June 2, 2023

செயற்கையாக இதை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறோம் – நியூயார்க் கவர்னர்

ஆஸ்பத்திரியில் நோயாளிகள் வரும் விகிதம் குறைய ஆரம்பித்துவிட்டது. இது நோய் மட்டுப் பட்டிருப்பதற்கான முதல் அறிகுறி. நாம் அனைத்து யூகங்களையும், புள்ளி விவரங்களையும் முறியடித்துவிட்டோம். நோய்த் தடுப்பு மையம் , வெள்ளை மாளிகை புள்ளி விவரங்கள் அனைத்தும் ஒரு மில்லியன் மக்களுக்கு மேல் பாதிக்கப்படுவார்கள் என்று மதிப்பீடு செய்து இருந்தன. நாம் அனைத்தையும் தோற்கடித்து விட்டோம். இது எதனால் நடந்தது ? நாம் எடுத்த நடவடிக்கைகளால் நிகழ்ந்தது.

இதுவே ஒரு எச்சரிக்கையும் கூட. நாம் செயற்கையாக இதை கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறோம். நாம் இப்போது செய்வதை நிறுத்தினால் நாளை மீண்டும் நோய்த்தொற்று வேகம் அதிகரிக்கலாம். நாம் லாக்-டவுனை தளர்த்துவது குறித்து பேசும்போது இதை மனதில் கொள்ள வேண்டும். அனைவருமே இதில் ஆர்வமாக உள்ளனர். நானும் இதில் ஆர்வமாகவே உள்ளேன். ஆனால் அவசரப்பட்டு நிபந்தனைகளைத் தளர்த்திய பிற நாடுகளில் மீண்டும் நோய்த்தொற்று விகிதம் அதிகரிப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். அதனாலதான் அதீத எச்சரிக்கையுடன் இதை அணுக வேண்டியிருக்கிறது.

மீண்டும் திறப்பது குறித்து ஒரு தெளிவான செயல்திட்டம் வேண்டும். அண்டை மாநில கவர்னர் களுடன் இணைந்து ஒரு ஒருங்கிணைந்த செயல் திட்டம் உருவாக்க வேண்டும். தேசத்தையே மண்டலங்களாகப் பிரித்து இந்தத் திட்டத்தை கையாள வேண்டும். பிற மண்டலங்களுக்கு முன்னோடியாக நாங்கள் ஏழு மாநில கவர்னர்கள் ஒருங்கிணைந்து ஒரு செயல்திட்டத்தை உருவாக்கி வருகிறோம். இதில் யாருக்கும் முன் அனுபவமெல்லாம் இல்லை. ஆனாலும் ஒன்று கூடி கலந்தாலோசித்து திட்டமிட்டு வருகிறோம்.

இந்த சூழ்நிலையில் அதிபர் மீண்டும் நாட்டைத் திறந்து விடுவதில் தனக்கு முழு அதிகாரம் உள்ளதாக நேற்று கூறியிருக்கிறார். என்னுடைய அபிப்பிராயத்தில் அது சரியான கருத்தாகத் தோன்றவில்லை. மத்திய-மாநில அரசுகளின் உறவே நம்முடைய ஜனநாயகத்தின் மையமாகும். மத்திய மாநில அரசுகளின் பொறுப்புகள் என்பது கூட்டாட்சியின் அடிப்படை. நம்முடைய முன்னோடிகள் இதையெல்லாம் யோசித்து கலந்துரையாடி இந்த அமைப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இது அரசாட்சி இல்லை. நம்முடைய நாட்டுக்கு அரசன் இல்லை. நாம் அரசாட்சியை விரும்பவில்லை. நமக்கு அரசியலமைப்பு உள்ளது. நாம் அதிபரைத் தேர்ந்து எடுக்கிறோம். மாநிலங்களும் காலனிகளும் ஒருங்கிணைந்து மைய அரசை உருவாக்கின. மைய அரசு மாநிலங்களை உருவாக்கவில்லை. காலனிகளே சில பொறுப்புகளை மைய அரசுக்கு விட்டுக்கொடுத்தன. மற்றபடி அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுகளுக்கே உள்ளன. இதுவே நமது அரசியலமைப்பு மற்றும் மத்திய-மாநில அரசு உறவு போன்றவற்றின் அடிப்படை.

அதிபரின் ட்வீட்களைப் பார்த்து எனக்கு சிறு வயதில் நான் பார்த்த போஸ்டர் வாசகம் (ஸாண்ட் பர்க் கவிதை வரி) ஒன்று நினைவுக்கு வந்தது. “ஒருவேளை அவர்கள் போருக்கு அறைகூவல் விடுத்தும் யாருமே வரவில்லையென்றால் ?” . அப்போது எனக்கு புரியவில்லை. அதை எனக்கு விளக்கிய பாஸ்டர் “யாரேனும் சண்டைக்கு அழைத்தும் எதிராளி சண்டையிட மறுத்தால் அங்கே போரே நடக்காதில்லையா?” என்றார். எனக்கு அப்போதும் விளங்கவில்லை’ “சில நேரங்களில் நாம் சண்டையிடுவதை விட சண்டையிலிருந்து விலகிச்செல்வதே நல்லது. சிலநேரங்களில் சண்டையில் இருந்து விலகிச் செல்வதற்கே அதிக வீரம் தேவைப்படுகிறது ” நான் அதிபருடன் சண்டையிடப்போவதில்லை.

நான் இங்கே அமர்ந்து கடந்த 44 நாட்களாக தினமும் நியூயார்க் மக்களிடம் இது என்னைப் பற்றியதல்ல , நம்மைப் பற்றியது என்று சொல்லிவருகிறேன் இது அரசியலுக்கான நேரமில்லை, இது சண்டைக்கான நேரமுமில்லை. நான் பரஸ்பர உணர்வுடனும் , ஒற்றுமையோடும் அதிபரை நோக்கி என்னுடைய கைகளை நீட்டுகிறேன். அவர் சண்டைதான் வேண்டுமென்றால் என்னிடம் அதை பெறப்போவதில்லை. சரியாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால், இதே வாரம் , கிட்ட்த்தட்ட 220,000 மைல்களுக்கு அப்பால் , அப்பல்லோ -13 பழுதடைந்து நின்றது. அத்தனை மைல்களுக்கு அப்பால் இருந்துகொண்டு எப்படியோ போராடி பிரச்சனைகளை சரி செய்து திரும்பி வந்தனர். அதுதான் அமெரிக்கா. நம்முடைய மக்கள் செய்ததை அரசாங்கம் செய்ய வேண்டாமா?

நான் அதிபருடன் ஒருங்கிணைந்து ஒற்றுமையாக வேலை செய்வதை எதிர்நோக்குகிறேன். அவர் என்னிடமிருந்து சண்டையைப் பெறப்போவதில்லை. மக்களுக்கு பாதகம் விளைவிக்கும் முடிவுகள் ஏதேனும் அவர் எடுத்தாலொழிய அவரோடு இணைந்து வேலை செய்வதில் எனக்கு இந்தத் தயக்கமும் இல்லை.

பத்திரிகையாளரின் கேள்வி :

அவரோடு சண்டை வேண்டாமென்று சொல்லும் நீங்கள் இன்று காலை முதல் குறைந்தது நான்கு தொலைக்காட்சி நேரடி நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து – நமது நாட்டுக்கு யாரும் அரசன் இல்லை என்று திரும்பத் திரும்ப கூறி வந்தது ஏன் ?

அவருடைய பிரகடனம், அதாவது “அனைத்து மாநிலங்கள் மற்றும் இந்த நாட்டுக்கான மொத்த அதிகாரமும் என்னிடம் உள்ளது ” என்ற ஸ்டேட்மென்ட். அதைத் திருத்தாமல் விட்டுவிடக் கூடாது. அது நம் அரசியலமைப்பின் அடிப்படைகளில் ஒன்று. ஜனநாயகத்தின் அடிப்படைகளில் ஒன்று. சில சட்டங்கள் சற்றே குழப்புவது போல் இருக்கும். ஆனால் இது அப்படிப்பட்ட சட்டமல்ல. மிகவும் தெளிவான ஒன்று. இதே இடத்தில நான் பல்வேறு சமயங்களில் அதிபருக்கு நன்றி சொல்லி இருக்கிறேன். அவர் சீனாவுக்கு எல்லை மூடியதாக இருக்கட்டும், மருத்துவ உபகரணங்கள் தேவைக்கேற்ப கொடுத்ததாகட்டும், ஆயிரம் படுக்கைகளுடன் ராணுவக் கப்பலைக் கொடுத்தது என்று நாங்கள் கேட்ட அனைத்தையும் கொடுத்தே வந்திருக்கிறார். அதை எந்த சூழலிலும் நான் மறைத்ததில்லை. அவர் சரியாக செயல்படவில்லை என்று நான் கூறவே மாட்டேன்.

Sisyphus Aeolus