தென் இந்தியாவில் அரிசி விளைச்சல் வீழ்ச்சி அடையும்!
பூமியில் மனித இனம் தொடர்ந்து வசிப்பதற்கான வாய்ப்புகள் படிப்படியாக குறைந்து கொண்டே செல்வதாக ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் போட்ஸ்மேன் பருவநிலை தாக்க ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதிலும் குறிப்பாக சீனா, இந்தியா, வங்கதேசம் மற்றும் இந்தோனேசியாவின் இதன் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரலாற்றிலேயே அதிக வெப்பம் பதிவான ஆண்டாக கடந்த 2016ம் ஆண்டு இடம் பிடித்துள்ளது. மேலும் இந்த 2017ம் ஆண்டிலும் கடந்த ஆண்டைவிட அதிக வெப்பம் பதிவாகும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதாவது பருவநிலை மாற்றத்தால் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள், இதனால் மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி வரும் போட்ஸ்டாம் நிறுவனம் ஆகியவை ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளன. அதில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்:
பருவநிலை மாறிக்கொண்டு வருவது இயற்கை சீற்றங்களுக்கு வழிவகுக்கும். இதனால் ஆசியாவைச் சேர்ந்த மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள். வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் சீனா, இந்தியா, வங்காள தேசம், இந்தோனேஷியா ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்படும்.
வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் கடலோரப்பகுதிகளில் வசிக்கும் 13 கோடி பேர் இந்த நூற்றாண்டின் இறுதியில் வேறு இடங்களுக்கு இடம்பெயர வேண்டிய அபாயம் ஏற்படும்.

பருவநிலை மாறுபாடுகளால் தென் இந்தியாவில் 2030ம் ஆண்டில் அரிசி விளைச்சல் 5 சதவீதம் குறையும். 2050 ஆம் ஆண்டில் இது 14.5 சதவீதமாகவும், 2080ம் ஆண்டில் 17 சதவீதமாகவும் வீழ்ச்சி அடையும். அதேசமயம், வட இந்தியாவில் நெல் உற்பத்தி கணிசமான அளவில் அதிகரிக்கும்.
இந்தியாவின் கோதுமை உற்பத்தி 8 சதவீதம் குறையும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
உலகம் முழுவதும் உள்ள 136 கடற்கரை நகரங்களில் 2005ம் ஆண்டு வெள்ளச்சேதம் குறித்து ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அதன்படி, வெள்ளச்சேதத்தால் ஆண்டுக்கு சராசரியாக 600 கோடி டாலர் சேதம் ஏற்படுவது கணக்கிடப்பட்டது. இது 2050ம் ஆண்டில் ஆண்டுக்கு 520 கோடி டாலராக உயரும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக சேதம் ஏற்பட வாய்ப்புள்ள கடற்கரை நகரங்களில் 13 நகரங்கள் ஆசிய நாடுகளில் உள்ளன. இந்தியாவில் உள்ள மும்பை, கொல்கத்தா நகரங்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
21ம் நூற்றாண்டில் மனிதகுலம் சந்திக்கும் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சினை பருவநிலை மாற்றமே ஆகும். அதில் ஆசியா-பசிபிக் பகுதி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
போட்ஸ்டாம் நிறுவன இயக்குனரும் பேராசிரியருமான ஹான்ஸ் ஜோயச்சிம் ஸ்கெல்ன்ஹபர் கூறியதாவது:
பூமியின் எதிர்காலம் ஆசிய நாடுகளின் கைகளில் தான் இருக்கிறது. பருவநிலை மாற்றப் பிரச்சினை அதிகரிக்காமல் இருக்க சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை ஆசிய நாடுகள் கட்டுப்படுத்த வேண்டும்.
2015ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் புவி வெப்பநிலையை 2 டிகிரி செல்சியசுக்கு மேல் உயராமல் பார்த்துக் கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், புவி வெப்பநிலை 1.5 சதவீதம் உயர்வதே ஆபத்தானது ஆகும்.
எனவே, ஆசிய நாடுகள் புவியின் நலனுக்கு தீங்கு விளைவிக்காத கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும்.
இவ்வாறு ஹான்ஸ் ஜோயச்சிம் ஸ்கெல்ன்ஹபர் கூறினார்.


