நம்ம பாரத் டாக்ஸி! – இந்தியப் பயணங்களில் அதிரடிப் புரட்சி தொடங்கிடுச்சு!
இந்தியப் போக்குவரத்துத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாக, நாட்டின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான வாகன அழைப்புச் சேவையான (Cooperative-based Cab Service) ‘பாரத் டாக்ஸி’ திட்டத்தை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா நேற்று தொடங்கி வைத்தார். கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், ஓட்டுநர்களின் நலனை முன்னிறுத்தித் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சேவை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முக்கியத் தகவல்கள்:
-
தொடக்கப் புள்ளி: முதற்கட்டமாக டெல்லி மற்றும் குஜராத் மாநிலங்களில் இந்தச் சேவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
-
அதிவேக வளர்ச்சி: சோதனை முறையில் தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே, 3 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள் இத்தளத்தில் இணைந்துள்ளனர். ஏற்கனவே 1 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது இதன் ஆரம்பகட்ட வெற்றியை உறுதிப்படுத்துகிறது.

- சேவை : நாட்டின் வாகன அழைப்புச் சேவைச் சந்தையில் தற்போது உபெர், ஓலா மற்றும் ராபிடோ போன்ற ஒரு சில நிறுவனங்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இவற்றுக்கு மாற்றாக மத்திய அரசே 2002-ம் ஆண்டின் பல மாநில கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, ஜூன் 6, 2025 அன்று நிறுவப்பட்ட பாரத் டாக்ஸி, ‘பூஜ்ஜிய கமிஷன்’ மற்றும் ‘சர்ஜ் கட்டணம் இல்லாத’ (தேவை அடிப்படையில் அதிக கட்டணம்) விலை மாதிரியில் இயங்குகிறது. இந்த தளத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் கார்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
-
விரிவாக்கத் திட்டம்: அடுத்த 2 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் ‘பாரத் டாக்ஸி’ விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
தேசம் தழுவிய இணைப்பு
இந்தத் திட்டம் வெறும் வணிக நோக்கம் கொண்டதல்ல, இந்தியாவை இணைக்கும் ஒரு பாலமாக இருக்கும் என்று குறிப்பிட்ட அமைச்சர், “காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், துவாரகா முதல் காமாக்யா வரையிலும் நாடு முழுவதும் பாரத் டாக்ஸி விரிவுபடுத்தப்படும்” என்று லட்சிய இலக்கை அறிவித்துள்ளார்.
கூட்டுறவு முறையின் சிறப்பு
உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய கூட்டுறவு அடிப்படையிலான வாகன அழைப்புத் தளமாகவும், உலகின் மிகப்பெரிய ஓட்டுநர்களுக்குச் சொந்தமான நகர்வுத் தளமாகவும் உருவெடுத்துள்ள பாரத் டாக்ஸி ஜீரோ கமிஷன் மாடலில் செயல்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் தனியார் செயலிகளை போல பீக் அவர்கள், மழை காலங்களில் கூடுதல் கட்டணங்களும் இதில் வசூல் செய்யபடாது. இணைத்து கொள்ளும் ஓட்டுநர்களுக்கு விபத்து காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சேவைகளும் கிடைக்கிறது. அது தவிர இதில் எஸ்ஓஎஸ் பட்டன் இருக்கிறது அதில் ஒரு கிளிக் செய்தால் உள்ளூர் போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கு எமர்ஜென்சி தகவல் சென்றுவிடும் என்பதால் பயணிகள் பாதுகாப்பு குறித்து கவலை கொள்ள தேவையில்லை. தமிழ்நாட்டின் சென்னை, கோவையில் பாரத் டாக்ஸி சேவை கிடைக்கிறது. அதே போல டெல்லி, பெங்களூரு, மும்பை ஆகிய நகரங்களிலும் கிடைக்கிறது. இதில் பைக் தீதி என்ற ஒரு புதிய சேவையும் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இதுவரை 150 பெண் ஓட்டுநர்கள் இதில் தங்களுடைய வாகனங்களை பதிவு செய்திருக்கிறார்கள். எனவே பெண் ஓட்டுநர்களுக்கும் வாய்ப்பு தருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைலைட்
பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது மட்டுமல்ல; அது ஒரு அனுபவம். அந்த அனுபவத்தை இனிமையானதாக மாற்ற வழக்கமான ஓலா, ஊபர் செயலிகளை விட இதில் 30 சதவீதம் வரை குறைவான கட்டணத்திலேயே வாடகை வாகனங்கள் கிடைக்கும் வகையில் ‘சகார் சே சம்ரிதி’ (கூட்டுறவு மூலம் செழுமை) என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு அங்கமாக, ‘பாரத் டாக்ஸி’ இந்திய வீதிகளில் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.
வாத்தீ அகஸ்தீஸ்வரன்


