’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’- விமர்சனம்!

’குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’- விமர்சனம்!

கோலிவுட்டின் செட் பிராப்பர்ட்டியான யோகிபாபு ஒரு அரசியல்வாதி. அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் போது, வீட்டில் வேலை செய்ய வந்த நார்த் இண்டிய பெண்ணுடன் சகவாசம் வைத்துக் கொள்கிறார். இதனால் அவருக்கும் ஒரு குழந்தை பிறக்கிறது. இதை அடுத்து அந்த வட இந்திய பெண்ணை வீட்டை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள். அவரது மகன் தனது தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசையோடு வளர்கிறார். மூத்த மனைவியின் மகனும் அரசியலில் தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று வெரியோடு வளர்கிறார். இவர்கள் இருவரும் ஒரே பள்ளியில் படிக்க, பள்ளிக் காலம் முதலே, தலைவர், விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான அம்சங்களுடன் வளர்கிறார்கள். இவர்கள் நினைத்தது போல் இவர்களது எதிர்காலம் அமைந்ததா?, இல்லையா? என்பதை தமிழக அரசியலையும், குடும்ப அரசியலையும் மையமாக வைத்துக் கொண்டு நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருப்பது தான் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ படக் கதை(யாம்).

சிறுவர் சிறுமியரை சுற்றி நடக்கும் கதையாக இருப்பதால் யோகி பாபு போன்ற ஒரு மெகா ஸ்டார் இருந்துவிட்டால் படத்துக்கு பலமாக இருக்கும் என்று அவரை முன்னிலைப்படுத்தி விட்டாராம் டைரக்டர் என் .சங்கர் தயாள். அந்த வகையில் கமிட் ஆன் யோகி பாபு எப்போது கால்ஷீட் கொடுக்கிறாரோ அப்போதெல்லாம் அவரை வைத்துப் படத்தை எடுத்திருப்பது அப்பட்டமாகவே தெரிகிறது. அத்துடன் வழக்கம் போல், உடல் கேலி செய்து சிரிக்க வைக்க முயற்சித்து சில இடங்களில் வெற்றி பெற்றாலும், பல இடங்களில் அவரது காமெடிக் காட்சிகள் கடியாக மாறி வலியை கொடுக்கிறது.

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான் இருவரும் கேமரா பயம் இல்லாமல் மிக தைரியமாக நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கான சில காட்சிகள் அவர்களது வயதை மீறியதாக இருந்தாலும், அதில் எந்தவித தடுமாற்றமும் இன்றி மிக தெளிவாக நடித்திருக்கிறார்கள்.ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை நினைவு கூர்வது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் சிறுமி ஹரிகா பெடடாவின் திரை இருப்பும், நடிப்பும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில் முகம் காட்டியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்தில், அரசியல் கட்சித் தலைவராக நடிப்பில் அமர்க்களப்படுத்தி யிருக்கிறார். அவரது காட்சிகளில் காமெடி இல்லை என்றாலும், ”எத்தனை பேர் வந்து உடைத்தாலும் இறுதியில் காணாமல் போவது அவர்கள் தான், என் கட்சி இல்லை” என்ற அவரது வசனத்தை சாதாரணமாக பேசி கைதட்டல் பெற்றுவிடுகிறார்.சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் அவர்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

சாதக பறவைகள் சங்கர் இசை அமைத்திருக்கிறார். பாடல்கள் மோசமில்லை. ஜெ லட்சுமன் ஒளிப்பதிவும் பளிச்சிடுகிறது.

அருண்குமார் சம்பந்தம், சங்கர் தயாள் என் தயாரித்திருக்கிறார்கள்.ஜனாதிபதி ,பிரதமர் பதவி உள்பட முதல்வர் பதவியை இவ்வளவு சல்லிசான சிந்தனையில் வடிவமைத்து இருக்க வேண்டாம். லாஜிக் கொஞ்சம் கூட இல்லாமல் வெறும் மேஜிக் என்று நினைத்து தான் தோன்றித்தனமான காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர்.

தமிழக போட்டி அரசியல் மற்றும் குடும்ப அரசியலை, சிறுவர்கள் மூலம் நகைச்சுவையாக சொல்ல முயன்றிருப்பவர் இன்னும் கொஞ்ச்சம் மெனக்கெட்டிருக்கலாம்.

மார்க் 2.25/5

error: Content is protected !!