நம்ம பி எம் மோடியோட வீடு இருக்கற சாலை – பொது நலப் பாதை-யாம்!
போன வருஷம்தான் டெல்லியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் வாழ்ந்த வீடு இருந்த அவுரங்கசீப் சாலைக்கு கலாம் பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில் டெல்லியில் ரொம்ப பிரசித்தி பெற்ற ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயரும், லோக் கல்யாண் மார்க் என்று மாற்றப்பட்டு விட்டது. இந்த சாலையிலுள்ள 7-ம் எண் பங்களாவில்தனர் பிரதமர் நரேந்திர மோடி வசித்து வருகிறார்.லோக் கல்யாண் மார்க் என்றால் பொது நல பாதை என்று அர்த்தம் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி மாநகராட்சி கவுன்சில் சிறப்பு கூட்டம் மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், பாரதீய ஜனதா கட்சி எம்.பி., மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்கள் டெல்லி மாநகராட்சியின் உறுப்பினர் பதவியும் வகிக்கின்றனர். இந்த கூட்டத்தில் டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயரை லோக் கல்யாண் மார்க் என்று மாற்றுவதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த கூட்டத்துக்கு பின்னர் கெஜ்ரிவால் நிருபர்களிடம் பேசுகையில், ’டெல்லி மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் பெயர் மாற்ற விவகாரத்தில் பல்வேறு யோசனைகள் கூறப்பட்டன. ஆனால் லோக் கல்யாண் மார்க் என்று பெயர் மாற்றுவதற்கு கருத்தொற்றுமை ஏற்பட்டது’ என கூறினார்.
பாரதீய ஜனதா எம்.பி., மீனாட்சி லேகி கூறும்போது, ’முழுமையான கருத்தொற்றுமை ஏற்பட்டு, ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயரை லோக் கல்யாண் மார்க் என மாற்றுவது எனக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது’ என்றார். இவர்தான், ரேஸ் கோர்ஸ் சாலையின் பெயரை மாற்ற வேண்டும் என்று முதலில் குரல் கொடுத்தார். ரேஸ் கோர்ஸ் சாலை என்பது தற்போதைய கலாசாரத்துடன் பொருந்தாது என்பதால், ஏகத்மா மார்க் (ஒருங்கிணைந்த பாதை) என மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால் இதற்கு ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.யும், மாநகராட்சி உறுப்பினருமான சுரிந்தர் சிங் எதிர்ப்பு தெரிவித்து, பரம்வீர் சக்கர விருது பெற்ற விமானப்படை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் நிர்மல்ஜித் சிங் பெயரை சூட்டுமாறு கோரினார்.கடைசியில், இப்போது ரேஸ்கோர்ஸ் சாலை அனைவரின் ஒருமித்த ஆதரவுடன் லோக் கல்யாண் மார்க் என மாற்றப்படுகிறது.


