அவ்வையாரின் ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்ற வரிகளை மேற்கோள் காட்டி மான் கி பாத்!

அவ்வையாரின் ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்ற வரிகளை மேற்கோள் காட்டி மான் கி பாத்!

பிரதமர் நரேந்திர மோடி மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று காலை 11:00 மணிக்கு வானொலி மூலம் ‘மான் கி பாத்’  (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த நடைமுறை 2வது முறையாக பா.ஜ.க. ஆட்சியேற்ற பின்னரும் மன் கி பாத் தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில், நாட்டில் நிலவும் பிரச்னைகள், அரசின் முடிவுகள், மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் என பல்வேறு அம்சங்கள் குறித்தும், மத்திய அரசு செயல்படுத்தி வரும் சிறப்பு திட்டங்களால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மை குறித்தும் மோடி  பேசி வருகிறார். இன்றைய ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில்  இந்தியாவின் பல்லுயிர் பெருக்கம் குறித்து  பேசினார். அப்போது அவ்வையாரின் வரிகளை அவர் சுட்டிக் காட்டினார்.

பிரதமர் மோடி உரையில் உயிரி எரிபொருள், இளம் விஞ்ஞானி திட்டம், கைவினைப்பொருள் கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

உள்நாட்டிலேயே தயாரிக் கப்பட்ட உயிரி எரிபொருள் மூலம் விமானப்படையின் போக்குவரத்து விமானத்தை இயக்கி வரலாறு படைக்கப்பட்டு உள்ளது. உண்மைதான். விமான எரிபொருளுடன் 10 சதவீத உயிரி எரிபொருளையும் சேர்த்து முதல் மறையாக இரண்டு என்ஜின்களிலும் பயன்படுத்தி விமானம் இயக்கி உள்ளோம்.

காஷ்மீரின் லே விமான நிலையத்தில் இருந்து இந்த விமானம் பறந்து உள்ளது. இந்த விமான நிலையம் இந்தியாவிலேயே உயரமானது மட்டுமின்றி உலக அளவிலும் உயரமான விமான நிலையம் ஆகும். இந்த நடவடிக்கை மூலம் கார்பன் உமிழ்வு குறைவதுடன், இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக பிற நாடுகளை சார்ந்திருப்பதும் குறையும்.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இஸ்ரோவின் ‘யுவிகா’ திட்டம் குறித்து ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் விரிவாக கூறு மாறு ஜார்கண்டை சேர்ந்த பராஸ் என்ற மாணவர் என்னிடம் ‘நமோ’ செயலி மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இளம் விஞ்ஞானிகள் திட்டத்தின் சுருக்கமே ‘யுவிகா’ ஆகும். பள்ளி மாணவர்களுக்காக கடந்த ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி, மாணவர்கள் தங்கள் தேர்வுகளை முடித்து விடுமுறை நாட்களில் இஸ்ரோவின் பல்வேறு விண்வெளி ஆய்வு மையங்களுக்கு சென்று விண்வெளி தொழில்நுட்பம், அறிவியல், செயல்பாடுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்த பயிற்சியில் நீங்களும் இணைய விரும்பினால் யுவிகா இணையதளத்தில் பெயர்களை பதிவு செய்து பயன்பெறலாம். உள்நாட்டு இளைஞர்கள் மற்றும் மாணவர்களை அறிவியலில் பங்கெடுக்க வைக்கும் இஸ்ரோவின் இந்த திட்டம் பாராட்டத்தக்க முயற்சி ஆகும்.

சில நாட்களுக்கு முன்பு டெல்லி இந்தியா கேட் பகுதியில் கைவினை பொருள் கண்காட்சியை பார்வையிடும் வாய்ப்பை பெற்றேன். அங்கு பொருட்களை காட்சிக்கு வைத்திருந்தவர்களில் 50 சதவீதம் பேர் பெண்கள். நாட்டின் பன்முகத்தன்மை, கலாசாரம், பாரம்பரியம், சமையல் கலை மற்றும் உணர்வுகளின் அரவணைப்பை நான் அங்கு கண்டேன்.

பாரம்பரிய ஆடைகள், கைத்தறி நெசவுகள், கம்பளம், பாத்திரங்கள், மூங்கில் மற்றும் பித்தளை பொருட்கள், பஞ்சாபின் எம்பிராய்டரி, ஆந்திராவின் தோல் பொருட்கள், தமிழகத்தின் அழகான ஓவியங் கள், உத்தரபிரதேசத்தின் பித்தளை பாத்திரங்கள், குஜராத்தின் செம்பு பொருட்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளின் சிறப்புமிக்க பொருட்களை அங்கு பார்க்க முடிந்தது.

இந்த கைவினை திறன் பயிற்சி மூலம் 3 லட்சம் கைவினைஞர்கள் கடந்த 3 ஆண்டுகளில் வேலை பெற்று இருக்கின்றனர். இந்த பயிற்சி மூலம் தனது வாழ்க்கையே மாறிவிட்டதாக அங்கு கடை வைத்திருந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தெரிவித்தார்.

சாதனைகள் படைக்க ஊனமும், வயதும் தடையல்ல என்பதை சமீபத்தில் நிகழ்ந்த சில சம்பவங் கள் நமக்கு உணர்த்தி இருக்கின்றன. அதாவது கேரளாவை சேர்ந்த 105 வயது பகீரதி அம்மாள் 4-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உள்ளார். மும்பையை சேர்ந்த காம்யா (வயது 12) என்ற சிறுமி தென் ஆப்பிரிக்காவின் ஆண்டிஸ் மலைத்தொடரின் உயர்ந்த (7,000 மீ.) சிகரமான அகோன்காகுவாவில் ஏறி சாதனை படைத்து உள்ளார்.

இதைப்போல உத்தரபிரதேசத்தை சேர்ந்த சல்மான் என்ற மாற்றுத்திறனாளி செருப்பு தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். தான் நடப்பதற்கு கஷ்டப்பட்டாலும், அடுத்தவர்கள் எளிதில் நடப்பதற்காக செருப்பு தயாரித்து வழங்குகிறார்.

இப்படி வாழ்க்கையில் முன்னேற, நம்மையே மேம்படுத்திக்கொள்ள, எதையாவது சாதிக்க விரும்பினால், நம்முள் இருக்கும் மாணவன் ஒருபோதும் மரிக்கக்கூடாது என்பதே அதற்கான முன் நிபந்தனை ஆகும் என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும் நம் நாட்டின் பல்லுயிர் பெருக்கம் குறித்து பிரதமர் மோடி தனது ‘மான் கி பாத்’ உரையில் பேசினார். அப்போது அவ்வையாரின் வரிகளை அவர் சுட்டிக் காட்டினார். இது தொடர்பாக அவர், ’புலம் பெயர்ந்து வாழும் உயிரினங்கள் தொடர்பான மாநாடு ஒன்று சமீபத்தில் குஜராத்தில் நடந்தது. இதில் பல்லுயிர் தொடர்பாக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டப்பட்டன. இந்த மாநாட்டுக்கு அடுத்த 3 ஆண்டுகளுக்கு இந்தியாதான் தலைமை தாங்குகிறது. இது நமக்கு பெருமை ஆகும்.

உலகின் பல்வேறு பிராந்தியங்களில் இருந்து ஆண்டு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட வகையான பறவையினங்கள் இந்தியாவுக்கு வருகின்றன. மேகாலயாவின் சுரங்கங்களில் வாழும் புதிய வகை மீன் ஒன்றை மிக சமீபத்தில் உயிரியல் வல்லுனர்கள் கண்டறிந்து உள்ளனர். அரிதாக ஒளி புகும், இருள் சூழ்ந்த சுரங்கங்களில் இது வாழ்கிறது.

இது மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. நமது இந்தியா குறிப்பாக மேகாலயா, அரிதான உயிரினங்களுக்கு வாழ்விடமாக விளங்குகிறது. இவ்வாறு இன்னும் கண்டறியப்படாத ஏராளமான உயிரினங்கள் நம்மை சுற்றி வாழ்கின்றன.

இதை பார்க்கும்போது புகழ்பெற்ற தமிழ் புலவர் அவ்வையாரின், ‘கற்றது கையளவு, கல்லாதது உலகளவு’ என்ற வரிதான் நினைவுக்கு வருகிறது. அதாவது, ‘நாம் அறிந்திருப்பது ஒரு கைப்பிடி மண் அளவு மட்டுமே. ஆனால் நமக்கு தெரியாதது உலக அளவுக்கு உள்ளன’ என்பதே இதன் பொருள் ஆகும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

.

 

Related Posts

error: Content is protected !!