தமிழ் குரல் / AI Voice
நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ஆற்றலைச் சர்க்கரை வழங்குகிறது. ஆனால், அந்தச் சர்க்கரையைச் சரியாகப் பயன்படுத்த முடியாமல் போகும்போது, முழு உடலையும் மெல்லச் சீரழிக்கும் ஒரு மௌனக் கொலையாளியாக நீரிழிவு நோய் மாறுகிறது. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களைப் பந்தாடி வரும் இந்த நோயைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் நாளாக உலக நீரிழிவு நோய் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 ஆம் தேதி உலக நீரிழிவு நோய் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இந்த நாளில், நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான நவீன சிகிச்சைகள், தடுப்பு முறைகள் மற்றும் முன்னெச்சரிக்கைகள் குறித்துப் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டின் (2026) அதிகாரப்பூர்வக் கருப்பொருளாக “Early action on diabetes” (நீரிழிவு நோயில் ஆரம்பகால நடவடிக்கை / முன்கூட்டிய நடவடிக்கை) என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, நோய் வந்த பிறகு கவலைப்படுவதை விட, தொடக்க நிலையிலேயே அதைக் கண்டறிந்து முறியடிப்பதே இந்த ஆண்டின் முக்கியச் செய்தியாகும்.
நீரிழிவு நோயின் பின்னணியும் அதன் வகைகளும்
மருத்துவ வரலாற்றில் நீரிழிவு நோய் என்பது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியப்பட்ட ஒன்றாகும். பண்டைய எகிப்திய மற்றும் இந்திய மருத்துவக் குறிப்புகளில் எறும்பு மொய்க்கும் சிறுநீர் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. உடலின் கணையத்தில் (Pancreas) இன்சுலின் உற்பத்தி முற்றிலும் நின்றுபோனாலோ அல்லது உற்பத்தியாகும் இன்சுலினை உடல் பயன்படுத்த முடியாமல் போனாலோ இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கத் தொடங்குகிறது.

இது முக்கியமாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.
முதல் வகை (Type 1) என்பது மரபியல் ரீதியாகவும், உடல் தன் எதிர்பார்த்தைத் தானே தாக்குவதாலும் சிறு வயதிலேயே ஏற்படுகிறது. இதில் உடலால் இன்சுலினைத் தயாரிக்கவே முடியாது.
இரண்டாம் வகை (Type 2) என்பது நமது உணவுமுறை மாற்றங்கள், உடற்பயிற்ச்சியின்மை மற்றும் உடல் பருமன் காரணமாக வயதான காலத்தில் ஏற்படுகிறது. இன்று உலகை அச்சுறுத்தும் நோய்களில் பெரும்பான்மை இரண்டாம் வகை நீரிழிவு நோய்தான்.
ஆரம்பகால நடவடிக்கை ஏன் அவசியமாகிறது?
இந்த ஆண்டின் கருப்பொருளான முன்கூட்டிய நடவடிக்கை என்பது வெறும் வார்த்தையல்ல, லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றும் மந்திரம். பலரும் தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பதை அறிந்துகொள்ள பல ஆண்டுகள் ஆகின்றன. அதற்குள் அது சிறுநீரகங்கள், கண்கள், நரம்புகள் மற்றும் இதயத்தைச் சேதப்படுத்தி விடுகிறது.
நோய் ஆரம்ப நிலையில் இருக்கும்போதே அதாவது ப்ரீ-டயாபெட்டீஸ் (Pre-diabetes) நிலையிலேயே அதைக் கண்டறிந்து முறையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டால், அது முழுமையாகத் தவிர்க்கப்படலாம் அல்லது கட்டுக்குள் வைக்கப்படலாம். ஆரம்பத்தில் கவனிக்கத் தவறினால், இது பக்கவாதம், மாரடைப்பு மற்றும் உடல் உறுப்புகளைச் செயலிழக்கச் செய்யும் ஆபத்தை ஏற்படுத்துகிறது.
சிகிச்சை, தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை முறைகள்
நீரிழிவு நோயைத் தடுத்து நிறுத்தவும், வந்த பிறகு அதை எதிர்கொள்ளவும் சில எளிய வழிமுறைகள் உள்ளன:
உணவு முறை மாற்றம்: நார்ச்சத்து அதிகம் உள்ள காய்கறிகள், கீரைகள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்ப்பது அவசியம். சர்க்கரை மற்றும் மைதா போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.
உடற்பயிற்சி: தினமும் குறைந்தது முப்பது நிமிடங்கள் நடைபயிற்சி அல்லது ஏதேனும் ஒரு உடல் உழைப்பு இருப்பது இன்சுலின் உற்பத்தியைச் சீராக்க உதவும்.
வழக்கமான பரிசோதனை: நாற்பது வயதைத் தாண்டியவர்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை (HbA1c பரிசோதனை) பரிசோதித்துக் கொள்வது நல்லது.
மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை: இன்றைய நவீன வாழ்க்கை முறையில் தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் ஆகியவையும் ஹார்மோன் சமநிலைக் கேட்டை ஏற்படுத்தி நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கின்றன.
இன்றைய நவீன உலகில் நீரிழிவு நோய் என்பது முதியவர்களை மட்டுமல்ல, இளம் தலைமுறையினரையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ளது. துரித உணவு கலாச்சாரமும், உடல் அசைவற்ற வாழ்க்கை முறையும் இதற்கு முக்கியக் காரணங்களாகும். முன்கூட்டியே விழித்துக்கொள்வோம்; ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவோம்!
வாத்தீ அகஸ்தீஸ்வரன்
