மாண்புமிகு பறை- விமர்சனம்!
பறை என்பது தலித் மக்களின் இசைக்கருவியாகும். பறையர் மற்றும் ஆந்திராவிலிருந்து குடியேறிய அருந்ததியர் (இவர்கள் தப்பு என்று அழைக்கிறார்கள்) ஆகிய இரு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இதை இசைக்கிறார்கள். இது தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஒரு முக்கிய தோல் இசைக்கருவியாகும். தற்போது நாட்டுப்புற இசையிலும், சில உயர்த்திக் கொண்ட சாதிகளைச் சேர்ந்தவர்களின் இறுதி ஊர்வலத்தின்போதும் இது இசைக்கப்படுகிறது.
‘சாவுக்கு பறை அடிப்பது’ என்ற அம்சத்தை காரணமாகச் சுட்டி, பறையையும், அதை இசைக்கும் சமூகத்தினரையும் உயர்த்திக் கொண்ட சாதிகள் ஒடுக்கி வைத்தன. அண்மைக்காலமாக, தலித் மக்களின் பண்பாட்டு அடையாளமாகவும், சமூக விடுதலையின் அடையாளமாகவும் பறையை முன்னிறுத்தி தலித் குழுக்கள் செயல்பட்டு வரும் சூழலில், பறைக்கு மந்திரிகளை விளிக்கும் மரியாதை சொல்லுடன் இந்தப் படம் உருவாகியுள்ளது.
கதைச் சுருக்கம்
வெற்றி (லியோ சிவகுமார்) மற்றும் எழில் (ஆரியன்) இருவரும் பறை இசையைக் கற்றுத்தரும் பள்ளியை நடத்துகின்றனர். ஊர் தலைவரும் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ‘சாவுக்கு பறை அடிக்க மாட்டோம்’ என்ற கொள்கையுடன் வரும் வாய்ப்புகளை இருவரும் தட்டிக்கழிக்கின்றனர். வெளியூர் திருவிழாவிற்குச் சென்ற எழில், அங்கு மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். உள்ளூர்வாசிகளால் அது போலீசை வைத்து மறைக்கப்படுகிறது. வெற்றி எவ்வளவு முயன்றும் உண்மையை வெளிக்கொண்டுவர முடியவில்லை. ஒரு கட்டத்தில் வெற்றிக்கும் இதே சூழல் ஏற்படுகிறது. அதன் பிறகு நடப்பது என்ன என்பதே மாண்புமிகு பறை திரைப்படத்தின் கதை.
நடிப்பு மற்றும் தொழில்நுட்பம்
-
லியோ சிவக்குமார் (வெற்றி): ஹீரோவாக ஓரளவுக்கு நடித்து பாஸ்மார்க் வாங்கியுள்ளார். எமோஷனல் காட்சிகளில் இன்னும் அவர் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.
-
ஆர்யன் எஸ்.என் (எழில்): தனக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரை உள்வாங்கி நல்ல நடிப்பைக் கொடுத்துள்ளார்.
-
காயத்ரி ரமா: நன்றாக நடித்துள்ளார். ஆனால், அவரின் கேரக்டரை இன்னும் வலுவாக (Strong) எழுதியிருக்கலாம்.
திரைக்கதை மற்றும் இயக்கம்:
-
கதையைச் செறிவாகத் தேர்ந்தெடுத்த சுபா மற்றும் சுரேஷ் ராம் ஆகியோர் திரைக்கதையை இன்னும் கூடுதல் தெளிவோடு எழுதியிருக்கலாம்.
-
ஒரு சில இடங்களில் வசனங்கள் ஷார்ப்பாக இருப்பது ஆறுதல்.
-
மொத்த எமோஷனலும் ஒரே இடத்தில் குவிக்கப்படாமல் ஆங்காங்கே ஜம்ப் ஆவதால், பறையிசையில் போதிய ஒலி இல்லை—மொத்த அழுத்தமும் ஒரே இடத்தில் இல்லாமல் சிதறிவிடுகிறது.
பலவீனம்
படத்தில் அழுத்தமான காட்சிகளில் கூட உணர்ச்சி இல்லை; திரைக்கதையில் நேர்த்தி இல்லை. இடைவேளைக்குப் பின் சம்பந்தம் இல்லாமல் கதை எங்கேயோ சுற்றி, ஏதோ முடிவுக்கு வருகிறது.
தேவா இசையமைக்க ஒப்புக்கொண்ட பாடல்களைக் கொடுத்திருக்கிறார். இத்தனைக்கும் பறையிசையைச் சம்பந்தப்படுத்தப்பட்ட கதை. ஆனால், பாடல்களில் இதம் இல்லை; தேவா இசையா என்று சந்தேகம் வருகிறது.
படத்தின் கிளைமாக்ஸில், ஒரு முக்கியமான காட்சியில் பறை அடித்துப் பேசும் ஆக்ரோஷமான வீரோவின் காதலி ரமா, பறை அடிப்பதற்கோ, முன்கதையின் உணர்வுக்கோ எந்தச் சம்பந்தமும் இல்லாதவராக இருக்கிறார். குறைந்தபட்சம் சில நாட்களாவது பறை இசையைக் கற்றுக்கொண்டு அந்தச் சீனில் நடித்திருக்கலாம் அல்லது பறை அடிப்பது போல் நடித்திருக்கலாம், ஆனால் இரண்டுமே இல்லை. இப்படி ‘ஏனோதானோ’ என்று இருக்கிறது படம்.
இறுதி மதிப்பீடு
மாண்புமிகு பறை – மதிப்பிழந்து தப்புத் தாளமாகி விட்டது
மார்க்: 2/5


