ஷாப்பிங் செல்வது என்பது பலருக்கும் ஒரு அலாதியான இன்பம். ஆனால், கடைகளுக்குச் சென்று விதவிதமான பொருட்களைத் தேர்ந்தெடுத்து வாங்கிவிட்டு, கைகளில் ஏகப்பட்ட பைகளுடன் கூட்ட நெரிசலில் நடந்து வருவதை நினைத்தாலே பாதி பேருக்கு வியர்த்துவிடும். ‘நமக்கு உதவியாக பைகளைத் தூக்கி வர ஒரு ஆள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?’ என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? அப்படி யோசித்தவர்களின் மைண்ட் வாய்ஸை அப்படியே பிசினஸ் ஐடியாவாக மாற்றி, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது ஒரு புதிய இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம்.
டெல்லியின் பரபரப்பான சந்தைகளில் அறிமுகமாகியுள்ள இந்த வினோதமான, அதே சமயம் மிகவும் பயனுள்ள சேவையின் பெயர் தான் ‘கேரிமேன்’ (CarryMen). “நீங்கள் ஷாப்பிங் செய்யுங்கள், நாங்கள் சுமக்கிறோம்” (You Shop, We Carry) என்ற எளிய தாரக மந்திரத்துடன் இந்த நிறுவனம் களம் இறங்கியுள்ளது.

சுமை தாங்கியாக மாறும் கேரிமேன்: எப்படிச் செயல்படுகிறது?
பண்டிகை காலங்களிலோ அல்லது வார இறுதி நாட்களிலோ தியாகராய நகர் ரங்கநாதன் தெரு போன்ற அல்லது டெல்லியின் கரோல் பாக், சாந்தினி சவுக் போன்ற அதீத கூட்ட நெரிசல் மிகுந்த சந்தைகளுக்குச் செல்லும்போது, கைகளில் கனமான பைகளைச் சுமப்பது பெரும் அவஸ்தை. இது வயதானவர்களுக்கும், குழந்தைகளுடன் வருபவர்களுக்கும் கூடுதல் சவாலாக மாறிவிடுகிறது.
இந்தத் துயரத்திற்குப் தீர்வாகத் தான் ‘கேரிமேன்‘ நிறுவனம் தனது பயிற்சி பெற்ற ஊழியர்களைக் களமிறக்குகிறது. நீங்கள் ஆன்லைன் மூலமாகவோ அல்லது குறிப்பிட்ட சந்தைப் பகுதிகளில் இருக்கும் இவர்களது மையங்களை அணுகியோ ஒரு ‘கேரிமேன்’ அசிஸ்டன்ட்டை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். நீங்கள் கடைகளுக்குள் சென்று பொருட்களைத் தேர்வு செய்ய, உங்கள் நிழல் போல பின் தொடரும் இந்த உதவியாளர், நீங்கள் வாங்கும் அனைத்துப் பைகளையும் பத்திரமாகத் தனது கைகளில் சுமந்து வருவார். இதனால் எந்தவித களைப்பும் இன்றி, கைகளில் பாரமில்லாமல் வாடிக்கையாளர்கள் நீண்ட நேரம் நிம்மதியாக ஷாப்பிங் செய்ய முடிகிறது.
நேரத்திற்கு ஏற்ப கட்டணம்: பட்ஜெட் பிரண்ட்லி பேக்கேஜ்கள்
மக்களின் தேவைக்கேற்ப மிகக் கச்சிதமான கட்டண விவரங்களை இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. வைரலாகி வரும் இவர்களது துண்டுப் பிரசுரங்களின்படி, 30 நிமிடங்களுக்கு வெறும் 79 ரூபாய் மட்டுமே வசூலிக்கப்படுகிறது. ஒரு மணி நேரச் சேவைக்கு 119 ரூபாயும், இரண்டு மணி நேரத்திற்கு 219 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூன்று மணி நேரத்திற்கு 319 ரூபாய் மற்றும் நான்கு மணி நேரத்திற்கு 399 ரூபாய் என நடுத்தர மக்களும் பயன்படுத்தும் வகையில் மிகக் குறைவான விலையிலேயே இந்தச் சேவை வழங்கப்படுகிறது. (சமூக வலைதளங்களில் சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு 149 ரூபாய் என்ற அளவிலும் இது பேசப்பட்டு வருகிறது). பயிற்சி அளிக்கப்பட்ட மற்றும் நம்பகமான நபர்கள் மட்டுமே இதில் பணியமர்த்தப்படுவதால், வாங்கிய பொருட்கள் திருடப்பட்டு விடுமோ என்ற பயமும் வாடிக்கையாளர்களுக்கு இருப்பதில்லை.
வெறும் பை தூக்குவது மட்டுமல்ல: அசத்தும் கூடுதல் சேவைகள்
வாடிக்கையாளர்களைக் கவர இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனம் வெறும் பைகளைச் சுமப்பதோடு நின்றுவிடாமல், சில சுவாரசியமான கூடுதல் (Add-ons) வசதிகளையும் வழங்குகிறது.

-
குழந்தைகளுக்கான உதவி: குழந்தைகளுடன் ஷாப்பிங் வருபவர்களுக்கு வசதியாக ‘பேபி பிராம்’ (Baby Pram) மற்றும் ‘பேபி கேரியர்’ (Baby Carrier) போன்ற உபகரணங்களை இவர்களே வழங்கி உதவுகிறார்கள்.
-
அவசரத் தேவைக்கான வசதிகள்: மொபைல் சார்ஜ் தீர்ந்துபோனால் சார்ஜ் செய்து கொள்ள ‘மொபைல் சார்ஜிங்’ வசதி, திடீரென மழை பெய்தாலோ அல்லது வெயில் சுட்டெரித்தாலோ பாதுகாத்துக் கொள்ள ‘குடை வசதி’ ஆகியவற்றை இந்த உதவியாளர்கள் எப்போதும் கையில் வைத்திருக்கிறார்கள்.
-
ஓய்வெடுக்க மடிக்கக்கூடிய நாற்காலி: ஷாப்பிங் செய்து களைப்படைந்து போனால், அங்கேயே அமர்ந்து ஓய்வெடுக்க ஏதுவாக ‘ஃபோல்டபிள் சிட்டிங் சேர்’ (Foldable Sitting Chair) வசதியையும் இவர்கள் உடன் எடுத்து வருகிறார்கள்.
நடைமுறைச் சாத்தியங்களும் எதிர்கால வரவேற்பும்
இந்த ஸ்டார்ட்-அப் ஐடியா தற்போது இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. “இது போன்ற சேவைகள் இந்தியாவின் அனைத்துப் பெருநகரங்களுக்கும், குறிப்பாக சென்னை போன்ற வணிக நகரங்களுக்கும் மிக அத்தியாவசியமானது” எனப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதே சமயம், கூட்ட நெரிசலில் இந்த உதவியாளர்களை எப்படித் தொடர்பில் வைத்திருப்பது, பொருட்களின் பாதுகாப்பை முழுமையாக எப்படி உறுதி செய்வது போன்ற சவால்களும் இதில் உள்ளன.
எது எப்படியோ, சாமானிய மக்களின் அன்றாடப் சிரமத்தைக் கண்டறிந்து, அதற்குத் தொழில்நுட்பம் மற்றும் மனித உழைப்பின் மூலம் தீர்வு காண முயலும் இதுபோன்ற ஸ்டார்ட்-அப் முயற்சிகள், இந்தியாவின் புதுமையான வணிக வளர்ச்சிக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும் என்பதில் சந்தேகமில்லை.
நிம்மி

