June 2, 2023

நம் தமிழ் சினிமா படைப்பாளிகளில் ஒரு சாரார் முதியோரை தலைக்கூத்திக் கொல்லுதல் நடக்கும் சடங்கைப் படமாக்கி அவார்ட் வாங்கும் போக்கு ஒரு பக்கம் இருந்தாலும் பள்ளி மாணவ, மாணவி யரின் காதலைப் பற்றி கதைப் பின்னி தங்களின் படைப்புத் திறமையைக் காட்டுவோரே அதிகம். ஏற்கெனவே பள்ளிகளில் இருக்கவேண்டிய கண்ணியமான ஆண்-பெண் நட்பைக் காட்டலாமே? அதுபோக திரைப்படமாக எடுக்க இன்னும் எவ்வளவோ வேறு நல்ல விஷயங்கள் இருக்கிறதே. தனது மகள்/மகன் பள்ளியில் படிக்கும்போதே காதலிப்பதைக் கண்டு எந்த பெற்றோராவது மகிழ்ச்சி யடைவரா? என்றெல்லாம் எதிர்ப்புக் குரல் வந்தாலும் பருவ வயது காதலை தொடரும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் பள்ளிப் படிப்பு முடியும் முன்பே, காதலித்து கல்யாணமும் செய்து கொள்ளும் போக்கால் என்ன நடக்க்கும் என்பதை கிளைமாக்ஸாக் வைத்து மாயநதி என்ற பெயரில் கொடுத்திருக்கிறார்கள். இதன் மூலம் பதின்மவயதில் வரும் பாலின கவர்ச்சியை காதல் என்று கருதும் சில மாணவர்களின் லட்சியமும், வாழ்க்கையும் எப்படி பாழாகிறது என்பதை கொஞ்சம் எளிய பாணியில் சொல்லி கவர்ந்திருக்கிறார் அசோக் தியாகராஜன் என்ற இயக்குநர்.

+2 படிக்கும் மாணவி வெண்பா . பருவப் பெண்ணான அவருக்கு படிப்பிலும் நடத்தையிலும் சிறந்து விளங்க அப்பா ஆடுகளம் நரேன் பெரிதும் உறுதுணையாக இருக்கிறார். அபிசரவணன் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுகிறார். ஜாலியாக இருக்கிறார். வெண்பா வழக்கமாக செல்லும் ஆட்டோ டிரைவர் இல்லாததால் சில நாட்கள் அபிசரவணன் வெண்பாவை அழைத்துக்கொண்டு போய் விடுகிறார். இது நட்பாகி காதலாகவும் மாறுகிறது. அப்பாவின் எச்சரிக்கையையும் மீறி அபிசரவணனை காதலிக்கும் வெண்பா-வின் குடும்ப வாழ்க்கைதான் முழு படம்.

மாயநதி என்னும் இப்பட ஓட்டத்தை சீராகக் கொண்டு செல்வது நாயகி வெண்பாவும் அப்பா ரோலில் வரும் ஆடுகளம் நரேனும் தான். நம் வீட்டு மற்றும் பக்கத்து வீட்டு அப்பா, மகள் மாதிரி இருவரும் படு இயல்பாக நடித்து அசத்துகிறார்கள். அபி சரவணன்-னுக்கு இது பொருத்தமான ரோல் என்பதால் ஜாலியாக சுற்றுவது, காதலி ஏமாற்றிவிடுவாளா? என்று குழம்புவது, இறுதியில் தன்னால் வெண்பாவின் கனவு தடைபட்டு போனதே என்று விபரீத முடிவு எடுப்பது என கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். அபிசரவணனின் நண்பர்களாக வரும் அப்புக்குட்டி, கார்த்திக் ராஜா இருவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்துள்ளனர்.

பவதாரிணி பின்னணி இசை படத்துக்குத் தனி பலம். பாடல்களும் ரசிக்க வைக்கின்றன. ஸ்ரீனிவாஸ் தேவாம்சத்தின் ஒளிப்பதிவு ஓ கே.

மொத்தத்தில் பருவ வயதுள்ள பெண் ஒருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரும் பார்க்க வேண்டிய படமிது..

மார்க் 3 / 5