அயோத்தியில் ராமர் கோயிலுக்கு பிரதமர் மோடி அடிக்கல்!- வீடியோ
உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, அந்த நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்காக ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை அமைக்கப்பட்டது. இதன்பின், கோயில் கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றன. எனினும், கொரோனா பரவல் காரணமாக அடிக்கல் நாட்டு விழா தள்ளிப் போடப்பட்டு வந்தது. இந்நிலையில், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜையும், அடிக்கல் நாட்டு விழாவும் இன்று பகல் 12.15 மணியளவில் நடைபெற்றது.
முன்னதாக, காலை 9.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானப்படை சிறப்பு விமானம் மூலம் பிரதமர் மோடி, லக்னோவுக்கு வந்தார். பின், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் அயோத்தி வந்தார். அயோத்தியில் அவரை உ.பி.கவர்னர் ஆனந்திப்பென், முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றனர். பிரதமர் மோடி முதலில் அனுமன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். பின்னர், ராமஜென்ம பூமியில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, அங்குத் தீபாராதனை காட்டி வழிபட்டார். தொடர்ந்து, அங்குச் சிறப்புப் பூஜைகளையும் செய்தார். பின்னர், அந்த வளாகத்தில் பாரிஜாத மலர்ச்செடியை நட்டு வைத்தார்.
இதையடுத்து, பூமி பூஜை நடைபெறும் இடத்திற்கு மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் சென்றனர். வேத மந்திரங்கள் முழங்கப் பூமி பூஜை தொடங்கியது. முகக் கவசம் அணிந்தபடியே பிரதமர் மோடி, கவர்னர் ஆனந்திப்பென், முதல்வர் ஆதித்யநாத் ஆகியோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, ராமர் கோயிலுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர், விழாவையொட்டி சிறப்புத் தபால்தலைகளைப் பிரதமர் வெளியிட்டார்.
🦉Prime Minister Narendra Modi plants a Parijat sapling, considered a divine plant, ahead of foundation stone-laying of RamTemple in Ayodhya.#RamMandirAyodhya pic.twitter.com/ew5Bz7ilpE
— Àanthai Répørter™ 👀🦉 (@aanthaireporter) August 5, 2020
விழாவில் பிரதமர் மோடி பேசும் போது, ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் எழுப்பினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் அந்த கோஷத்தை எழுப்பினர். இந்த கோஷம் உலகம் முழுவதும் ஒலிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். பல ஆண்டுகளாகத் தற்காலிக கூடாரத்தில் வைக்கப் பட்டிருந்த குழந்தை ராமருக்கு இங்குப் பிரம்மாண்ட கோயில் கட்டப்படுகிறது. இன்று நாடு முழுவதும் மக்களுக்கு உணர்ச்சிகரமான நாள் என்றும் குறிப்பிட்டார்.
இந்த விழாவுக்கு பல்வேறு இந்து மடாதிபதிகள் உள்பட 175 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். ரூ.300 கோடி செலவில் மூன்றரை ஆண்டுகளில் ராமர் கோயிலைக் கட்டி முடிக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து 2000 புனிதமான இடங்களில் இருந்து மண், 100 ஆறுகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்பட்டு பூமி பூஜை விழா நடத்தப்பட்டதாக அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Live from Ayodhya. https://t.co/cHp9fTFEdx
— Narendra Modi (@narendramodi) August 5, 2020