இந்த வாரத்திற்குப்பின் மனச்சோர்வின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்!

இந்த வாரத்திற்குப்பின் மனச்சோர்வின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும்!

மூன்றாவது வாரத்தில் மனம் சோர்வடையும் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் எதிர் பார்த் ததை விடவும் அதிகம் பேர் பாதிப்பின் ஆரம்பக் கட்டத்திற்கு வந்து விட்டார்கள். சாலைகளில் அசாதாரணமான ஒரு நிசப்தம், அவ்வப்போது பொறுப்பற்ற சில விடலைகளின் வாகன வேகத்தால் நாராசமாகிறது.வீடுகளிலும் பேச்சு குறைந்து விட்டது. புத்தகங்கள் பாதியில் மூடப்பட்டு கிடக்கின்றன. டிவியில், கணினியில் படங்கள் ஓடவில்லை. எல்லா கண்களும் கைகளில் இருக்கும் செல்பேசியில்- விரல்களால் நீவி நீவி செய்திகளையும் பொய்களையும் பார்த்துக் கொண்டு தேதி கிழமை தெரியாத மெத்தனத்தில் வாழ்க்கை நின்று விட்டது போல் தோன்றுகிறது.


தொழில்நுட்பம் தெரியாத சிலர் தெரிந்தது போல் பேசுபவர் சொன்னதை நினைவில் வைத்துக் கொண்டு வெறுமையில் கிடக்கிறார்கள். நாம் மாறிவிட்டோமா? மீண்டும் பழைய நிலைக்குச் செல்வோமா? என்று யாருக்கும் புரியாத ஒரு மந்த நிலை. ஒரு நாளில் நாற்பது தடவை தொற்று எண்ணிக்கை, சாவு எண்ணிக்கை என்று கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அதை விட்டுவிட்டார்கள். பல எழுத்தாளர்களின் பேனா முனைகள் உலர்ந்து கிடக்கின்றன, ஓவியத் திரைகள் வெள்ளையாகவே இருக்கின்றன. எல்லா நாட்களும் இரவின் தூக்கத்தை நோக்கியே நகர்கின்றன.

வாழ்வை நடத்துவதே தினசரி போராட்டம் என்று பழகிய வறியவர்கள் கூட திகைத்து விட்டார்கள். தினமும் வேலை, வேலைக்கு ஊதியம், ஊதியத்தில் வாழ்க்கை எனும் இயல்பு பிரழ்ந்து விட்டது. வேலை இல்லை, வெளியே போகவும் முடியாது, பொருட்கள் வாங்கவும் பணம் இல்லை என்ற நிலையில் உதவிகள் எங்கிருந்து எப்போது வரும் எனும் ஏக்க எதிர்பார்ப்பில் அவர்களது நாட்கள் தேய்ந்தன. அவர்களிடம் வேலை வாங்கிப் பழகிவிட்ட நடுத்தர வர்க்கம் தன் வேலையைத் தானே செய்வதன் சிரமத்தை இயல்பாக லகுவில் ஏற்றுக்கொண்டது. ஆனாலும் பழகிய வசதிகள் இல்லாதது ஓர் இறுக்கத்தை அவர்களிடமும் ஏற்படுத்தி விட்டது. இன்னும் ஒரு வாரம், இரண்டு வாரம் எனும் கணக்குகளில் அவர்களுக்கு நம்பிக்கை போய்விட்டது.

வலுக்கட்டாயமாக வீட்டிலேயேஅடைபட்டிருக்கும் குடும்பத்தில் நெருக்கத்துக்குப் பதிலாய் இறுக்கம் கூட ஆரம்பித்தது. சிரு தவறுகள் பெரிதாய்த் தெரிந்தன, பொழுது போவது பெரும் பாரமாகி யது.வளமான வாழ்வை அமைத்துக் கொண்டவர்களுக்குப் பணி செய்ய இன்னமும் சிலர் இருந்தார்கள். அவர்களது இயல்பு எனும் கேளிக்கை, சமூகவலைவிரிப்புகள் மட்டுமே இல்லாமல் போயின.

குடிப்பதற்கும் புகைப்பதற்கும் பழகியவர்களுக்கு அவை இல்லாமல் ஒருவித எரிச்சல் இருந்து கொண்டே வந்தது. அதன் வெளிப்பாடு வீட்டில் இருப்பவர்களின் மீது தேவையில்லாத கோபமாய் வந்து கொண்டிருந்தது. திடீரென்று அறிவிக்கப்பட்ட நாடடங்கில் திட்டமிடாமல் வந்த உறவினர் கள் சில வீடுகளில் பாரமாக உணரப்பட்டனர். அவர்களுக்குப் போக முடியாமல், இவர்களுக்கும் அனுப்ப முடியாமல், செலவுகளோடு உறவுச்சிக்கல்களையும் பல வீடுகள் சமாளிக்கத் திணறின. அத்தியாவசியத்திற்கே மிகுந்த பிரயத்தனம் தேவைப்படும்போது, இளைப்பாற எந்த செலவும் சாத்தியமில்லாமல் போனது.

இதன் அடுத்த கட்டம்தான் மனநலம் பாதிக்கப்படும் நிலை. பதட்டத்தில் ஆரம்பித்து, வெறுப்பில், விரக்தியில் தொடர்ந்து, எரிச்சலாய் வெளிப்பட்டு முடிவில் மனச்சோர்வில் முடியும். இந்த வாரத்திற்குப்பின் மனச்சோர்வின் அறிகுறிகள் தென்பட ஆரம்பிக்கும். அதனை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். மனச் சோர்வின் ஆரம்ப அறிகுறிகள் உறக்கம் கெடுதல், உணவுப் பழக்கத்தில் மாறுதல்,எதிலும் நாட்டமின்மை, கவனச்சிதறல், சோகமான மனநிலை, தனிமை நாடுதல், ஆரவம் இருந்த காரியங்களிலும் ஈடுபட முடியாத நிலை, பேசுவதும் பிறரிடம் தொடர்பு கொள்வதும் குறைதல். மெல்ல, மணிக்கொருமுறை செல்பேசியில் கணினியில் கொரோனா செய்தி தேடுவதும் குறைந்து விடும். வெளியிலிருந்து பார்ப்பவர்க்கு இது சோம்பல் போல் தெரியும். இவர்களை இதே மனச்சோர்வில் விட்டுவிட்டால் விளைவுகள் விபரீதமாகவும் முடியலாம். இப்படி யாராவது இருந்தால் அவர்களிடம் பேசுங்கள். வெட்டியாகவாவது பேசுங்கள். அறிவுரை ஆலோசனை என்றெல்லாம் ஆரம்பிக்காமல் அடுத்த வீட்டின் பூனை பற்றி கூட பேசுங்கள். அவர்கள் உங்கள் பேச்சை விரும்பாவிட்டாலும் பேசுங்கள். அந்நேரம் அவர்களது சோகம் எரிச்சலானாலும் அது அவர்களுக்கு உதவும்.

இது பற்றி நிறைய பேச வேண்டியிருக்கிறது. இதற்கான நேரம் வந்து விட்டது.

உளவியல் நிபுணர் Rk Rudhran

error: Content is protected !!