June 2, 2023

குடியரசுத் தலைவர் தேர்தல்-எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டம்!

நாட்டின் 15-வது குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த மாதம் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொதுவேட்பாளரை நிறுத்துவது குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு உள்ளிட்ட 22 மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் எதிர்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் துவங்கியுள்ளது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, திமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.

எனினும் முக்கிய மாநிலக் கட்சிகளான ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் மம்தா அழைப்பை புறக்கணித்துள்ளன.

குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்வுக்கு பிறகு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. இதேபோலம் மாநிலத்தின் நலன் கருதி முதலமைச்சர் தக்க தருணத்தில் நல்ல முடிவு எடுப்பார் என பிஜு ஜனதா தளம் கூறியுள்ளது.

அடிசினல் ரிப்போர்ட்:

இந்த 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குடியரசுத்தலைவர் தேர்தல் 16ஆவது தேர்தலாகும். இந்த தேர்தலில், 4809 உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். மாநிலங்களவையில் 233 உறுப்பினர்களும், மக்களவையில் 543 உறுப்பினர்களும், சட்டப் பேரவையில் 4033 உறுப்பினர்களும் உள்ளனர்.

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும், சட்டமன்ற உறுப்பினருக்கும் வாக்களிக்கும்போது வாக்கு மதிப்பு உண்டு.

இம்முறை ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் ஒவ்வொரு வாக்கின் மதிப்பு 700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு அந்த மாநிலத்தின் மக்கள் தொகையைப் பொருத்தது.

உதாரணமாக, உத்தரபிரதேசத்தில், ஒவ்வொரு சட்டப் பேரவை உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு 208 ஆகவும், மிசோரமில் எட்டு மற்றும் தமிழ்நாட்டில் 176 ஆகவும் இருக்கும். சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த வெயிட்டேஜ் 5 , 43,231 ஆக இருக்கும்.

நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் வாக்குகளின் வெயிட்டேஜ் 543,200. ஆகவே எல்லா உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த வெயிட்டேஜ் 1086431 ஆகும்.

10.86 லட்சம் வெயிட்டேஜ் கொண்ட எலெக்டோரல் காலேஜில் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 50 சதவிகிதத்திற்கும் குறைவான வாக்குகளே இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் தங்கள் வேட்பாளரை வெற்றிபெற வைக்க ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் பிஜேடி போன்ற கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படும்.

குடியரசுத்தலைவர் தேர்தலுக்கு முன், மாநிலங்களவை தேர்தல் முடிவுகள், பா.ஜ.க.வை பலப்படுத்தியிருக்கிறது.

நான்கு மாநிலங்களில் 16 இடங்களுக்கு நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக 8 இடங்களைப் பெற்ற நிலையில், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற்றார்.

தற்போதைய தகவல்படி 48 சதவிகித வாக்குகள் என்.டி.ஏ விடமும், 38 சதவிகித ஓட்டுகள் யு.பி.ஏ.விடமும், 14 சதவிகிதம் ஜெகன் ரெட்டியின் கட்சி, பி.ஜே.டி., டி.எம்.சி. மற்றும் இடதுசாரிகளிடம் உள்ளன” என்று தகவல் பரவுகிறது. அதிலும் ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளையும் ஈணைத்து பார்த்தால், அவர்களுக்கு 52 சதவிகித எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. எல்லா எதிர்க்கட்சிகளின் வாக்குகளையும் மந்திரக்கோலால் ஒன்றிணைத்தால், ஒரு நல்ல போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்