சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பிரச்னை பேசித் தீர்த்தாச்சு! – பார் கவுன்சில் தகவல்!
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப் ஆகியோர் நேற்று முன்தினம் திடீரென போர்க்கொடி உயர்த்தினர். வழக்குகளை ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுவதாக அவர்கள் செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவித்தனர். சுப்ரீம் கோர்ட்டு வரலாற்றிலேயே முதல் முறையாக நிகழ்ந்துள்ள இந்த நீதிபதிகளின் மோதல் போக்கு, நாடு முழுவதும் மிகப்பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் சாவந்த், சந்துரு, ஏ.பி.ஷா, சுரேஷ் உள்ளிட்ட நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.5 மூத்த நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை ஒப்படைக்க வேண்டும். ஒரு சில நீதிபதிகளிடம் மட்டும் முக்கிய வழக்குகளை ஒப்படைக்கக்கூடாது என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளனர்.
இதனையடுத்து நீதிபதிகள் இடையேயான பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வர இந்திய பார் கவுன்சில் 7 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழு, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை நேற்று (ஜன.,14) சந்தித்து பேசியது. சுமார் 50 நிமிடம் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.
இந்த சந்திப்பிற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பார் கவுன்சில் குழு, சுப்ரீம் கோர்ட்டில் நிலவும் பிரச்னைகள் விரைவில் சரி செய்யப்படும் என்றது. இந்நிலையில் இன்று (ஜன.,15) செய்தியாளர்களிடம் பேசிய இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன்குமார் மிஸ்ரா, நீதிபதிகள் அவர்களுக்குள்ளேயே பேசி பிரச்னைகளை தீர்த்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், நீதிபதிகள் அதிருப்தியை அரசியல் ஆக்குவதை யாரும் விரும்பவில்லை. நீதிபதிகள் பிரச்னைகளை பேசி தீர்த்துக் கொண்டதற்கு நன்றி. சுப்ரீம் கோர்ட்டில் உள்ள அனைத்து நீதிமன்ற அறைகளும் வழக்கம் போல், நல்லமுறையில் செயல்பட்டு வருகின்றன. இதில் பார் கவுன்சிலின் பங்கு சிறியது. தங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என நீதிபதிகள் கூறி உள்ளனர்.