பொன்னியின் செல்வன் – விமர்சனம்!

பொன்னியின் செல்வன் – விமர்சனம்!

முன்னொரு காலக்கட்டத்தில் – அதாவது ஊமைப் படங்கள் உருவான காலத்திலும் சரி, பேசும் படமாக அது வளர்ச்சி அடைந்த சூழலிலும் சரி…நம் தமிழ் சினிமாவை புராண அல்லது வரலாற்றுக் கதைகளே முழுக்க முழுக்க ஆக்கிரமித்திருந்தன. நம் தமிழ் மன்னர்கள், சரித்திரத்தில் இணையில்லாத வீராதி வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மகாபாரத-ராமாயணக் கதைகள் போன்றவைதான் பெரும்பாலும் சினிமாவாக எடுக்கப்பட்டன. ஆனால் அறுபதுகளுக்குப் பின் சரித்திரப் படங்கள் வருவது படிப்படியாகக் குறைந்தது. எண்பது, தொன்னூறுகளில் சரித்திரப் படங்கள் வருவதே அடியோடு நின்று போயின. அப்படியே ஓரிரு படங்கள் வந்தாலும் அவை ரசிகர்களை கவராமலேயே போய் விட்டன. அந்த வரிசையில் இடம்பிடிக்கும் நோக்கில் தமிழ் வாசகர்களுக்கு மிகவும் பரிட்சியமான கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ சரித்திர நாவலைப் படமாக்க பல முயற்சிகள் நடந்திருக்கின்றன. . நினைத்ததை முடிப்பவன் என்று வர்ணிக்கப்பட்ட எம்ஜிஆர் தொடங்கி உலக நாயகன் என்ற அடைமொழிக்குச் சொந்தமான கமல் வரை எவருமே’ பொன்னியின் செல்வன் படத்தை ஏதேதோ காரணங்களால் எடுக்க முடியவில்லை. அப்படியான கனவுப் படைப்பை இதோ நம் கண் முன்னே கொண்டு வந்து விட்டார் மணிரத்னம் என்பதே பெருமிதம் கொள்ளச் செய்கிறது.

இப்படத்தின் கதை பலருக்கும் தெரிந்ததுதான் . அதாவது சோழப் பேரரசின் பேரரசரான சுந்தர சோழனுக்கு ஆதித்த கரிகாலன் அருண்மொழி வர்மன் குந்தவை என்ற இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.தந்தையின் ராஜ்ஜியத்தில் பிரச்சனை வரப் போவதை ஆதித்த கரிகாலன் உணர்ந்து கொள்கிறார். இந்த செய்தியை தந்தைக்கு தெரியப்படுத்த வந்தியதேவனிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார்.இதற்கிடையில் சோழ படையில் இருக்கும் பெரிய பழுவேட்டரையர் சின்ன பழுவேட்டரையர் மற்றும் சிற்றரசர்கள் தலைமையில் மதுராந்தகனை அரசராக்க முயற்சிப்பதை வந்தியதேவன் கண்டுபிடிக்கிறார். அதை அடுத்து நடக்கும் சம்பவங்கள் என்ன என்பதே படத்தின் கதை.

ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம் தனக்கே உரிய விதத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். வாலிபக் குறும்பன் வல்லவராயன் வந்திய தேவனாக வரும் கார்த்தி நடிப்பில் தனித்துவம் பெறுகிறார். கிட்டத்தட்ட இந்த முதல் பாகத்தின் வில்லியாக சித்தரிக்கப்படும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பளிச்சிடுகிறார். அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார். ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கும் ஜெயராம் தலைமுடி ஸ்டைல், நடை, உடை, உடல்மொழி என மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தவிர பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், பிரபு, ரஹ்மான், நிழல்கள்ரவி, விக்ரம்பிரபு, ஜெயராம், கிஷோர் ஆகியோர் தேர்ந்த நடிப்பில் கவனம் பெறுகின்றனர். குந்தவையாக வரும் த்ரிஷா அழகிலும் நடிப்பிலும் அடிசினலான பாராட்டை பெறுகிறார். மொத்தத்தில் இப்படத்தின் பலமே பொருத்தமாக தேர்ந்தெடுத்த நடிகர்/ நடிகையர்கள் பட்டியல்தான் . எல்லாப் பாத்திரங்களும் கதையோடு கச்சிதமாக பொருந்தி போய் விடுகிறார்கள்.

ரவி வர்மனின் கேமரா ஒர்க் குறித்து இணைப்பிதழ் ஒன்றே தயார் செய்யலாம். அந்தளவுக்கு விசேஷ லைட்டிங்காலும், கோணங்களாலும் படத்தின் பிரம்மாண்டத்தை ஒவ்வொரு பிரேமிலும் காட்டியிருக்கிறார். ஏஆர் ரஹ்மானின் இசை இந்தப் படத்தை உலகத் தரத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. தனியாகக் கேட்ட பாடல்களை,படத்தில் காட்சியோடு பார்க்கும்போது அடடே சொல்ல வைக்கிறது. அதிலும் ஐஸ்வர்யாராய்-க்கும், த்ரிஷாவுக்குமான தனித்தனி பிரத்யேக பின்னணி இசையைப் போட்டு தான் வேற லெவல் கிரியேட்டர் என்பதை உணர வைத்து விட்டார் இந்த ஆஸ்கார் வின்னர்..

வசனம் எழுதி இருக்கும் ஜெயமோகன் மற்றும் அவருக்கு உதவிய இளங்கோ குமாரவேலுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கலாம்.. அவ்வளவு ஒர்த்தான பணியை செய்து அசத்தி இருக்கிறார்கள்.  Second unit director.பிஜோய் நம்பியார் பங்களிப்புக் கூட இப்படத்தை ஸ்பெஷலாக்கி இருக்கிறது என்பதை சொல்லியே ஆக வேண்டும்.

முத்தாய்ப்பாக ஐந்து பாகமாக ஐந்து ஆண்டுகள் வெளியான ஒரு நீளமான கதையை ஏகப்பட்ட தடவை படித்து கற்பனையில் வந்தியனாகவும் நந்தினியாகவும் குந்தவையாகவும் ஆதித்த கரிகாலனாகவும் ராக்கம்மாவாகவும் வாழ்ந்து வந்த பலருக்கும் இந்த படம் முழு திருப்தி கொடுக்காதுதான். காரணம் அமரர் கல்கி பக்கத்துக்கு பக்கம் ஊட்டிய எழுத்தின் சுவை அப்படி. அதை 2.30 மணி நேர படத்தில் காண்பிப்பது எவராலும் இயலாத ஒன்று. ஆனால் திரைக்கதையில் இந்த இமாலய பிரச்னையை லாவகமாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர். அதே சமயம் அந்நாவலை, வாசிக்காதவர்களுக்கு இந்தக் கதையும், மாந்தர்களும் புதிது எனும் போது, அவர்களுக்கான டீடெய்லிங் ரொம்பவே மிஸ்ஸிங். ஆனாலும் பல இடங்களில் பலருக்கு புரியுமென்று நம்பி மேற்படி நாவலை ஆங்காங்கே கத்தரிக்கோல் உதவியுடன் கட் & பேஸ்ட் செய்தபடி கோர்வையான கதை ஒன்றை சொல்ல முயன்று வெற்றியும் பெற்று விட்டார் மணிரத்னம் என்பதுதான் உண்மை

மொத்தத்தில் பொன்னியின் செல்வன் – மீம்ஸ் பாணியில் சொல்வதானால் இப்படத்தைத் தியேட்டரில் போய் பார்க்காதவர் தமிழரே அல்ல

மார்க் 4/5

Related Posts