நட்சத்திரம் நகர்கிறது- விமர்சனம்!

நட்சத்திரம் நகர்கிறது- விமர்சனம்!

மேலும் கீழும் பூச்சில்லாமல் சிந்தல், சிதறலின்றி தனது அரசியல் பார்வையை திட்டவட்டமாக முன்வைக்கிறார் இயக்குநர் பா. ரஞ்சித், “நட்சத்திரம் நகர்கிறது” படத்தின் மூலம். காதலே ஓர் அரசியல்தான் என்கிறது படம்.“வர்க்கம் ஒழிந்தால் சாதி ஒழிந்துவிடும் என்று சொல்பவர்களை எனக்கு ஆகாது” என்கிறார் கதையின் நாயகி துஷாரா, ஒரு காட்சியில்.இன்னொரு காட்சியில் “நீங்கள் கம்யூனிஸ்டா?” என்று அவரிடம் கேட்கப்படுகிறது. தயக்கமோ தாமதமோ இன்றி “நான் ஒரு அம்பேத்காரிஸ்ட்” என்று பதில் வருகிறது.

“போர்டிங் ஸ்கூலில்” படித்துவிட்டு சினிமாவில் நாயகனாகும் கனவுடன் நாடகக் குழுவில் சேரும் ஓர் இளைஞர், திருநங்கையர் பற்றிய அடிப்படைப் புரிதலின்றி இருக்கிறார் என்பதைப் படம் கோடிட்டுக் காட்டுகிறது.

தமிழ் என்ற பெயருள்ள நாயகியை, நாடகக் குழுவில் உள்ள தோழன் / காதலன் “தமில்” என்று அழைக்கும்போது, “எங்கே, தமிழ் என்று சொல்லு பார்ப்போம்” எனச் சீண்டுகிறார். அவருக்கு, தமிழே வரவில்லை. ஆனாலும் தமிழ் நாடகக் குழுவில் நடிக்கிறார். இருவருக்குமான சூடான விவாதத்தின் இடையே, உன் புத்தியை (அதாவது சாதிப் புத்தியை என்ற பொருளில்) காட்டிவிட்டாய் என்பதாகச் சாடுகிறார் தோழன். சற்றுமுன் இருவருக்கும் நடந்த உடலுறவின் போது, எங்கே போயிற்று அந்தப் புத்தி என்று பதில் கேள்வி எழுப்புகிறார் நாயகி. அதிர்வில், சுருங்கி வீழ்கிறார் தோழன்.

ஈடு இணையற்ற பங்களிப்புக்குப் பிறகும் இளையராஜாவுக்கு எதிராக வெளிப்படும் காழ்ப்பு மனநிலை எங்கே ஒளிந்திருக்கிறது என்பதைப் படம் நேரடியாகவே சுட்டிக்காட்டுகிறது. “நாடகக் காதல்” என்பதாக நடந்த கருத்தாடல்களுக்கு, படத்தில் வரும் “காதல் நாடகம்” வழியாக விரிவாகவே பதிலடி கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

திருநங்கையர் வாழ்வுரிமை மட்டுமின்றி மனிதர்களின் பாலியல் உணர்வுகள், உரிமைகள் (Lesbian, Gay) குறித்தும் கவனம் ஈர்க்கும் படம், ஆணவக் கொலைகளில் உயிரிழந்த பெண்கள்தான் கிராமத் தெய்வங்களாக ஆங்காங்கே வழிபடப்படுகிறார்கள் என்பது வரை பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது.

இதற்கு முன்பு தமிழ் சினிமா பார்த்திராத திரை மொழியின் வழியே “நட்சத்திரம் நகர்கிறது” படத்தைத் தந்திருக்கிறார் பா. ரஞ்சித். ஓர் அரசியல் உரையாடலை வலிமையான காட்சி ஊடகத்தின் வழியே முன்நகர்த்தியிருக்கிறார். மற்றவர்களும் உரையாடலாம் – அதே கலைநேர்த்தியும் அரசியல் உறுதியும் இருக்கும்பட்சத்தில். “இந்தப் பிரபஞ்சத்தில் நாமெல்லாம் ஒரு துகள் என்பதை உணர்ந்துவிட்டால், எல்லோரும் மகிழ்ச்சியாக வாழலாம்” என்கிறார் நாயகி, வானிலுள்ள நட்சத்திரக் கூட்டங்களைப் பார்த்தவாறே. துகளாவது, தூசியாவது… ஒவ்வொருவரும் ஓர் உலகமாக நடமாடுகிறார்கள்.

இளையபெருமாள் சுகதேவ்

மார்க் 3/5

error: Content is protected !!