிகலா தன்னுடைய தோழி என்று ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதற்கு மேல் என்ன செக்யூரிட்டி தேவை என்று அனைவருமே கேள்வி எழுப்புகின்றனர். சசிகலா என்னுடன் வாழ வேண்டும் என்று அழைத்து வர என்னுடைய தாயாரும், சசிகலாவின் தாயாரும் போயஸ் கார்டன் சென்றனர்.
அப்போது ஜெயலலிதா தட்டு நிறைய வைர நகைகளை வைத்து எடுத்து வந்து இவையெல்லாம் சசிகலா விற்காக செய்திருக்கிறேன் என்று சொன்னார். ஆனால் அதற்கு சசிகலாவின் தாயார் கிருஷ்ணவேணி இதெல்லாம் வேண்டாம் என் மகள் அவளுடைய கணவருடன் தான் வாழ வேண்டும் என்று சொன்னார். ஆனால் ஜெயலலிதாவிற்கு சசிகலா தன்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
இப்போது எனது உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. வருகிற ஜூன் மாதத்தில் எனது மனைவி சசிகலாவுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன். அதற்காக ஒரு நாளோ ஒரு வாரமோ பரோல் கேட்பேன்.
வருமான வரி சோதனை சட்டப்படி இருந்தால் ஏன் மற்றவர்கள் மீது அந்த சட்டம் பாயவில்லை? ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள் என்று நானே பட்டியல் தருகிறேன்.
தினகரனை மக்கள் ஓரளவு ஏற்றுக் கொண்டுள்ளார்கள். மத்திய – மாநில அரசுகள் மீது வெறுப்பில் இருக்கும் மக்கள் ஒரு மாற்றாக தினகரனை நினைக்கிறார்கள்.
கிருஷ்ணப்பிரியா தவறாக வழி நடத்தப்படுகிறார். தினகரனை கிருஷ்ணப்பிரியா விமர்சிப்பது தவறு. பொது வாழ்வில் இருக்கும் தினகரனை விமர்சிக்க கூடாது. விரைவில் நான் கிருஷ்ணபிரியாவை சந்திப்பேன்.
ஜெயலலிதாவின் வீடியோவை வெளியிட்ட தில் தவறு இல்லை. ஆஸ்பத்திரியில் பார்த்து கொண்டிருந்த அமைச்சர்களே ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்றதால் தான் வீடியோவை இப்போது வெளியிட வேண்டிய தாயிற்று. அது ஒரு ஆவணப்படம். அவ்வளவுதான்.