பறந்து போ – விமர்சனம்!

இப்போது அப்பாக்களாக இருக்கும் நமது குழந்தைப் பருவம் நினைவுக்கு வரும்போது, பள்ளிக்கூடத்தை விடவும், வெளியுலகம்தான் நமக்கு நிறைய கற்றுக்கொடுத்தது என்பதை யாரால் மறுக்க முடியும். . வீடு, காடு, மேடு, மலை, குளம் என எங்கெங்கும் ஓடி ஆடித் திரிந்தோம். சைக்கிள் ஓட்டுவது, நீச்சல் அடிப்பது போன்றவற்றை யாரும் சொல்லிக்கொடுக்காமல், நாமாகவே முயற்சி செய்து கற்றுக்கொண்டோம். தொலைக்காட்சி, இன்டர்நெட் இல்லாத காலத்தில், உலகத்தைப் புரிந்துகொள்ள நம் உந்துலதுடன், கண்பார்வையும், ஆர்வமும்தான் பிரதான கருவிகளாக இருந்தன. பள்ளித் தேர்வு முடிவுகளுக்காகப் பத்திரிகை அலுவலக வாசலில் காத்திருந்து, நம் நம்பரைப் பார்த்ததும் துள்ளிக் குதித்த அந்தப் பரவசம், இப்போது ஆன்லைனில் ஒரு பட்டனை அழுத்துவதில் கிடைப்பதில்லை.இன்றைய குழந்தைகள் நகரங்களின் பரபரப்பான சூழலில், போக்குவரத்து நெரிசல், பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார்கள். பெற்றோர்கள் எவ்வளவுதான் அன்பு காட்டினாலும், அவர்களுக்கு வெளியுலக அனுபவங்கள் கிடைப்பதில்லை. ஓடி விளையாட இடமில்லை, மற்ற குழந்தைகளுடன் இயல்பாகப் பழக வாய்ப்பில்லை. குறிப்பாக இயற்கையுடன் நேரம் செலவழிக்க முடிவதில்லை. இதனால் நேரும் மன பிறழ்வுகளை அலசி மாற்று வழி குறித்து பேசுகிறது பறந்து போ.
அதாவது மனதிலும், காலிலும் சக்கரம் மாட்டிக் கொண்டு கனவில் வாழும் மிடில் க்ளாஸ் ஃபேமிலையைச் சேர்ந்தவர்கள் மிர்ச்சி சிவா & கிரேஸ் ஆண்டனி தம்பதி., இவர்களின் ஒரே மகன் மிதுல் ரயனை ஹை ஸ்டாண்டர்ட் உள்ள ஸ்கூலில் படிக்க வைப்பதற்காக மனைவி கோயமுத்தூரிலும் கணவன் சென்னையிலும் ஒர்க் செய்து பணம் சேர்த்து வருகிறார்கள். இதில் மகன் அப்பா சிவாவோடு சென்னையில் இருக்கிறான். அதிலும் போன் மூலம் அம்மாவை கட்டிப் பிடித்து, கொஞ்சி குலாவியும், அப்பாவின் பிரியத்தை டாட்டா காட்டும் போதும் மட்டுமே பெறுகிறான். அப்படியான சூழலில் பையனுக்கு இந்த வாழ்க்கை என்பது ஒரு சிறை போல் தோன்றுவதால் எங்காவது பறந்து போகவேண்டும் போல் தோன்றுகிறது. அதனால் பல நாட்கள் திட்டம் போட்டு ஒரு நாள் திட்டமிடாத சாலைகளில் பைக் ரைட் போகிறார்கள். அந்த ட்ராவலின் இறுதியில் ஒவ்வொரு அப்பாக்களுக்குள் இருக்கும் குதூகலத்தையும், பரிசுத்தத்தையும் குழந்தை எப்படி மீட்டுத் தர துடிக்கிறார்கள் என்பதையும் சகலமும் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளும் அப்பா ஆகிய பெரியவர்களுக்கு தெரியாதவை எவையெவை என்பதை சுட்டிக் காட்டுவதும்தான் பறந்து போ படக் கதை.
உப்புமா ஆக்டர் என்று பேரெடுத்த மிர்சி சிவாவை மெயின் ரோலில் பார்த்த பின்னர் இவரையா உப்புமா என்று நினைத்தோம் என்று வருந்த வைத்து விடுகிறார். அவருக்காக ராம் உருவாக்கிய கேரக்டரா? அல்லது ராம் உருவாக்கிய ரோலில் சிவா பொருந்தி போனாரா என்று பட்டிமன்றமெல்லாம் வைக்கலாம். இப்படத்தில் அவரின் கதாபாத்திரத்தில் ஒவ்வொரு தகப்பனும் தென்படுகிறார். அவ்வளவு பர்ஃபெக்ஷன். அதே போல்தான் சிவாவின் ஒய்ஃப் ரோலில் வரும் கிரேஸ் ஆண்டனியின் கதாப்பாத்திரமும் சமூகத்தில் நடமாடும் பல குடும்ப பெண்களை கண்முன் கொண்டு வருவதில் ஸ்கோர் செய்து விடுகிறார்.
அடிசினலாக பள்ளித்தோழி வனிதா ,அஞ்சலி , விஜய் யேசுதாஸ் என நடிகர்கள் அனைவருமே கதாபாத்திரங்களாக வாழ்ந்திருக்கிறார்கள். ஆனா அன்பு என்னும் நாமகரணத்தில் நடித்திருக்கும் மிதுல் ரயன் என்ற குட்டிப் பையன் விஸ்வரூபமெடுது கவர்ந்து விடுகிறான். பெற்ற பிள்ளையோடு நேரம் செலவிடாத பெற்றோரிடம் விரும்பியதையெல்லாம் பெற அடம் பிடிப்பது, தான் உண்மை சொன்னாலும் நம்பாமல் அடித்த அப்பாவை வீட்டுக்குள் பூட்டி விட்டு விளையாட செல்வது, “ஜெயிலில் இருக்க மாதிரி இருக்குடா திறந்து விடு” என அப்பா கெஞ்சும் போது “என்னை எத்தனை வாட்டி வீட்டுக்குள்ள விட்டு பூட்டிட்டு போயிருக்கீங்க” என்பது, சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன் என பொய் சத்தியம் செய்து ஏமாற்றும் அப்பாவை எப்படியெல்லாம் அலைகழிக்கிறான் என்பதெல்லாம் வெள்ளித்திரையில் காணும் போது அவ்வளவு லயிக்க வைத்து விடுகிறான். கூடவே பல பெற்றோருக்கு இவனின் வம்படிகள் தம் வீட்டில் நடப்பது போலவே இருக்கிறதே என்ற உணர்வை ஏற்படுத்துவதிலும் ஜெயித்து விடுகிறான்.
வெற்றிமாறன் ஒரு பேட்டியில், இப்போது திரைப்பட கல்வி கற்கும் மாணவர்களின் டாப் ஃபேவரைட் இயக்குநர்களில், எல்லோர் லிஸ்டிலும் ராம் இருக்கிறார் எனச் சொல்லியிருந்தார். அந்தளவு மிகப்பெரிய தாக்கத்தை ராம் ஏற்படுத்தியிருக்கிறார். திரைக்கதையே 36 ஒன்லைன் தான், எல்லாப்படமும் ஒரு ஃபார்மேட்டுக்குள் அடங்கி விடும். ராம் அங்கு தான் மாறுபடுகிறார். அவர் கதைகளை ஒரு ஃபார்மேட்டுக்குள் அடக்க முடிவதில்லை, அவர் சொல்லும் கதை எப்படி பயணிக்கும் என்பது அவருக்கே தெரியாது.. என்ன கதை சொல்வார் என தெரியாமல் ஆச்சரியாம உலகிற்குள் செல்ல அவரை நம்பிக் காத்திருக்கலாம்… !
கேமராமேன் ஏகாம்பரத்தின் ஃப்ரேம்கள் அத்தனையும் கொள்ளை அழகு. நாமும் கூட சேர்ந்து மலை, மடு, காடு, கழனி என ரோட் டிரிப் போவது போல ஒரு மாயை. பாடல்கள் மட்டும் கொஞ்சம் துருத்திக்கொண்டு இருந்தது. அது ராமின் வாய்ஸாம் .
அது சரியில்லை, இப்படி போகலாம் என்று சுட்டிக் காட்டும் எந்த வடிவமுமே இல்லாத ஸ்கீரின் பிளேதான் இந்தப்படத்தின் அழகு..!
படம் முடிந்து வரும் போது குடும்பத்தோடு காடு, மலை என ரோட் ட்ரிப் போய் விட்டு வர வேண்டுமெனத் தோன்ற வைத்து விடுகிறது.
மார்க் 4./5