நாட்டின் பொருளாதார வளர்ச்சி – நிர்மலா சீத்தாராமன் புதிய சலுகைகள் அறிவிப்பு!

நாட்டின் பொருளாதார வளர்ச்சி – நிர்மலா சீத்தாராமன் புதிய சலுகைகள் அறிவிப்பு!

“வரலாற்றில் முதல் முறையாக இந்தியா பொருளாதார மந்தநிலைக்குச் செல்கிறது. பிரதமர் மோடியின் செயல்கள், கொள்கைகளால், இந்தியாவின் வலிமையைப் பலவீனமாக மாற்றிவிட்டார்” என்று ராகுல் இன்று குற்றம் சாட்டிய நிலையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கும் வேலை வாய்ப்புத் திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.

 

வரலாற்றில் முதல் முறையாக இந்தியா “டெக்னிக்கல் ரிசஸன்” நிலைக்குச் சென்றுள்ளது. பொருளாதாரத்தில் ரிசஸன் எனப்படுவது மந்தநிலையைக் குறிக்கும். பொருளாதார வளர்ச்சி தேக்கமடைதல், நிறுவனங்கள் மூடல், வேலையின்மை, விலைவாசி அதிகரிப்பு, பொருட்கள் உற்பத்தி பாதிப்பு போன்ற பாதிப்புகள் இந்த காலகட்டத்தில் இருக்கும்.

தொடர்ந்து இரு காலாண்டுகளாக மந்தநிலை நீடித்தால் டெக்னிக்கல் ரிசஸன் எனப் பொருளாதாரத்தில் சொல்லப்படும். இந்தியாவில் இதுவரை இதுபோன்ற நிலை வந்ததே கிடையாது. முதல் முறையாக இதுபோன்ற மந்தநிலைச் சூழலை எதிர்கொள்கிறோம் என்று பல்வேறு ஊடகங்கள் சொல்லி வருகின்றன.

இந்த கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டுவந்த லாக்டவுனால் பொருளாதார வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. தொழில்கள், வர்த்தகம், சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. வேலையிழப்பும் ஏற்பட்டது.பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டுவர பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களையும் கடன் திட்டங்களையும் மத்திய அரசு தொடர்ந்து அறிவித்து வருகிறது.

அந்த வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்தும், பல்வேறு திட்டங்களையும் அறிவித்த விபரம் இதோ:

”கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்த லாக்டவுன் நீக்கப்பட்டபின், பொருளாதாரம் மிகவும் வேகமாகவும், வலிமையாகவும் மீண்டு வருகிறது. வேலைவாய்ப்பு, வர்த்தகம், பொருட்கள் தேவை போன்றவை லாக்டவுன் நீக்கத்துக்குப் பின் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கரோனாவில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 10 லட்சத்துக்கும் அதிகமாக இருந்த நிலையில், 4.89 லட்சமாகக் குறைந்துவிட்டது. உயிரிழப்பும் 1.47 சதவீதமாகக் குறைந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் பிஎம்ஐ குறியீடு 54.6 சதவீதம் இருந்த நிலையில், கடந்த அக்டோபர் 58.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் உற்பத்தி அதிகரித்து வருவது தெரிகிறது.

ஜிஎஸ்டி வரி வருவாய் வசூல் 10 சதவீதம் அதிகரித்து ரூ.1 லட்சம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ரயில்வே சரக்குப் போக்குவரத்து 20 சதவீதம் அதிகரித்துள்ளது. வங்கியில் கடன் வழங்கும் அளவும் 5.1 சதவீதம் உயர்ந்துள்ளது. ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை அந்நிய நேரடி முதலீடு 13 சதவீதம் அதிகரித்து, 3,53,700 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் கணிப்பின்படி, நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் சாதகமான வளர்ச்சி நிலையை எட்டும் எனத் தெரிவித்துள்ளது. அதற்குப் பொருளாதாரத்தில் தேவையை அதிகரிக்க வேண்டும்.

ஆத்மநிர்பார் பாரத் ரோஜர் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கப்படும்.

இந்த மானியம் ஓய்வூதியப் பங்களிப்பில் பணியாளர்களுக்கும், வேலை வழங்கும் நிறுவனங்களுக்கும் 2 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இதன்படி ஈபிஎஃப்ஓ திட்டத்தில் பணியாளர்கள் பங்களிப்பாக 12 சதவீதமும், நிறுவனம் பங்களிப்பாக 12 சதவீதம் என மொத்தம் 24 சதவீதம் 2 ஆண்டுகளுக்கு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படும்.

ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் இபிஎஃப்ஓ அமைப்பில் பதிவு செய்த நிறுவனங்கள் புதிய ஊழியர்களைப் பணிக்கு எடுத்தால் மட்டும் இந்தச் சலுகை பெற முடியும். இந்தத் திட்டத்தில் சேரும் ஊழியர்களின் மாத ஊதியம் ரூ.15 ஆயிரத்துக்குக் குறைவாக இருத்தல் வேண்டும்.

அதிலும் கொரோனா காலத்தில் மார்ச் 1-ம் தேதிக்குப் பின்பாக வேலையிழந்தவர்களாக அல்லது அக்டோபர் 1-ம் தேதிக்கு முன்பாக வேலை பெற்றிருத்தல் அவசியம். இவர்களின் ஊதியம் ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருத்தல் வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஊழியர்களையும், அதிகபட்சமாக 50 ஊழியர்களையும் சேர்க்க முடியும். இந்தத் திட்டம் 2021, ஜூன் 30-ம் தேதிவரை நடைமுறையில் இருக்கும்.

அவசரகால கடன் உறுதியளிப்புத் திட்டம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வருகிறது. அந்தத் திட்டம் 2021, மார்ச் 31-ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு பிணையில்லாக் கடன் வழங்கப்படும்.

காமத் குழு அடையாளம் காணப்பட்ட 26 நலிந்த துறைகளில் ரூ.50 கோடிக்கும் அதிகமான 2020, பிப்ரவரி 29-ம் தேதிக்கு முன்பாக ரூ.50 கோடிக்கும் குறைவான கடன் இருக்கும் நிறுவனங்களுக்குப் பொருந்தும்”.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!