தி லெஜெண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா-(கார்ட்டூன் பட) விமர்சனம்!
இந்திய சமய மரபில் உள்ள இரண்டு இதிகாசங்களில் ஒன்று இராமாயணம். மொழி, பிராந்தியம் என எல்லா வேறுபாடுகளையும் கடந்து, மக்கள் மனதில் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கும் காவியம் ராமாயணம். இராமாயணத்தைப் பாடாத கவிஞர்கள் இல்லை. எழுதாத எழுத்தாளர்கள் இல்லை. பேசாத உபன்யாசகர்கள் இல்லை. எனவேதான் ராமாயணத்தைப் பாரத தேசத்தில் எல்லோரும் அறிந்து இருக்கிறார்கள்.அத்துடன் பழங்காலத்தில் தெருக்கூத்து, நாடகம், இலக்கியம் வாயிலாக மக்களிடையே இந்த ராமாயணம் பரப்ப பட்டது. சினிமா வந்த பிறகு கருப்பு வெள்ளை காலம் முதல் இன்றைய டிஜிட்டல் காலம் வரை ராமாயணம் திரைப்படமாக எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த ராமாயண கதையால் ஈர்க்கப்பட்ட ஜப்பானியர்கள் ராமாயண கதையை அனிமேஷன் படமாக எடுத்துள்ளார்கள். குறிப்பாக புத்தக வாசிப்பு குறைந்து வரும் இத்தகைய சூழ்நிலையில், ராமாயணத்தை தற்போதைய தலைமுறை இளைஞர்களிடம் கொண்டுச் சேர்க்கும் முயற்சியாக, எளிமையான கதை சொல்லல் மூலம், அனிமேஷன் காட்சிகளாக விவரித்திருப்பது சுவாரஸ்யமாகவும் ரசிக்கும்படியும் இருக்கிறது.
கதையை சொல்லவும் வேண்டுமா ? ராமனின் மனைவி சீதையை ராவணன் கடத்திச் சென்று இலங்கை அசோகவனத்தில் சிறை வைக்கிறான். சீதையை ராமன் எப்படி வானர படை கொண்டு போர் தொடுத்து மீட்டு வருகிறார் என்பது தான் கதைக் கரு.என்னதான் கார்ட்டூன் வடிவில் சொல்லப்பட்டிருந்தாலும் ராமன், சீதை, லட்சுமணன், ராவணன், அனுமன் போன்ற கதாபாத்திரங்களுக்கு வரையப்பட்டிருக்கும் உருவங்கள் அப்படியே அந்த கதாபாத்திரங்களை நேரில் பார்ப்பது போன்ற ஒரு தோற்றத்தை அளித்திருப்பது ஆச்சரியம்.
ராமரின் முகத்தில் அன்பும், பரிவும், பாசமும் வெளிப்படுவது மனதை வருடுகிறது. அதேபோல் சீதை தோற்றத்தில் எளிமையும், அமைதியும் பொங்குவது அழகு. ராவணன் கதாபாத்திரத்திற்கு ஆஜானபாகு தோற்றம், முறுக்கு மீசை, கட்டு மஸ்தான உடற்கட்டு கம்பீரமான முக பாவணைகள் என உருவம் பயமுறுத்துகிறது. அது போன்று கும்பகர்ணன் விண்ணுக்கும் மண்ணுக்கும் உடல் பெருத்து நிற்கும் காட்சி சிலிர்க்க வைக்கிறது.போர் முனையில் கும்பகர்ணன் நடந்து வருவதும் அவரது கால் கட்டை விரலுக்கும் கீழாக வானரப் படைகள் உருண்டு ஓடுவதெல்லாம் கற்பனைக் கெட்டாத கலகலப்பான காட்சிகளாக மாறி இருக்கிறது.
அசோகவனத்தில் இருக்கும் சீதையை அனுமன் கண்டு “நான் ராம தூதன்” என்பதை அறிவிப்பது, ராவணனிடம் ராமர் சார்பில் அங்கதன் தூது செல்வது, கும்ப கர்ணன் மகன்கள், கும்பன், நிகும்பன் ராம படைகளை எதிர்த்து போர் புரிவது, இந்திரஜித் மாய வித்தை போர்,சுக்ரீவன் தாக்குதல் எல்லாமே ஒன்றுக்கொன்று குறைவில்லாமல் போர்க்களத்துக்கு ரசிகர்களை அழைத்துச் செல்கிறது. குறிப்பாக ராமர் உடன் ராவணன் 10 தலைகளுடன் மோதும் காட்சி இதுவரை காணாத காட்சியாக பிரமிக்க வைக்கிறது.லட்சுமணன் அடிபட்டு விழுந்தவுடன் அவரை கண்விழிக்க வைப்பதற்காக இமய மலையை அனுமன் பெயர்த்து கொண்டு வரும் காட்சிகள் கூட கண்களை அகல விரிக்க செய்கிறது.
ராவணனை ராமன் அழித்த பிறகு இலங்கையின் அரச பொறுப்பு யாரிடம் ராமர் ஒப்படைக்கிறார் என்பது மேலோட்டமாக. ராமாயணம் படித்தவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை அந்த பொறுப்பை ராமர் ஒப்படைக்கும் காட்சியும் தீப்பற்றி எரிந்த இலங்கை எப்படி இயல்பு நிலைக்கு திரும்பியது என்பதையும் கற்பனைக்கு எட்ட செய்கிறது.
ராமர் -ருக்கு குரல் கொடுத்திருக்கும் செந்தில் குமார், சீதா கதா பாத்திரத்திற்க்கு குரல் கொடுத்திருக்கும் டி.மகேஷ்வரி, ராவணனுக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார், லக்ஷமனனுக்கு குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், ஹனுமானுக்கு குரல் கொடுத்த லோகேஷ் மற்றும் ராமாயண கதையை விவரிக்கும் ரவூரி ஹரிதா என அனைவரும் தங்களது பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
சிறுவர்களுக்கு(ம்) பிடித்த 2டி அனிமேஷன் மூலம் போர்க் காட்சிகள் மற்றும் அதில் ஈடுபடும் வானரப் படைகளின் செயல்கள் நிச்சயம் சகலரையும் மகிழ்விக்கும். ஒலி வடிவமைப்பும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள் மற்றும் அதில் பயன்படுத்தியிருக்கும் வண்ணங்கள் அனைத்தும் சிறுவர்களையும் தாண்டி பெரியவர்களையும் நிச்சயம் ரசிக்க வைக்கும்.
மார்க் 3/5


