மதுரை முருக பக்தர்கள் மாநாடு ஹைலைட்ஸ்!
மதுரை வண்டியூர் சுங்கச்சாவடி அருகே இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நேற்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து நேற்று காலை முதலே வாகனங்களில் ஏராளமான பக்தர்கள் மதுரைக்கு வரத் தொடங்கினர். வாகனங்களுக்கு பாஸ் தேவை இல்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதால், ஏராளமான வாகனங்கள் மாநாட்டுக்கு வந்தன. பல லட்சம் பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்றனர். டையின் நடுவே முருகன் வேலுடன் நிற்பது போன்ற முழு உருவ கட்அவுட், அதன் பின்னணியில் திருப்பரங்குன்றம் கோயில் கோபுரம், மலை இருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. சாதுக்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கு தனித்தனியாக மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கியது. மடாதிபதிகள், ஜீயர்கள், சிவாச்சாரியார்கள், சாதுக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுவை மாநில சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு, அமைப்பு செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, அதிமுக தகவல் தொழில்நுட்ப மாநில செயலாளர் ராஜ்சத்யன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து சந்நியாசிகள், மடாதிபதிகள், இந்து முன்னணி, பாஜக தலைவர்கள் பேசினர். ஆன்மிக கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாநாட்டின் முக்கிய சாதனை நிகழ்வாக, ஒரே நேரத்தில் ஏராளமானோர் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாடுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இரவு 8.04 மணிக்கு இந்த நிகழ்வு தொடங்கியது. எல்இடி திரையில் இசையுடன் கந்தசஷ்டி கவசம் ஒலிக்க, அரங்கில் திரண்டிருந்த சுமார் 2 லட்சம் பக்தர்கள் அனைவரும் இணைந்து பக்தி பரவசத்துடன் பாடினர். மேடையில் இருந்த பவன் கல்யாண், அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் தரையில் அமர்ந்து பாடினர்.கந்தசஷ்டி கவசம் பாடி முடித்த பிறகு, மேடையில் அமைக்கப்பட்டிருந்த அறுபடை வீடுகளுக்கும், நடுவில் இருந்த பிரம்மாண்ட முருகன் சிலைக்கும் கைலாய வாத்தியங்கள் முழங்க தீபாராதனை நடைபெற்றது.
முருக பக்தர்கள் மாநாட்டில் 6 முக்கிய தீர்மானங்கள் இந்து முன்னணி நிர்வாகி கிஷோர் வாசிக்க, அவை நிறைவேற்றப்பட்டன.
2) பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டுக்கள்
4) தமிழகத்தில் உள்ள கோவில்களில் இருந்து இந்த சமய அறநிலைத்துறை வெளியேற வேண்டும்
5) தேர்தல்களில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும்
6) சஷ்டி தினத்தன்று சஷ்டி கவசத்தை ஒன்று சேர்ந்து பாட வேண்டும்.
இம்மாநாட்டில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பதாவது, “உலகத்தின் யூதர்கள் 0.2 விழுக்காடுகள் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வியல் முறையை பாதித்ததற்காக நான்கு நாடுகளுடன் இஸ்ரேல் சண்டைப் போட்டு கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் விமானம் 37 மணிநேரம் தரையில் படாமல் வந்து தாக்குதல் நடத்திவிட்டு சென்றிருக்கிறது. ஆனால், இந்தியாவில் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டால், சிலருக்கு பிரச்னை. இஸ்ரேல், அமெரிக்கா எப்படி நின்றுகொண்டிருக்கிறது. சம காலத்தில் இந்தியாவும் தங்களது வாழ்வியல் முறையை தொந்தரவு செய்யும்போது எதிர்வினையாற்றி இருக்கிறது.

இந்து மக்களிடம் ஒற்றுமை வராது என்று அரசியல்வாதிகள் இங்கு அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள். வட தமிழ்நாட்டில் பள்ளிக்கு ஒரு குழந்தை ருத்ராட்சம் அணிந்து செல்ல முடிவதில்லை. நமது வாழ்வியல் முறை தொந்தரவு செய்யப்படும் போது, நாமும் கேள்வி கேட்க வேண்டும். முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் பிரச்னை செய்தால் அனைத்து வீடுகளிலும் சூர சம்ஹாரம் செய்துவிட்டு, திருத்தணிக்கு அமைதியாக சென்றுவிடுவோம் என்று இந்த மாநாட்டின் மூலம் காட்டுகிறோம். இந்து மதத்தினருக்கு ஒன்று, இந்து மதம் சாராத ஒருவருக்கு ஒன்று என்று தமிழ்நாட்டில் எதற்காக இரண்டு சட்டங்கள்? பணம் இருப்பவருக்கு ஒரு மாதிரி, பிறருக்கு ஒரு மாதிரி என்று அறநிலையத் துறைக்கு கீழ் இருக்கும் 40,000 கோவில்கள் நடந்துகொண்டிருக்கின்றது.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் இப்போது தமிழ்நாடு, ஆன்மீகம், இலக்கியம் அனைத்தும் வேறு வேறு என்று ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அப்படி இல்லை. நமது மண்ணில் மூன்றும் இணைந்தது தான். நான்கு நாள்களுக்கு முன்பு, திருப்பரங்குன்றத்திற்கு எம்.பி ஒருவர் வந்தார். அவரிடம் ஒரு அம்மா செல்பி கேட்டார். அப்போது அவர் திருநீற்றை அழித்துகொண்டு செல்பி எடுத்தார். ஆனால், அடுத்து ஆண்டு இவர்கள் ஓட்டு பிரச்னைக் கேட்டு நம்மிடம் வருவார். அப்போது நாம் அவர்களைப் பார்த்துகொள்ள வேண்டும்.” என்றார்.
மாநாட்டில், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பேசியதாவது:
முருகப் பெருமான் என்னை மதுரைக்கு வரவழைத்துள்ளார். தந்தை சிவபெருமான், தாய் மீனாட்சியுடன் முருகனும் அருள்பாலிக்கும் மதுரையில் வசிக்கும் மக்கள் புண்ணியம் செய்தவர்கள். 14-ம் நூற்றாண்டில் மீனாட்சி அம்மன் கோயில் மீது மாலிக்காபூர் தாக்குதல் நடத்தினான். அதற்கு பிறகு 60 ஆண்டுகளுக்கு கோயில் மூடப்பட்டிருந்தது. அது மதுரையின் இருண்ட காலம். அதற்கு பிறகு ஒளி பிறந்தது. ஒளி ஏற்றியவர் விஜயநகர அரசர். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை நமது அறம் ஆழமாக உள்ளது. நமது கலாச்சாரத்தை யாராலும் அழிக்க முடியாது. தீமைகள் சூழும்போது அதை அறுப்பதுதான் அறம். அதுதான் புரட்சி. அதை செய்பவர்கள்தான் புரட்சித் தலைவர்கள். உலகின் முதல் புரட்சித் தலைவர் முருகப் பெருமான். அநீதியை அழித்ததால், அனைவரையும் சமமாக நடத்தியதால் அவர் புரட்சித் தலைவர்.

முருகன் மாநாட்டை தமிழகத்தில் ஏன் நடத்துகிறீர்கள் என்று ஒரு கட்சித் தலைவர் கேட்கிறார். உத்தர பிரதேசம், குஜராத்தில் நடத்த வேண்டியதுதானே என்கின்றனர். இன்று முருகனை பார்த்து இப்படி கேட்கிறார்கள். நாளை சிவபெருமானை பார்த்து கேட்கலாம். இந்த சிந்தனை மிகவும் ஆபத்தானது. இங்கு ஒரு கிறிஸ்தவர், கிறிஸ்தவராக இருக்கலாம். ஒரு முஸ்லிம் தனது மதத்தை பின்பற்றலாம். ஆனால், ஒரு இந்து தனது மதத்தை பின்பற்றினால், மதவாதி என்கின்றனர். இதுதான் போலி மதச்சார்பின்மை. உங்கள் நம்பிக்கையை நாங்கள் கேள்வி கேட்கவில்லை. அதே நாகரிகத்தை நீ்ங்களும் கடைபிடியுங்கள்.
எங்கள் மதத்துக்கு மரியாதை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவமரியாதை செய்யாமல் இருங்கள். முருகனை பற்றி கேள்வி கேட்கும் நீங்கள், வெளிநாட்டில் இருந்து வந்த மதத்தை பற்றி கேள்வி கேட்க முடியுமா? அதற்கு துணிச்சல் உண்டா. அதனால்தான் சொல்கிறேன் எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள், சாது மிரண்டால் காடு கொள்ளாது. முருகப் பெருமானை பற்றி இழிவாக சொன்னால் நம் இதயம் நொறுங்க வேண்டாமா? நம்மை காப்பாற்றும் இறைவனுக்கு நாம் நன்றியை காட்ட வேண்டாமா? நான் இங்கிருந்து அறைகூவல் விடுக்கிறேன். அநீதியை தட்டிக்கேட்க எழுவோம். அநீதியை தட்டிக்கேட்க இந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். நம்முடைய எண்ணங்கள் நிறைவேற நிச்சயமாக ஒன்றிணைய வேணடும். ஒற்றுமையாக போராடினால் வெற்றி கிடைக்கும். மாற்றம் ஒன்றே மாறாதது. தர்மத்தின் பாதையில் நின்று முருகனை நம்பினால் வெற்றிதான், உயர்வுதான், எழுச்சிதான். இவ்வாறு அவர் பேசினார்.


