கலவி-சார் கன்டன்ட் எல்லாம் ஆபாசமே அல்ல!
பல ஓடிடி சேவைகளை அவற்றின் மொபைல் செயலிகளையும் தடை செய்து மத்திய அரசின் தகவல் ஒளி பரப்புத் துறை உத்தரவிட்டிருக்கிறது. உல்லு, ALTT, ஹல்சல், பிக் ஷாட்ஸ், தேசிஃபிளிக்ஸ் உள்ளிட்ட 25 இணைய தளங்கள் இதில் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்த சேவைகளை தடை செய்ததற்கு முக்கிய காரணம் இவை எல்லாமே ‘ஆபாசம்’ மற்றும் போர்ன் கன்டன்ட்டுகளை வழங்கி வந்ததுதான் என்று தெரிகிறது. போர்ன் தளங்களை என்றல்ல, எது ஒன்றையுமே இணையத்தில் தடை செய்வதன் அர்த்தமின்மை குறித்து பற்பல முறை எழுதி இருக்கிறேன். தேவைப்படுபவர்கள் மிக சுலபமாக இவற்றை தரவிரக்கிப் பார்த்துக் கொள்ள இயலும். தொழில் நுட்பம் குறித்து ஒன்றுமே தெரியாதவர்களைத்தான் இந்தத் தடைகள் பாதிக்கும்.தவிர, ஸ்ட்ரிசன்ட் எஃபக்ட் குறித்தும் எழுதி இருக்கிறேன். நேற்றைய ஹிண்டுவில் இந்த 25 நிறுவனங்களின் பெயர்களை குறிப்பிட்டு இருந்தார்கள்.

இந்தியாவில் மேட்டர் படங்களுக்கு இத்தனை சேவைகள் இருப்பதே அப்போதுதான் தெரிய வந்தது. இப்போது நிறைய பேருக்குத் தெரிய வந்திருக்கும். ‘ஓ இவ்ளோ மேட்டர் சைட் இருக்குதா?’ என்று அவற்றைத் திறந்து பார்க்க முயல்வார்கள். மேலே சொன்னது போல, தொழில் நுட்பம் குறித்து ஓரளவு தெரிந்தவர்களுக்குக் கூட இந்தத் தடை ஒரு பொருட்டாக இருக்காது.இதெல்லாம் ஒரு புறம் இருக்க, இந்தியாவில் இப்படி செய்யப்படும் தடை முயற்சிகளின் பின்னணி எனக்குப் புரிந்ததே இல்லை. வரலாற்றில் எப்போதுமே நாம் கலவி-சார் கன்டன்ட்டை ஆபாசம் என்று பார்த்ததே இல்லை. பிற உலக சமூகங்கள் போல நாமும் பெண்களை கட்டுப் பெட்டித்தனமாக நடத்தி இருந்திருக்கிறோம்தான். ஆனால் கலவியை கேவலமாகப் பார்த்ததில்லை. அப்படிப் பார்த்தது ஆபிரகமிய மதங்கள்தான்.
கலவி என்பதைப் ‘பாவம்’ என்றும் ‘ஆபாசம்’ என்றும் அவை வர்ணித்தன. நிர்வாணத்தையும் கேவலமாக அணுகின. பழைய ஏற்பாட்டு பைபிளே ஆணும் பெண்ணும் தங்கள் உறுப்புகளைப் பார்த்து வெட்கம் கொள்வதில்தான் துவங்குகிறது. புனித அகஸ்டின், டெர்டுலியன் போன்ற ஆரம்ப கால கிறித்துவ சிந்தனையளர்கள் பெண்களைக் கண்டு ஓடி ஒளிந்திருக்கிறார்கள். காரணம், பெண்களைப் பார்த்தாலே அவர்களுக்கு மூடு ஏறி விடுகிறது! இஸ்லாத்தில் கலவி இன்னமும் கடுமையாக அணுகப்படுகிறது. பெண்களை ‘ஃபித்னா’ அதாவது temptation என்று நபிகளே குறிப்பிடுகிறார். (சஹி புகாரி 7-5096, ஜாமி அல்-திர்மிதி 2780) [1]
மாறாக, இந்துப் பாரம்பரியங்களில் கலவி பெருமளவு சகஜமாகவே அணுகப்பட்டிருக்கிறது. நம் அனைவருக்கும் காம சூத்திரம், கஜூராகோ பற்றி எல்லாம் தெரியும். இவை தாண்டியே கூட நிறைய இருக்கிறது. காளிதாசனின் ‘குமார சம்பவம்’ நூலில் சிவன்- பார்வதியின் கலவியே விலாவாரியாக விவரிக்கப்பட்டுள்ளது. அவற்றை இங்கே மேற்கோள் காட்டினால் தகவல் ஒளிபரப்புத் துறை என் அக்கவுண்ட்டையும் தடை செய்து விடுவார்கள். மம்மதர் எழுதிய ‘காவியப் பிரகாசம்’ நூலில் லட்சுமி-விஷ்ணுவின் கலவி விவரிக்கப்படுகிறது. அபினவ குப்தரின் ‘விபரிதரிதி’ மற்றும் ‘லோகானா’, ஹேம சந்திரரின் ‘பிராகிருத வியாகரணா’, குமாரதாசரின் ‘ஜானகிஹரனா’, ஆனந்தவர்தனரின் ‘த்வன்ய லோகா’, கேசவ மிஸ்ரரின் ‘அலங்கார சேகரா’ என்று சொல்லிக் கொண்டே போகலாம். பண்டைய இந்தியா போர்ன் கன்டன்ட்டுகளை எழுதிக் குவித்திருக்கிறது. அதுவும் தேவ பாஷா என்று புகழப்படும் சமஸ்கிருதத்திலேயே இவற்றில் பெரும்பாலானவை இயற்றப்பட்டுள்ளன. [2]
நிர்வாணமும் கூட நமக்குப் பொருட்டாக இருந்ததே இல்லை. சொல்லப் போனால் நிர்வாணத்தை இந்தியா கொண்டாடியது போல வேறு உலகக் கலாச்சாரம் கொண்டாடியது இல்லை. பண்டைய சிற்பங்கள், ஓவியங்கள் பெரும்பாலானவை நிர்வாணப் படங்கள்தான். நான் முன்பே சில பதிவுகளில் குறிப்பிட்டு இருக்கிறேன். சிவ புராணம், லிங்க புராணம் போன்ற பண்டைய நூல்கள் சிவலிங்கம் ஆண் குறியின் குறியீடு என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றன. [3]
பண்டைய குடிமல்லம் கோயிலில் உள்ள லிங்கமே நேரடியாக ஆண் குறி வடிவில்தான் அமைக்கப்பட்டு இருக்கிறது. [4] பல்வேறு பண்டைய சிவபெருமான் சிலைகளில் அவருக்கு ஆடைகள் எதுவும் இருப்பதில்லை. காளியும் பெரும்பாலும் முன்பக்க நிர்வாணமாகவே காட்சி அளிக்கிறாள். கஜுராஹோ சிற்பங்கள் முழுவதும் பல்வேறு கலவி நிலைகளைக் குறித்து வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன. சில பிரபல போர்ன் தளங்களே கூட அந்த சிற்பங்களைக் கண்டு தாழ்வு மனப்பான்மை கொள்ள வேண்டிய அளவுக்கு ரசனையுடன் வடிக்கப்பட்டவை அவை.
அப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்தவர்கள்தான் இன்றைக்கு போர்ன் தளங்களை அடித்துப் பிடித்து தடை செய்ய முயற்சி செய்கிறார்கள். இந்துப் பாரம்பரியம் மற்றும் வரலாறு குறித்து இந்துத்துவர்களுக்கு ஒரு எழவும் தெரியாது என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு வந்திருக்கிறேன். அதனைத் திரும்பவும் ஒரு முறை நிரூபித்து இருக்கிறார்கள்.
இந்துத்துவ மூடர்களுக்கு ஆழ்ந்த கண்டனங்கள்.


