பூமிக்குக் கீழே ஒரு சொர்க்கம்: மே 14 -நிலத்தடி வாழ்க்கை தினம்!

பூமிக்குக் கீழே ஒரு சொர்க்கம்: மே 14 -நிலத்தடி வாழ்க்கை தினம்!

வீன உலகம் வானளாவிய கட்டிடங்களை நோக்கித் தன் பார்வையைத் திருப்பிக் கொண்டிருக்கும் வேளையில், “ஏன் நாம் பூமிக்கு மேலே வாழ வேண்டும்?” என்ற வித்தியாசமான கேள்வியை முன்வைத்தவர் மால்கம் வெல்ஸ். ஒவ்வொரு ஆண்டும் மே 14-ஆம் தேதி கடைபிடிக்கப்படும் ‘நிலத்தடி வாழ்க்கை தினம்’ (Underground Life Day), மண்பரப்பிற்கு அடியில் ஒளிந்திருக்கும் ஒரு பிரம்மாண்டமான உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்துகிறது.

யார் இந்த மால்கம் வெல்ஸ்?

அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் பிறந்த மால்கம் வெல்ஸ் (1926-2009) ஒரு கட்டிடக்கலை நிபுணர் மட்டுமல்ல; சிறந்த எழுத்தாளர், கேலிச்சித்திரக்காரர் மற்றும் சூரியமின்சக்தி ஆலோசகர் என பன்முகத் திறமை கொண்டவர். பூமியின் மேற்பரப்பு என்பது தாவரங்களுக்கும், பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே சொந்தமானது என்று அவர் ஆணித்தரமாக நம்பினார். மனிதர்கள் தங்கள் வீடுகளுக்காகவும் தொழிற்சாலைகளுக்காகவும் இயற்கையின் வாழ்வாதாரங்களைப் பாழ்படுத்துவதை அவர் அறவே வெறுத்தார்.

புரட்சிகரமான ‘நிலத்தடி வாழ்க்கை முறை’

இதற்குத் தீர்வாக அவர் முன்வைத்த கொள்கைதான் ‘நிலத்தடி வாழ்க்கை முறை’. வெறும் பேச்சோடு நில்லாமல், பூமிக்குக் அடியில் ஒரு வீட்டைத் தானே கட்டி அதில் குடியேறி வாழ்ந்தும் காட்டினார். இவருடைய கொள்கையால் ஈர்க்கப்பட்ட சுமார் 6,000 பேர், தங்கள் வீடுகளைத் தரைமட்டத்திற்குக் கீழே கட்டி வாழத் தொடங்கினர். 1974-ல் இது ஒரு தனி இயக்கமாகவே உருவெடுத்தது.

இந்த நாளில் நாம் செய்ய வேண்டியவை என்ன?

மால்கம் வெல்ஸ் இந்தப் பொன்னான நாளில் செய்ய வேண்டியதாக சில சுவாரஸ்யமான மற்றும் ‘வித்தியாசமான’ வழிமுறைகளைக் கூறுகிறார்:

  • வேலைக்குப் போவதை நிறுத்திவிட்டு, தரைமீது இருக்கும் உங்கள் வீட்டின் கூரையில் சிறிதளவு மண்ணைப் பரப்புங்கள்.

  • பூமிக்கடியில் வாழும் எலி, நண்டு போன்ற உயிரினங்களை நம் உடன்பிறப்பாகக் கருதுங்கள்.

  • உணவில் முள்ளங்கி போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

  • விலையுயர்ந்த எதையாவது மண்ணில் புதைத்து வையுங்கள் அல்லது குகைகளில் சில நாட்களைக் கழியுங்கள்.

  • குறைந்தபட்சம் ஒரு சுரங்கப் பாதையிலாவது இறங்கி நடந்து இந்த நிலத்தடி உலகத்தை உணருங்கள்.

இயற்கையின் சமநிலை: மண்ணுக்கு அடியில் உழைக்கும் வீரர்கள்

இந்தத் தினம் வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, நம் பாதங்களுக்குக் கீழே இயங்கும் அதிசய உலகத்தை நினைவூட்டும் ஒரு தருணமும் கூட. மண்ணுக்கு அடியில் வாழும் மண்புழுக்கள், எறும்புகள் மற்றும் நுண்ணுயிரிகள் நிலத்திற்குத் தேவையான காற்றோட்டத்தை உறுதி செய்கின்றன. இவை கழிவுகளை மக்கச் செய்து மண்ணின் வளத்தை இயற்கை முறையில் அதிகரிக்கின்றன.

காடுகள் செழிப்பதற்கும், நாம் உண்ணும் உணவுப் பயிர்கள் வளர்வதற்கும் அடிப்படையாக விளங்கும் இந்த நிலத்தடி வாழ்வாதாரத்தைப் போற்றிப் பாதுகாப்பது நம் கடமையாகும். ரசாயனங்களால் மண் நஞ்சாவதைத் தடுத்து, இயற்கையின் சமநிலையைக் காக்க உறுதியேற்பதே இந்த ‘நிலத்தடி வாழ்க்கை தினத்தின்’ மிக முக்கியமான நோக்கமாகும்.

பூமிக்கு மேலே வாழ்ந்தாலும், பூமிக்குக் கீழே இருக்கும் அந்த அமைதியான உழைப்பாளிகளின் பங்களிப்பை அங்கீகரிப்போம்!

நிலவளம் ரெங்கராஜன்

Related Posts