ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 1,581 குற்ற பின்னணி உடையவர்கள்!
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை (17-ந் தேதி) நடைபெறவுள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடியும். இந்த தேர்தலில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் எம்.எல்.ஏ.க்களின் வாக்குப்பதிவு நடைபெறும். எம்.பி.க்கள் டெல்லியில் வாக்களிப்பார்கள். இந்திய தேர்தல் கமிஷனின் முன்அனுமதி பெற்றுள்ள எம்.பி.க்கள் மாநிலத்தில் வாக்களிக்கலாம். தமிழக சட்டசபை அருகில் உள்ள குழு கூட்ட அறையில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த குழு கூட்ட அறைக்கு அருகில் உள்ள வாயில்களில், எப்படி வாக்களிக்க வேண்டும் என்ற அறிவுரைகள் ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர்களின் பெயர்களும் (மீராகுமார், ராம்நாத் கோவிந்த்) அங்கு எழுதி ஒட்டப்பட்டுள்ளன. அந்த அறிவுரையில், “வாக்குப்பதிவு நடக்கும் இடத்துக்குள் செல்போன், கேமரா எடுத்துச் செல்லக்கூடாது. அடையாள அட்டையை கொண்டு செல்லவேண்டும். வாக்குச்சாவடி தலைமை அலுவலர் அல்லது அவரால் அங்கீகரிக்கப்பட்ட அலுவலரால் வழங்கப்படும் பேனாவினால் மட்டுமே வாக்குச்சீட்டில் தங்களுடைய விருப்ப வரிசைக் குறியீட்டைச் செய்யவேண்டும்.
வேட்பாளருக்கு முன்னுரிமை குறியீடு மூலம் வாக்குப்பதிவு செய்துவிட்டு, அந்த இடத்தை விட்டு வெளியேறுவதற்கு முன்பு தங்களுக்கு வழங்கப்பட்ட பேனாவை அதை வழங்கியவரிடம் திரும்பக் கொடுக்க வேண்டும்.
வேறு பேனாவை உபயோகித்தால் உங்கள் வாக்குச்சீட்டு செல்லாததாகிவிடும். எந்த வேட்பாளரை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ, அந்த வேட்பாளரின் பெயருக்கு எதிராக உள்ள விருப்ப வரிசை முறை கட்டத்தில் ஒன்று என்று எண்ணால் எழுத வேண்டும்.
டிக், பெருக்கல் குறியீட்டை பயன்படுத்தினால் அந்த வாக்குச்சீட்டு செல்லாததாகிவிடும். வாக்குச்சீட்டில் பெயரை எழுதுவதோ, கையெழுத்து போடுவதோ, வேறு சொற்களை எழுதுவதோ கூடாது.
வாக்குச்சீட்டை உருக்குலைக்கக் கூடாது. அதை கிழித்தாலோ, சேதப்படுத்தினாலோ வேறு புதிய வாக்குச்சீட்டு வழங்கப்படமாட்டாது. வாக்குச்சீட்டை வாக்குப்பதிவு இடத்தைவிட்டு வெளியே எடுத்துச் செல்லக்கூடாது.
வாக்கின் ரகசியம் வெளிப்படாமல் அனைத்து வகையிலும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். அமைதியையும், கண்ணியத்தையும் காத்துக்கொள்ள வேண்டும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இத்தேர்தலில் பாராளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் (எம்.பி.க்கள்), அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்களிக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்நிலை யில் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் பின்னணியை ‘ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம்’ மற்றும் ‘தேசிய தேர்தல் கண்காணிப்பு’ ஆகிய அமைப்புகள் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டு உள்ளன. இந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கடைசியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்தலின் போது தங்கள் வேட்புமனுக்களுடன் அளித்துள்ள பிரமாண பத்திரங்களை ஆய்வு செய்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
மொத்தமுள்ள 4,896 எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 4,852 பேரின் பிரமாண பத்திரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 774 எம்.பி.க்கள் (மொத்தம் 776 பேர்) மற்றும் 4,078 எம்.எல்.ஏ.க்கள் (மொத்தம் 4,120) அடங்குவர்.
இந்த அறிக்கையின் படி ஆய்வுக்குட்படுத்தப்பட்ட 4,852 எம்.பி., எம்.எல்.ஏ.க்களில் 3,460 பேர் கோடீஸ்வரர்கள் என கண்டறியப்பட்டு உள்ளது. இதில் பாராளுமன்ற எம்.பி.க்கள் 445 பேர், மேல்–சபை எம்.பி.க்கள் 194 பேர் மற்றும் 2,721 எம்.எல்.ஏ.க்களும் அடங்குவர். இது 71 சதவீதம் ஆகும்.
இதைப்போல 1,581 பேர் (33 சதவீதம்) குற்றப்பின்னணி கொண்டவர்கள் என தெரிய வந்துள்ளது. அதன்படி 184 பாராளுமன்ற உறுப்பினர்கள், 44 மேல்–சபை உறுப்பினர்கள் மற்றும் 1,353 எம்.எல்.ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன. இதில் 993 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல், பாலியல் ரீதியான குற்றங்கள் போன்ற கடுமையான குற்ற வழக்குகள் உள்ளன.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க இருக்கும் மக்கள் பிரதிநிதிகளில் 9 சதவீதத்தினரே பெண்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 4,852 பிரமாண பத்திரங்களில் 451 மட்டுமே பெண் பிரதிநிதிகளுக்கானது என அந்த அமைப்புகள் கூறியுள்ளன.


