மெட்றாஸ் ஸ்டேட்டை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த நாள்!
இன்னிக்கு ஹேப்பியா பொங்கல் கொண்டாடிக்கிட்டி இருக்கற நம்ம தமிழகம். அப்போல்லாம் மதறாஸ் அல்லது மெட்றாஸ் ஸ்டேட் அப்படீன்னு சொல்லிகிட்டு இருந்தாய்ங்க. கிட்டத்தட்ட 1967 வரை அப்படியே அழைக்கப் பட்டு வந்த, இந்த பூமிக்கு. தமிழ்நாடு என்று பெயரை அஃப்ரீஷியலாக மாற்றுவதற்கு சில பல பெரியவங்க எடுத்துக்கிட்ட முயற்சிகள் எக்கச்சக்கம்… மெட்றாஸ் ஸ்டேட்டை, தமிழ்நாடு என்று பெயர் சூட்டி அழைத்த அந்த நாள் இன்றுதான்.
அதாவது நம்ம இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தமிழகம் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என்றும் தமிழில் சென்னை மாகாணம் என்றும் அழைக்கப்பட்டது. அப்போது தமிழகத்தில் ஆந்திர மாநிலமும் இருந்தது. இதுக்கப்புறம் தெலுங்கு பேசும் பகுதிகளை பிரித்து தனியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படவேண்டும் என மக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்தது. இதனைத் தொடர்ந்து 1953 அக்டோபர் 1ஆம் தேதி ஆந்திரா தனி மாநிலமாக உருவாக்கப்பட்டது.
இதையடுத்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு சென்னை மாகாணத்தை தமிழ்நாடு என்று மாற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. சங்கரலிங்கனார் என்பவர் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர்துறந்தார். காமராஜர், ராஜாஜி, அண்ணா போன்ற தலைவர்கள் வலியுறுத்தியும் அவர் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார் தொடர்ந்து அவரது உடல்நிலை மோசமடைந்து அக்டோபர் 13, 1956ல் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பின்னர் பல்வேறு அமைப்பினர் தமிழ்நாடு என பெயர் மாற்ற கோரி போராட்டம் செய்தனர். அதன்படி 1962ஆம் ஆண்டு மார்ச் மாதம் நாடாளுமன்றத்தில் ‘தமிழ்நாடு’ கோரிக்கைக்காகத் தனி மசோதா கொண்டு வந்தபோது, அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1964 ஜனவரியில் சட்டமன்றத்தில் ‘தமிழ்நாடு’பெயர் சூட்டத் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதும் அத்தீர்மானம் தள்ளுபடி செய்யப்பட்டது.
பின்னர் அண்ணா தலைமையிலான திமுக அரசு அமைந்தவுடன் 1967ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 1968 நவம்பர் 23ல் தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அதன் தொடர்ச்சியாக 1969ம் ஆண்டு இதே ஜனவரி 14ம் தேதி தமிழ்நாடு என்று மாநிலத்திற்கு பெயர் மாற்றப்பட்டது.
ஆம்.. “மெட்ராஸ் ஸ்டேட்” என்ற பெயரை அடியோடு ஒழித்து, “தமிழ் நாடு” என்று பெயரைச் சூட்ட வேண்டும் என்று தி.மு.க. அரசு முடிவு செய்து இதற்காக அரசியல் சட்டத்தை திருத்தவேண்டும் என்ற தீர்மானத்தை, தமிழக சட்டசபையில் 18-7-1967 அன்று முதல்_அமைச்சர் அண்ணா கொண்டு வந்தார். கூட்டத்துக்கு சபாநாயகர் சி.பா.ஆதித்தனார் தலைமை தாங்கினார். “தமிழ் நாடு” என்று பெயர் சூட்ட அனைத்துக்கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர்.
பாலசுப்பிரமணியம் (இ.கம்.) பேசுகையில், “இனி நாம் எங்கு சென்றாலும் மற்றவர்கள் நம்மை `தமிழன்’ என்று அழைக்க வேண்டும். `மதராசி’ என்று அழைக்கக் கூடாது” என்று கூறினார்.
ஆதி மூலம் (சுதந்திரா) பேசுகையில், “தமிழ் நாடு” பெயர் மாற்றக் கோரிக்கைக்காக முன்பு சங்கரலிங்கனார் உண்ணாவிரதம் இருந்தார். காங்கிரசின் அலட்சியத்தால் அவர் உயிர் இழந்தார்” என்று குறிப்பிட்டார்.
தமிழரசு கழகத்தலைவர் ம.பொ.சிவஞானம் பேசுகையில் கூறியதாவது:
“இந்த தீர்மானத்தை உணர்ச்சி பூர்வமாக உயிர்ப்பூர்வமாக ஆதரிக்கிறேன். தி.மு.கழக ஆட்சியில்தான் இப்படி தீர்மானம் வரவேண்டும் என்பது கடவுள் செயலாக இருக்கலாம். காங்கிரஸ் கட்சியினர் 10 ஆண்டுகளுக்கு முன்பே ஆதரித்திருந்தால் காங்கிரசின் நிலையே வேறாக இருந்திருக்கும்.
பாரதிக்கு தாய் நாடாக, தந்தை நாடாக, செந்தமிழ் நாடாக விளங்கி 3 ஆயிரம் ஆண்டுகளாக புகழ் பெற்ற பெயரைத்தான் நாம் வைக்கிறோம். அதை எதிர்க்கவும் மனம் வந்தது என்றால் மனம் கொதிக்காதா? முதல்_அமைச்சர் இந்தத் தீர்மானத்தை படித்து முடித்த போது, ஓடிச்சென்று அவரைக் கட்டித்தழுவி பாராட்ட வேண்டும் என்று உணர்ச்சி மேலிட்டது.
அடக்கிக்கொண்டேன். “தமிழ் நாடு” என்று பெயர் வைத்தபின் தமிழுக்கு வாழ்வு அளிக்காவிட்டால் பயனில்லை. இந்த கோட்டையின் பெயர் “செயிண்ட் ஜார்ஜ் கோட்டை” என்று இருப்பதை “திருவள்ளுவர் கோட்டை” என்று மாற்ற வேண்டும்.”
இவ்வாறு ம.பொ.சி. கூறினார்.
விவாதத்துக்கு பதில் அளித்துப்பேசுகையில் அண்ணா கூறியதாவது:
“இந்த நாள் ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்விலும், எழுச்சியும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டிய நாள். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்து இருக்க வேண்டிய இந்த தீர்மானம், காலந்தாழ்த்தி வந்தாலும் இங்குள்ள அனைவரின் பேராதரவுடனும் வருகிறது.
இதை இந்த சபையில் நிறைவேற்றி, இந்திய பேரரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுபற்றி நான் மத்திய அமைச்சர்கள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, “தமிழ் நாடு” என்ற பெயரை சட்டமன்றத்தில் நிறைவேற்றி இந்திய பேரரசுக்கு அனுப்பி வைத்தால், அதற்கு ஏற்ப இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதில் தடை எதும் இல்லை” என்று கூறினார்கள்.
10 நாட்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தில் பேசிய மத்திய அமைச்சர் சவான், இதுவரை “மெட்ராஸ் ஸ்டேட்” என்றே பேசியவர், மிகவும் கவனத்துடனும், சிரமத்துடனும் “டமில் நாட்” (தமிழ் நாடு) என்று பேசினார். ஆகவே அரசியல் சட்டத்தை திருத்த நல்ல வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்த தீர்மானம் எதிர்ப்பு ஏதுமின்றி நிறைவேறினால் அந்த வெற்றி ஒரு கட்சியின் வெற்றி அல்ல.
தமிழின் வெற்றி. தமிழரின் வெற்றி. தமிழர் வரலாற்றின் வெற்றி. தமிழ் நாட்டு வெற்றி. இந்த வெற்றியில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும். மேலும் நாம் பெயர் மாற்றம் செய்வதாலேயே தனி நாடு ஆகவில்லை. இந்தியப் பேரரசின் ஒரு பகுதியாகவே நம் மாநிலம் இருக்கும்.
அதனால் சர்வதேச சிக்கல்கள் எழாது. சங்கரலிங்கனாருக்கு நினைவுச்சின்னம் ஏற்படுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டது. அவரது எண்ணங்கள் ஈடேறும் நிலை இன்று ஏற்பட்டு இருப்பது, நம் வாழ்நாள் முழுவதும் பெருமை தருவது ஆகும்.
நாம் இப்படி பெயர் மாற்றத்துக்குப் பேராதரவு அளித்ததற்காக எதிர்கால சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள். அந்த நல்ல நிலையை எண்ணிப் பார்த்தால் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை சொல்லாமல் இதற்கு பேராதரவு அளிப்பார் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அண்ணா கூறினார்.
பிறகு தீர்மானம் ஓட்டுக்கு விடப்பட்டது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக சபாநாயகர் ஆதித்தனார் அறிவித்ததும், மண்டபமே அதிரும் வண்ணம் உறுப்பினர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.
பின் அண்ணா எழுந்து, “தமிழ் நாடு” என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறிய வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நன்னாளில், தமிழ் நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்”
என்று கூறி, “தமிழ்நாடு” என்று 3 முறை குரல் எழுப்பினார்.
எல்லா உறுப்பினர்களும் “வாழ்க” என்று குரல் எழுப்பினார்கள்.
சபை முழுவதிலும் உணர்ச்சிமயமாக காட்சி அளித்தது.
டெயில் பீஸ்:
தமிழ்நாடு என்பதைக் கூட ஆங்கிலத்தில் எப்படி அழைக்க வேண்டும் என்பதில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, தமிழ்நாடு என்பதை TAMIL NAD என்று தான் அழைக்க வேண்டும் என்று ராஜாஜி அறிக்கை விட்டார். அவரின் சீடர் என்று அறியப்பட்ட ம.பொ.சி. இதனை மறுத்து, “THAMIZH NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று திருத்தம் கோரினார். இதனை மறுத்த அண்ணா ‘ழ’ கர உச்சரிப்பை வடக்கே உள்ளவர்கள் பிழையின்றி ஒலிக்க முடியாது என்பதால் “THAMIZH NADU” க்கு பதிலாக “TAMIL NAD” என்று அழைப்போம் என்று கூறினார். அதற்கு மறுமொழியாக ம.பொ.சி. அவர்கள் “TAMIL” கூட இருக்கட்டும், ‘உ’ கர உச்சரிப்பை என்னால் விட்டுக் கொடுக்க முடியாது. “NAD” என்பதை “NADU” என்று தான் அழைக்க வேண்டும் என்று கண்டிப்புடன் கூறிடவே, அண்ணாவும் இதனை மனமுவந்து ஏற்றுக் கொண்டார்.